Monday, January 24, 2022

பாலைநிலத்தின் தியாகிகள்

 



அந்த ஆண்டு வசந்தகாலத்தின் வருகை மெதுவாக இருந்தது. பனி சியோக்ஸ் நிலத்தை இன்னும் போர்த்தியிருந்தது. பசியும் குளிரும்  மக்களை  வாட்டி வதைத்தது, 
புற்களுக்கும் உணவுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு மக்களும் விலங்குகளும் பசித்த வயிற்றுடன் இருந்தனர்.

ஆண்டின் இந்நேரத்தில் பனி விலகி இருக்க வேண்டுமே  என சின்ன இடி திகைப்புடன் கூறியது.

எருமை இறைச்சியை உலர வைத்துச் சேமிக்கப்படும் பெம்மிகன் எனும் மதிப்பான உணவின் இருப்பு தீர்ந்து போயிருந்தது.


யகரியின் சியோக்ஸ் இனத்தினர் எருமை மந்தையின் இப்போதைய இருப்பிடத்தை அறிந்து வர, சாம்பல் ஓநாய் எனும் வீரனை அனுப்பி விட்டு தற்போதைய முகாமை எருமை மந்தையின் அருகில் அமைக்கத் தீர்மானித்துக் கிளம்பினர்.

எருமை விதை சின்ன இடியின் மீது சவாரி செய்ய விரும்புகிறான். ஆனால் அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் சின்ன இடி அவனை தூக்கி எறிகிறது. வானவில் சின்ன இடியை புகழ்ந்து பாராட்டிப் பேசி சின்ன இடி மீது சவாரி செய்வதில் வெற்றி பெறுகிறாள்.

அப்போது எருமை மந்தையின் இருப்பிடத்தை தேடிச் சென்ற சாம்பல் ஓநாய் திரும்பி வருகிறான். அங்கிருந்து ஒருநாள் பயணத் தொலைவில் வளமான எருமைக்கூட்டம் இருப்பதாக தெரிவிக்கிறான்.




இனத்தின் தலைவர் எருமைகள் பெரும் ஆவிகளின் பரிசு என்றும், வகோண்டா  தன் பலத்தை மக்களுக்கு அளிக்க அவற்றை உருவாக்குவதாகவும் கூறுகிறார். அன்றிரவு துணிச்சல் மிக்க வீரர்கள் எருமைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக நடனம் ஆடுகிறார்கள்.

மறுநாள் வீரர்கள் எருமை வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். வானவில் யகரியை விறகு சேகரிக்க அழைக்கிறாள். 



அப்போது யகரியை சந்திக்கும் பெரும் கழுகார் இம்முறை குளிர்காலம் சியோக்ஸ்களுக்கு நீண்டதாகவும்,  எருமை வேட்டையர்களின் பாதை கடினமானதாகவும் இருக்கும் என தெரிவிக்கிறார். மேலும் விபரம் அறிய யகரி முயலும் போது, மணல்வெளியின் மத்தியில் மேற்கொண்டு பேசுவோம் என கூறிச்செல்கிறார்.

வானில் மேகங்கள் கறுப்பதைக் காணும் யகரி புயலின் ஆரம்பத்தை உணர்கிறான்.




 எருமை வேட்டையர்கள் சாம்பல் ஓநாயை பின்பற்றி  காற்றினூடாக எருமை மந்தை காணப்பட்ட இடத்தை வந்தடைகிறார்கள். அங்கே மந்தை காணப்படவில்லை , அவற்றின் தடங்களும் புயல் காற்றினால் துடைக்கப்பட்டுள்ளன.
அப்போது புயலும் மழையும் வலுக்கிறது. இடி ஒன்று மரத்தின் மீது விழுந்து பற்றி எரியச் செய்கிறது. 

வகோண்டா கோபமாக இருப்பதாகவும், வேட்டைக்கு இது உகந்த நேரமில்லை என்றும் வகோண்டா சாந்தமடையும் வரை மந்தையை தேடுவதை நிறுத்தி விட்டு இரவைக் கழிக்க பாதுகாப்பான இடத்தை கண்டறிய முடிவு செய்கின்றனர்.


