Tuesday, April 16, 2024

போர்குரோல்ஸ் தீவு மர்மம்!

 


லா ரஃபேல்* பத்திரிகை நிருபர் ஜானியின் சக ஊழியரும் நண்பருமான பாப் ட்ரூமண்ட், அலுவலகப் பணியாக போர்குரோல்ஸ்*  தீவுக்கு சென்றபோது காணாமல் போகிறார். அவரைப்பற்றி கவலைப்படும் லா ரஃபேல் பத்திரிகையின் ஆசிரியர்
சிறப்பு நிருபர் ஜானியை பாப் ட்ரூமண்டை கண்டு பிடிக்க போர்குரோல்ஸ் தீவுக்கு அனுப்புகிறார்.

தீவில் ஜானியின் விசாரணைகள் அவருக்கு மரண ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.

அவற்றிலிருந்து தப்பிக்கும் ஜானி தான் இறந்து விட்டதாக நாடகமாடி,  மாறுவேடம் பூண்டு, கமிஷனர் போர்டனின் உதவியோடு எதிரிகளிடையே துப்பறிந்து பாப் ட்ரூமண்டை மீட்பதோடு, அனைத்துக்கும் காரணமான ஓவிய திருட்டையும் வெளிப்படுத்துகிறார்.

அழகான சித்திரங்கள், சில மர்ம சம்பவங்களுடன் விறுவிறுப்பு அதிகமில்லாத சுமாரான கதை! 



*La rafale என்ற
பிரெஞ்சு சொல்லுக்கு தமிழில் காற்று எனவும், .
ஆங்கிலத்தில்
The gust எனவும் பொருள்படுகிறது.

gust என்றால் பலத்த காற்று என்றும் வெடிப்பு என்றும் அர்த்தங்கள் கிடைக்கின்றன.

a destructive wave of highly compressed air spreading outward from an explosion

"வெடிப்பிலிருந்து வெளியே பரவும் அதிக அழுத்தப்பட்ட காற்றின் அழிவு அலை என பொருள்படும்."

La rafale என்னும் பத்திரிகை பெயருக்கு வெடிகுண்டின் விளைவுபோல வீரியமிக்க செய்திகள் வெளியிடும் பத்திரிகை என அர்த்தம் கொள்ளலாம்.

*பிரெஞ்சுக்காரர்கள் போர்குரோல்ஸ் தீவை 'மிதக்கும் காடு' என்று வர்ணிக்கின்றனர், அதன் மேற்பரப்பில் ஆலிவ் தோப்புகளும் திராட்சைத் தோட்டங்களும் உள்ளன. நகரத்தில் உல்லாசமாக உலவவும், தெளிவான கடல் நீரில் நீந்தி மகிழவும், கடற்கரையின் நிழற் பகுதிகளில் ஒரு அழகிய சுற்றுலாவை அனுபவிக்கவும், இந்த அழகான பிரெஞ்சுத் தீவில் அனைவருக்கும் ஏதாவது இருக்கிறது. 

 

Saturday, March 30, 2024

நம்பிக்கை வரிகள்!




 கூட்டுப்புழுவாக இருக்கும்போது,

அவமானத்தில் குறுகிப்போய் விடக்கூடாது.

அது, "காலம் நமக்கு சிறகு தயாரிக்கும் நேரம்"

என்பதை பட்டாம்பூச்சிகளே சொல்லும்.

#இயக்குனர் சேரன்



அமைதி என்பது உரையாடலின் ஒரு சிறந்த கலை.

Friday, March 8, 2024

உன்னைப்போல் செல்வனை நான்...

 



காற்றொரு பாட்டுப் பாட
 ககனமே விளக்கம் ஏந்த
 ஊற்றென நிலவின் சாறு
 உள்ளொளி பொங்கிப் பாய
 நூற்றிலோர் பூவைப் போல
 நுவலரும் முகத்தைக் காட்டி
ஆற்றல்சால் மைந்தன் தன்னை
அணைத்திருந்தனளே அன்னை! 

