ஒவ்வொரு ஊரிலும் மனவளர்ச்சி குன்றிய பரிதாபத்திற்குரிய மனிதர்கள் இருப்பார்கள். ஊரார் ஏவும் எளிய வேலைகளை செய்து அவர்கள் அளிக்கும் உணவை உண்டு ஜீவிக்கும் கடவுளின் கைவேலை பிசகிய மண் பாத்திரங்கள்.
ஸ்டெபனோவா நகரத்தின் பரிதாப ஆத்மாவான ஜானோஸ் தான் சார்ந்திருந்த ஜனங்களிடம் அனுபவித்ததெல்லாம் கேலி, கிண்டலும் உடல் ரீதியான இம்சைகளையுமே.
உச்சகட்டமாக, ஜானோஸ் விபத்தால் கால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவனுடைய சகோதரனான அந்நகர மேயர் ஜானோஸுக்கு இரவுக்காவல் பணியை அளிக்கிறார். தன் கால்வலி பற்றிய ஜானோஸின் முறையீடு கற்பாறையில் விழுந்த விதைக்கு ஒப்பாகிறது.
பின் வந்த இரவுகளில் ஸ்டெபனோவா நகர வீதிகளில் ஜானோஸ் தன் காலை இழுத்து நடக்கும் சத்தமும் அவனது நள்ளிரவு நேரம் அறிவிக்கும் குரலும் வருடங்களாக ஒலித்துக் கொண்டிருந்தது.
அவனது காவற்பணி நகர மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது.
எந்நிகழ்விலும் சலனமின்றி தன்னோட்டத்தில் விரையும் காலம் ஒருநாள் ஜானோஸை அழைத்துக்கொண்டது.
அவனது சகோதரனான மேயரோ ஜானோஸுக்கு தன் குடும்பக் கல்லறையில் அமைதியாகத் துயிலும் வாய்ப்பையும் அளிக்கவில்லை. ஒரு நாயினும் கேவலமாக எண்ணப்பட்டு எங்கோ ஒரு மூலையில் அவன் புதைக்கப்பட்டான்.
ஆனால் அன்றிரவே ஜானோஸின் ஆன்மா தன் காவற்பணியை மீண்டும் துவங்கியது.
மன அமைதி இழந்த பொது ஜனங்களின் வேண்டுகோள்கள் பயனற்றுப் போயின.
இறுதியில் ஜானோஸின் ஆன்மாவை அமைதி கொள்ளச் செய்தது ஒரு சிறுவனின் இரக்கமான வார்த்தைகளும், சில கண்ணீர்த்துளிகளும்...
*****