அன்றைய இரவு முகாமில் இடியும் புயலும் சூழ்ந்திருந்தது. பயங்கரமான இடிச்சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்து விழித்தான் யகரி. அவனுக்கு, சின்ன இடிக்கு இது மிகவும் மோசமான இரவாக இருக்கும் என்ற  சிந்தனை எழுந்தது. 

புயலுக்கும் இடிக்கும் நடுவில் சின்ன இடி இருக்கும் குதிரைப்பட்டிக்குச் செல்கிறான்.


********



நீ மிகவும் பயந்து விட்டாயா சின்ன இடி?

நான் இது போன்ற ஒரு புயலைப் பார்த்ததில்லை.

என்னாச்சு?

அமைதிப்பாறையாரே! இடிச்சத்தம் உங்களையும் எழுப்பி விட்டதா?

வயது ஏறும்போது உறக்கம் விட்டுச்செல்கிறது.

புயலைக்கண்டு உங்களுக்கு அச்சமில்லையா?

வானமும் பூமியும் நமது நண்பர்கள் யகரி. 
 
ஆனாலும் நம் வேட்டை வீரர்களைப்பற்றி கவலையாக உள்ளது.


அவர்களின் கஷ்டங்கள் இரவோடு முடிவுக்கு வந்து விடும். அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இருள் வேட்டையர்களின் தற்காலிக தங்குமிடத்தை சூழ்ந்திருந்தது.

புயல் அமைதியடைந்து வருகிறது. இப்போது நீ தூங்க முடியும் யகரி.

நான் வளர்ந்த பின் ஒருபோதும் இடிக்குப் பயப்பட மாட்டேன்.



********


உறக்கத்தில் யகரி இரு பெரும் கொம்புகளிடையே சின்ன இடி மீது செல்வது போன்று கனவு கண்டான். தகிக்கும் பாலைநிலத்தைக் கடந்து எருமை மந்தையை அடைகிறான். ஒரு வெள்ளை எருமை நீரில் நனைவதைக் காண்கிறான். எருமை மந்தை அவனைப் பின்பற்றி வருவதையும் கண்டான்.

காட்டெருமைகள் தன்னை நசுக்கப் போகிறது என அஞ்சிய வேளையில் கனவு கலைந்து விழிக்கிறான்.


கனவில் எருமை மந்தையைக் கண்டதை தாயாரிடம் கூறுகிறான் யகரி. மொத்த பழங்குடியினரும் அதைப்பற்றியே சிந்திப்பதாகக் கூறுகிறார் தாயார்.


வேட்டையாட சென்றவர்களுக்கோ பாலைப்பகுதி வரை தேடியும் எருமை மந்தையின் தடங்கள் காணக் கிடைக்கவில்லை. இம் மர்மத்தை விளக்க வகோண்டாவிடம் முறையிட தீர்மானிக்கிறார் தலைவர்.



அங்கிருந்து வெகு தொலைவில்  வேட்டைக்குழுவை தேடி வரும் யகரி,  எருமை விதை,  வானவில் குழுவினர் ஒரு குன்றின் மீது ஏறி நோட்டமிடத் தீர்மானிக்கின்றனர். குன்றை முதலில் அடையும் போட்டியில் எருமை விதையின் குதிரை வெற்றி பெறுகிறது.  சின்ன இடியிடம் 'நீ இன்னும் வேகமாக சென்றிருக்க முடியும்' என யகரி கூறும்போது ' வானவில்லுக்காக விட்டுக் கொடுத்ததாக சின்ன இடி கூறுகிறது.