துல்லிய பட்டுப் போன்ற 
தூயவள் மரியாள் கையில் 
மெல்லிய பாலன் இயேசு 
விளக்கெனப் புன்னகைத்தான்
நல்லவர் உள்ளம் போல 
நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாதவாறு 
இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும்
மாணிக்கத் தொட்டில் தோற்கும்
 தூளி இல்லாத போதும் 
தூங்கினான் பாலன் இயேசு
 "வாழிய!" என்றார் தூதர் 
வணங்கியே நின்றார் ஆயர்! 
நாழிகை செல்லச் செல்ல 
நல்லொளி மேலும் பல்கும்!  

சோதிமணிப் பெட்டகமே 
சுடரொளியே யூதருக்கு
ஆதிமகனாய்ப் பிறந்த
அருந்தவமே தாலேலோ!

வானளந்த திருக்குமரா! 
மனிதகுல மருத்துவனே! 
தேனமுதத் திருவாயில்
சித்திரங்கள் தீட்ட வந்தாய்!

பல்லாண்டு பல்லாண்டு
பாலைவனம் போலிருந்து 
எல்லாமும் இழந்து வரும்
இஸ்ரேலை வாழ வைப்பாய்!

அந்நாளில் நூலோர்கள்
ஆன்றோர்கள் பெரியோர்கள் 
சொன்னபடி மீட்பதற்குத்
தோன்றி வந்தாய் தாலேலோ!

மாளிகையும் இல்லைகாண்
மஞ்சமில்லை என்றாலும்
ஏழைத் தொழுவில் வந்த
இறைமகனே தாலேலோ! 

இன்னின்ன காலமெல்லாம்
இவ்வாறு நடக்குமென
சொன்ன இறை வாக்கினர்க்குத்
தொடர்பான உதாரணமே!

தச்சனுக்குப் பிள்ளையென்றும்
தாயொருத்தி கன்னியென்றும் 
இச்சனங்கள் சொன்னாலும்
இறைவனது திருக்குமரா!

மாரியிலே மழை பொழிந்து
மக்களினம் வாழ வைக்கும் 
காரியம் போல் உன் தந்தை
காலத்தே அனுப்பி வைத்தார்

உன்னைப் போல் செல்வனை நான்
உலகெங்கும் கண்டதில்லை 
என்னைப்போல் ஏழையை நீ
எங்கேனும் கண்டதுண்டா?

போட்ட விதைமுளைக்கும்
பொன்னான பூமியிலே 
வாட்டமில்லாப் பயிராக
வந்து விளைந்தவனே!

நல்ல குறிகளெல்லாம்
நான் பார்க்கத் தோணுதையா
வல்லவராம் உன் தந்தை
மனதிலென்ன வைத்தாரோ!

காட்டுவழி போனாலும்
கள்ளர் பயம் ஆனாலும் 
கூட்டம் உனைத் தொடரும்
கோமகனே தாலேலோ!

ஆகாயப் பந்தலிலே
ஆயிரம் பேர் சுற்றி வந்து 
வாகான சீரளித்த
வரமே மணிமகனே!

மாணிக்கத் தொட்டிலுக்கு
வாய்க்காத பெருமையெல்லாம் 
ஆநிரைத் தொழுவினுக்கு
ஆரளித்தார் எங்கோவே!

எவ்விடத்தில் பிறந்தாலும்
எப்படித்தான் வாழ்ந்தாலும்
செவ்வானத் திருக்குமரன்
தேசமெல்லாம் புகழ்பெறுவான்  

நம்பிக்கை விசுவாசம்
நான் வைத்து இருப்பது போல் 
நம்பி உனைத் தொடர்வோர்
நாளெலாம் பெருகுவரே!

அன்பில் பிறந்தவனே
அருமைத் திருமகனே! 
என் வீட்டுப் பேரொளியை
ஏற்ற வந்த திருவிளக்கே!

இன்பத் திருநாளே
இஸ்ரயேலில் வரும் வரைக்கும் 
கண்மூடித் தூங்கிடுவாய்
காலமுந்தன் கையினிலே!  

#இயேசு காவியம்
#கவியரசு கண்ணதாசன் 
 

Monday, March 4, 2024

எனக்காகப் பிறந்தவளை...

 



எனக்காகப் பிறந்தவளை

கண்டு பிடித்தேன்.

