Sunday, March 11, 2018

முதன் முதலாய் அம்மாவுக்கு...



 "பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே !
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே !
"





முதன் முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரம்தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே! 

காகிதத்தில் மகன் எழுத்து
காத்தெல்லாம் மகன் பாட்டு
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி பேசலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதியென்ன லாபமுன்னு
எழுதாமப் போனேனோ ? 

பொன்னையா தேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே,  

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு! 

கண்ணு காது மூக்கோட
கருப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையில
என்னென்ன நினைச்சிருப்ப ? 

கத்தி எடுப்பவனோ ?
களவாடப் பிறந்தவனோ ?
தரணியாள வந்திருக்கும் ?
தாசில்தார் இவன்தானோ ? 

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாம
நெஞ்சூட்டி வளத்த உன்னை
நினச்சா அழுகைவரும். 

கதகதண்ணு கழி கிண்டி
கழிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ணெய்
கலந்து தருவாயே... 
தொண்டையில அதுயிறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா! 

கொத்தமல்லி வறுத்து வச்சிக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறுமிளகும்
சேர்த்து வச்சு நீர் தெளிச்சு
கும்மி அரச்சு நீ
குழகுழன்னு வழிக்கையில
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மணமணக்கும். 

தித்திக்க சமைச்சாலும்
திட்டிக்கிட்டே சமைச்சாலும்
கத்திரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்.

கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊரும்.

வறுமையில நாமபட்ட
வலி தாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன் ! 

பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே !
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே ! 

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கயில
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே...

அஞ்சாறு வருசம் உன்
ஆசை முகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே.

படிப்பு படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே ! 

பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்தமாயிருச்சே ! 

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியா கூட்டி வந்து
கரை சேத்து விட்டவளே,

எனக்கொன்னு ஆனதுன்னா
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா ?
.............................................. வைரமுத்து

★*******★*******★*****★******★******★


‘‘பாபாவில் உங்களுக்குப் பிடித்த பாட்டு?’’
‘‘எல்லாப் பாட்டும் பிடிக்கும். அதில் இடம்பெறாத பாடல்களில் ஒன்று ரொம்பப் பிடிக்கும். பாபா மூட்டை சுமக்கும்போது தாய் சுஜாதாவின் கண்ணில் கண்ணீர் வழியச் செய்யும் பாட்டு, இப்படி மலர்ந்து மலர்ந்து எனக்கு உள்ளேயே உலர்ந்துபோன பூக்கள் ஓராயிரம்…


 கண்ணுக்கினிய மகனே!
உன்னை
கருவில் சுமந்தேன் மகனே!

கருவறை கழிந்து விழுந்த பின்னே
கையில் சுமந்தேன் மகனே!

மார்பில் தாய்ப்பால் பருகும்போது
மடியில் சுமந்தேன்
மகனே!

தூங்கும்போதும்
ஏங்கும்போதும்
தோளில் சுமந்தேன் மகனே!

கையை மீறி வளர்ந்தபோது
கண்ணில் சுமந்தேன் மகனே!

நெஞ்சு தானாய் நிற்கும் வரைக்கும்
நெஞ்சில் சுமப்பேன் மகனே!

சுமக்கப் பிறந்தவள் நான் தானே – நீ
சுமந்து அலைவது ஏன் மகனே!

மூட்டை சுமக்கும் கூலியல்ல – நீ
நாட்டைச் சுமக்கப் பிறந்தவனே.

................வைரமுத்து

***★****★****★****★****★*****★*****★****★****★****

ஒரு காலத்தில் ஒரு குளம் இருந்தது ...

தண்ணி பெருத்த குளம்
தாமரை பூத்த குளம்
ஊருக்குத் தெம்பக்கம் 
ஒருக்களிச்சுப் படுத்த குளம். 

உள்காட்டு மூலையில 
ஊர் பொறந்த வேளையில
கர்ண மகராசா 
கரையெடுத்து வைச்ச குளம்.

மழையோட நீர் வாங்கி
மண்ணோட நிறம் வாங்கி
செந்தண்ணியானாலும்
சீனித்தண்ணியான குளம்.

சாலி மரமிரண்டு 
தண்ணியெல்லாம் நிழல் பரப்பி
கரையோரம் குடை பிடிச்சு
காவலுக்கு நின்ன குளம்.

காடுகரை போனவர்க்கும் 
காக்கை குருவிகட்கும்
ஆடுமாடு அத்தனைக்கும்
அனுசரணையான குளம்.

ஐப்பசி கார்த்திகையில் 
அடைமழைய உள்வாங்கி
நெறமாசப் பொம்பளையா
நெறப்பெருக்கா நின்ன குளம்.

வாழ்ந்து கெட்ட சீமாட்டி
வளவி மட்டும் போட்டது போல்
கோடையிலும் குடிதண்ணி
கொஞ்சூண்டு வைச்ச குளம்.

சித்திரையில் சிலுசிலுக்க
மார்கழியில் கதகதக்க
மாயமோ மந்திரமோ
மந்திரிச்சு விட்ட குளம்.

தவக்கா சத்தமிட 
சரஞ்சரமா கொக்கு வர
சொட்டை வாளை மீன் தவ்வ
சுறுசுறுப்பா இருந்த குளம்.

பொசுக்குன்னு துணி மாத்தி
விசுக்குன்னு கரையேற
ஆம்பளைய பொம்பளைய
அரைகுறையா பார்த்த குளம்.

தாகமுன்னு வந்தாலும்
தற்கொலைக்கு வந்தாலும்
வாங்க மக்கா வாங்க மக்கா
வாய் நிறைய சொன்ன குளம்.

மாரோட புள்ளை கட்டி
வயிறோட கல்லு கட்டி 
செவனம்மா பொணமாக
செத்து மெதந்த குளம்.

மனுஷப்பய கூடி 
மண்ணை ஏமாத்த
மழையெல்லாம் கூடி 
மனுஷனை ஏமாத்த

இன்னிக்குத் தேதிக்கு
இல்லேன்னு போன குளம்.
என்னைக்கு நெனைச்சாலும்
என் கண்ணுல உப்புக்குளம்.

.......................வைரமுத்து

★★★★★

இதயத்தில் என்னென்ன வேட்கை
இது இடைவேளை இல்லாத வாழ்க்கை
வாழ்வோடு போராட்டம் இங்கே - இதில்
வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே?

....................வைரமுத்து

No comments:

Post a Comment