அங்கிருந்து வேட்டையர்களின் இருப்பிடம் தெரியவில்லை,  ஆனால் முந்தைய இரவில் தான் கனவில் கண்ட எருமைக்கொம்புகளை ஒத்த பாறைகளைக் காண்கிறான் யகரி. அவ்வழியே எருமை மந்தையை தேடிச்செல்ல தீர்மானிக்கிறான். அவனைப்போகவிட்டு எருமை விதையும் வானவில்லும் முகாம் திரும்புகின்றனர்.


கொம்புகள் போன்ற பாறைகளை தாண்டி பாலைவனம் விரிந்துள்ளது. எருமைகளைக் கொண்டு வர பாலைவனத்தை கடக்க தீர்மானிக்கிறான் யகரி. 'பாலைவனத்தில் எருமைகளா?'  என்ற கேள்விக்கு கனவில் அவற்றை அங்குதான் கண்டேன் என்கிறான். வழியில் ஓநாய் ஒன்றும் பாலைவனத்தின் பயங்கரத்தைப் பற்றி எச்சரிக்கிறது.  எனினும் மன உறுதியுடன் முன்னேறுகிறான் யகரி.



பாலைவனத்தின் வெப்பம் தகிக்கத் தொடங்குகிறது. இருவரும் தாகத்தால் சோர்ந்து நம்பிக்கை இழக்கும் வேளையில் பெரும் கழுகார் வந்து மன உறுதியை விட்டுக்கொடுக்க இது தருணமில்லை என தேற்றுகிறார். முன்னர் வாக்களித்தபடி மணல்வெளியின் மத்தியில் சந்திப்பதை உறுதிப்படுத்திய பெரும் கழுகார் அங்கிருந்த சப்பாத்திக்கள்ளியின் நீரை பருக சொல்கிறார். இருவரும் தாகம் தீர்த்தபின் யகரியின் சிரமங்கள் இன்னும் தீரவில்லை என்றும் மறுநாள் அவன் எருமை  மந்தையைக் காண்பான் என்றும் பாறைச்சுவர் மட்டுமே அவன் தவிர்க்க வேண்டியதென்றும் புதிராக கூறிச்செல்கிறார்.



மறுநாள் பயணத்தை தொடரும் யகரியும் சின்ன இடியும் வேலி போல் அமைந்த பெரும்  பாறைப்பகுதி ஒன்றை வந்தடைகின்றனர். கடந்து செல்ல வழி இல்லாத அந்தப் பாறைச்சுவர் ஏறிக் கடக்கவும் முடியாத அளவு உயரமாக உள்ளது. என்ன செய்வதென யோசிக்கும்போது,  சின்ன இடி 'எந்த வேலியிலும் ஒரு திறப்பு இருக்கும்.' என்கிறது. அப்போது பெரும் கழுகார் கூறியதன் அர்த்தத்தை உணரும் யகரி அந்தப் பாறைச்சுவரின் திறப்பை தேடி சுற்றி வருகிறான். ஓரிடத்தில் நீர்வீழ்ச்சியை காணும் இருவரும் நீர் அருந்தி களைப்பாறுகின்றனர். நீர்வீழ்ச்சியை சிந்தனையுடன் நோக்கும் யகரிக்கு தன் கனவில் வெள்ளை எருமை ஒன்று நீரில் நனைந்தவாறு காட்சியளித்தது நினைவுக்கு வருகிறது. அதன் மூலம் நீர்வீழ்ச்சியின் பின்னே பாதை இருப்பதை கண்டு பிடித்து பாறைச்சுவரின் உட்பகுதிக்குள் சின்ன இடியுடன் நுழைகிறான். அங்கே புல்வெளியையும் கொழுத்த எருமைக்கூட்டத்தையும் காண்கிறான். அவனது குலதெய்வம் அவன் எருமைகளை கண்டடைவதில் வெற்றி பெற்று விட்டதை அறிவிக்கிறது.




அப்போது எருமை ஒன்று யகரியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்க வருகிறது. ஆனால் வெள்ளை எருமை ஒன்றால் யகரி காப்பாற்றப்படுகிறான். 'அஞ்சாதே!  இங்கே பயப்பட ஏதுமில்லை' என யகரியை தேற்றும் வெள்ளை எருமையிடம் தன் மக்கள் பசியில் வாடுவதை தெரிவிக்கிறான் யகரி.