அவள் கண்ணசைவில்

ஒருகோடி கவிதை படித்தேன்.


என் பாதி எங்கே என்று

தேடி அலைந்தேன்.

அவளைப் பார்த்த பின்புதான்

நான் முழுமை அடைந்தேன்.

ஈருயிர் ஒன்றாய் - இனி 

அவள்தான் என் தாய்.


வேப்பம்பூ உதிர்கின்ற

என் வீட்டு முற்றம் - அவள் 

போடும் கோலத்தால்

அழகாய் மாறும்.


விண்மீன்கள் வந்து போகும்

மொட்டைமாடி - அவள்

கொலுசின் ஓசையினால்

சொர்க்கம் ஆகும்.


காற்று வந்து கதை பேசும்

கொடிக்கயிற்றில் - அவள்

புடவை அன்றாடம்

கூட்டம் போடும்.


காத்திருப்பாள் ஒருத்தி

என்ற நினைவு வந்து,

மனம் கடிகார முள்மீது

ஆட்டம் போடும்.


பாதரசம் உதிர்கின்ற

கண்ணாடி மேல்,

புதிதாக பொட்டு வந்து

ஒட்டிக் கொள்ளும்.


பழைய ரசம் - அவள் 

கையால் பறிமாறினால்,

பழரசமாய் இனிக்கிறதென

பொய்கள் சொல்லும்.


பூக்கடைக்குப் போகாத

கால்கள் இரண்டும்

புதுப்பழக்கம் பார் - என்று

திட்டிச் செல்லும்.


ஆண்களுக்கும் வெட்கம்

வரும் தருணம் உண்டு - என்று

ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்.


#நா.முத்துக்குமார் 


Sunday, March 3, 2024

அணையா விளக்காட்டம்...

 


அணையா விளக்காட்டம்

அழகே நீ விழிச்சிருக்க,

துணையா தாயிருக்கா

தொந்தரவு வெளங்காம...


மேக இமை மூடியதால்

மேல் நிலவு தூங்கிருச்சு,

மோகமெனை வாட்டுதடி

மோகனமே தூங்காயோ...


உன் பசியை தீர்த்துக்கிட்டு

உறங்காம நீயிருந்தா,

என் பசிக்கு விருந்தேது

என்ன சொல்லி வருந்துவது...


கண்ணுறங்கு கண்மணியே

காலையிலே வெள்ளி வரும்,

இன்னும் நீ விழிச்சிருந்தா

இரவுக்கே கோபம் வரும்...


செல்லக்கிளி நீயுறங்கி

செண்பகத்த அனுப்பி வையி, 

உள்ளபடி சொன்னா

உனக்கு ஒரு சொந்தம் வரும்.


************************************


தவமாய் தவமிருந்து

தரை மெழுகி கோலமிட்டு

வரமாய் பெற்ற மவன்

வாளெடுத்து வாராயோ!


கரடி உறங்கும் வனம்

காட்டானை தூங்கும் வனம்

கண்ணே நீ கடப்பாயோ

காடெல்லாம் சாய்ப்பாயோ!


சூரிய நதியோரம்

சொர்க்கமின்னும் போகையில

சுருட்டிப் பிடித்திழுக்கும்

சோம்பேறி முதலைகளாம்! 


காடை கடக்கையில

கால் நோக நடக்கையில

கொத்தி விஷம் கொடுக்கும்

குணமில்லா வவ்வாலாம்!


மலை மேலே பசு மேய

மகிழம்பூ பாய் விரிக்க

மழை தங்கா பாறையிலே

மேல் உச்சி போவாயோ!


காக்கை விதை போட்டு

கால் பரப்பி வளர்ந்த மரம்

நீக்கி பார்ப்பாயோ

நீண்ட வழி காண்பாயோ!


கருவுக்குள் உரு போல 

கண் மூடித் தவழ்வாயோ

கட்டை விரல் நனைய

காலாலே நடப்பாயோ!


புத்தி சொன்ன மகன்

புடம் போட்ட தங்க மகன்

புவியெங்கும் புகழ் பாடும்

பொன்னான புத்தமகன்!