தங்களின் உணவுப்பற்றாக்குறை காலத்தில் புகலிடம் தரும் அந்த வளமான மறைவிடம் பற்றி வேறு எவரும் அறியக்கூடாது என கூறும் வெள்ளை எருமை, மக்களுக்கு தாங்கள் அவசியம் தேவை என்றும்,  நல்ல வேட்டையர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக கொல்ல மாட்டார்கள் என்றும் கூறுகிறது. பின்னர் தன் கூட்டத்தினரிடம்  வசந்தகாலம் துவங்கி விட்டதை யகரி நினைவூட்டியதையும் இயற்கையின் விதிகளை நீண்ட நாட்கள் புறக்கணிக்க முடியாது என்றும் கூறி அன்றே மந்தைக்கூட்டத்தை  பயணத்தை துவங்க உத்தரவிடுகிறது.

யகரி தன் கனவில் கண்டதுபோல் எருமை மந்தை அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.


யகரியும் வெள்ளை எருமையாரும் பிரியாவிடை பெரும் தருணம் உணர்ச்சிகள் நிறைந்தது. 

யகரி, நம் பாதைகள் இங்கே பிரிகின்றன.  உன் பழங்குடியினரிடம் திரும்பு.  எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கள் விதிக்குக் கீழ்ப்படிகிறோம்!


வருகிறேன் வெள்ளை எருமையாரே! 


வாழ்த்துகள்! தைரியமான  குட்டி சியோக்ஸ்!

( அமெரிக்கா ஆக்ரமிப்புக்குள்ளான போது வெள்ளை எருமையாரின் நம்பிக்கை பொய்த்துப் போனதுதான் வரலாறு. ஆக்ரமிப்பாளர்களின் நவீன ஆயுதங்கள் எருமை இனத்தை அழிவின் விளிம்பு வரை அருகச்செய்து அழித்தொழித்தன.)

வகோண்டாவின் பதிலுக்காக காத்திருந்த சியோக்ஸ் தலைவர் எருமை மந்தை வருவதைக் காண்கிறார். அந்தப் பரந்த புல்வெளியில் இயற்கையின் உணவுச்சங்கிலி இணைப்பு பெறுகிறது.



 முகாமுக்கு திரும்பும் யகரி விரைவில் மக்களின் பசி தீரும் என்று அறிவிக்கிறான்.


முற்றும்.

*******



அமெரிக்கக் காட்டெருது அல்லது அமெரிக்க பைசன் (American bison) எனப்படுவது 19ம் நூற்றாண்டுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் பெருந்தொகையில் காணப்பட்ட காட்டெருது இன விலங்கு ஆகும். அமெரிக்க முதற்குடி குழுக்கள் பலவற்றின் உணவு, பொருளாதார, ஆன்மீக மூலதாரமாக அமைந்த இந்த விலங்குகள் ஐரோப்பியரின் வருகையின் பின்பு அவர்களால் பெருந்தொகையில் வணிகத்துக்காக வேட்டையாடப்பட்டு இன அழிவின் நிலைக்குத் தள்ளப்பட்டன. அண்மைக் காலத்தில் இவை சில தேசியப் பூங்காக்களில் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டு வருகின்றன. இன்று ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய விலங்கு இதுவே ஆகும்.

அமெரிக்கக் காட்டெருதுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பிரெய்ரிப் புல்வெளி, மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மேலும் செங்குத்தாக அமையாத மலைப்பாங்கான பகுதிகளிலும் வாழ்கின்றன.



How! - வோ!
Squaw - 
அமெரிக்க செவ்விந்தியப் பெண், அமெரிக்க செவ்விந்திய வழக்கில் மனைவி .

Tipi- கூடாரம்

Coyote- சிறு வட அமெரிக்க ஓநாய் வகை





*****



No comments:

Post a Comment