ரெட்டைக்குகை புரிந்து

றெக்கை அடிப்பாயோ

ராஜன் தலை சுமந்த

ரத்தினத்தை காண்பாயோ!


தவமாய் தவமிருந்து

தரை மெழுகி கோலமிட்டு

வரமாய் பெற்ற மவன்

வாளெடுத்து வாராயோ! 


*************************************


உளி பொளிந்து

சிதைப்பதால்தான்

சிற்பம் சிறக்கிறது.

இலையுதிர்த்த 

மரங்களில்தான்

வசந்தம் பிறக்கிறது.

இழந்து பெறும்

வாழ்க்கையிலும்

ஏதோ சுகமொன்று

 இருக்கிறது.


*************************************




நயனம் நிமிர்ந்து நீ

நோக்கிடும் திசைகளில்

பயணம் உன்னுடன்

பாதைகள் எங்கிலும்

என்றவன் சென்றபின்

என்னவோர் வாழ்வது? 


பாதையில் நடக்கையில்

பாதியில் மழைவர

நாதமாய் நடந்தவன்

நிழலென மறையலாம்.

சென்றதை நினைவினில்

தேக்கியே தவித்திடல்

என்னதான் பயன் தரும்

எடுத்தெறி இன்றுடன்.

என் குடை விரித்து நான்

எங்குமே துணைவர

என்னுடன் தொடங்கிடேன் 

இன்னுமோர் பயணமே! 



************************************

#இளவயதில் மாத நாவல்களில் வாசித்து மனதில் பதிந்து விட்ட வரிகள்.


Friday, March 1, 2024

ஆரோ! ஆரிரரோ!



ஆரோ!
ஆரிரரோ!
ஆரமுதே!
ஆராரோ!

உலக உருண்டைக்குள் -
உதிப்பாரும் உதிர்வாரும்
உனக்கிணையாய் ஆவாரோ? 
ஈச்சம் பழச்சாற்றை -
ஈரிதழில் ஈவாரோ?

ஊரார் 
உளமெல்லாம் - வேலின்
கூரார் விழியழகால் 
களவாடிப் போவாரோ?
உறுகண் 
உறுகண் கண்டால் -
உன்போல் 
உடன் வந்து காவாரோ?

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

செயிர்கடைந்து கண்விழிகள் சிவப்பேறக் கனகனவன் -
உயிர் கடைந்து கோளரியாய் உறுமியவா! கேழ்வரகுப் - 
பயிர் கடைந்து குருவியெலாம் பசியாறும் கோகுலத்தில் - 
தயிர் கடைந்து பிழைக்கின்ற தனிக்குலத்தில் பிறந்தாயோ!

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ! 

தருப்பை விரலிடுக்கித் 
தவ வேள்வி வேட்பதற்கு -
நெருப்பை வளர்ப்போரும்
நெடுநாளாய் உன்னுடைய
இருப்பைத் தேர்ந்தாலும்
இருப்பிடத்தைத் தேடுகையில் -
கருப்பை குடிபுகுந்து 
கவுரவத்தைக் கொடுத்தவனே!

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ !

அழுக்கு நிலா என்றாலும்; 
அமுதத்தை எல்லியெலாம் 
ஒழுக்கு நிலா என்றாலும்; 
ஒரு நாள்தான் வாராமல் 
வழுக்கு நிலா என்றாலும்; 
வரதா! உன் வனப்பின் முன் 
இழுக்கு நிலா என்றாகி 
எழிலியிலே ஒளியாதோ?

ஆரோ!
 ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

கண்ணழகன் என்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணனையன் என்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணிறைந்து காண்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணெடுத்துக் காண்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்!

ஆரோ ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

ஏடு மேய்ப்பதற்கு 
எழுத்தறிவு பூத்திருக்க; 
நாடு மேய்ப்பதற்கு 
நாற்காலி காத்திருக்க; 
வீடு மேய்ப்பதற்கு 
வைகுந்தம் வாய்த்திருக்க; 
மாடு மேய்ப்பதற்கு 
மனமிரங்கி வந்தாயோ?

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

#ஸ்ரீ கிருஷ்ண விஜயம்
#கவிஞர் வாலி