Friday, October 20, 2017

சொல்லில் குற்றமா? பொருளில் குற்றமா?

வென்டெட்டாவில் வெளியான மொழிபெயர்ப்புக்குறிப்புகளை பின்பற்றி மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதை "மெர்லினின் மந்திர டைரி "

இதன் ஒவ்வொரு கட்டமும் வசனங்கள் சரியாக அமைய வேண்டும் என்று கவனத்துடன்  செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தின் வசனம் தமிழில் அமைக்க கடினமாக இருந்தபோது, உதவி கேட்டுப் பெற்று சரியாக அமைக்கப்பட்டது.



கதையில் உதவிக்குறிப்புகள் தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிலும் ஒரு புதுமையாக, அடிக்குறிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்திலும் அதற்கான நட்சத்திரக்குறி அதே நிறத்திலும்  வழங்கப்பட்டுள்ளது.  வித்தியாசமாக சிந்தித்து செயல்படுத்திய மொழிபெயர்ப்பாளருக்கு பாராட்டுகள். 👏👏👏

மொழிபெயர்ப்பு புத்தகம்  சரியாக அமைய வேண்டும் என்பதற்காக  மீண்டும் மீண்டும் மாற்றங்கள் சொன்னபோதும் சளைக்காமல் ஈடு கொடுத்த அந்த ஆர்வத்தை இந்நாட்களில் காண்பது அரிது.

கதையின் வாசிப்பில்   எழுத்துப்பிழைகளோ கருத்துப்பிழைகளோ இடறி விடாமல் கவனத்துடன் முயற்சி எடுத்து செய்யப்பட்டுள்ளது. மீறி ஏதேனும் சொற்குற்றமோ?  பொருட்குற்றமோ?   தென்பட்டால் எமக்கு அறிய தாருங்கள். திருத்திக்கொள்ள முயல்கிறோம்.🙏

Thursday, October 19, 2017

கற்றுக் கொண்டால் குற்றமில்லை...

சென்ற பதிவின் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ள மொழிபெயர்ப்பு முறைகளில் மூன்றாவதை முயற்சித்துள்ளதாக ஹோம்ப்ரேயின் மொழிபெயர்ப்பாளர் கூறியபோது,
ஹோம்ப்ரே ஐ இன்னும் சிறப்பான தரத்தில் எதிர்பார்த்தேன். வாசித்தபின் சிறிது ஏமாற்றம் தான்.



வசனங்களை தமிழுக்கு ஏற்றபடி அமைப்பதிலும், அர்த்தங்கள் மாறிவிடாமல் மொழிமாற்றுவதிலும்   ஒரிஜினலில் இல்லாதவற்றை திணிக்காமல் இருப்பதிலும் இன்னும் அதிக கவனம் தேவை.




Hombre ஹம்பர் இல்லை, ஹோம்ப்ரே!

பொதுவாக ஒரு ஆணை குறிக்கும் ஸ்பானிய வார்த்தை! (நன்றி ஒரு நண்பருக்கு)



இன்னொரு விஷயம்,  வசனங்களை சீராக அமைப்பது.  முதல் பக்க வரிகள் சீராக அமைக்கப்படவில்லை என்பதை மீண்டும் வாசித்துப்பார்த்தால் தெரியும்.




👆இதில் விலங்கு  மிருகம் என்ற அர்த்தம்  வரவில்லை அல்லவா? வசனத்தின் முழு அர்த்தத்தை தமிழில் அமைக்க முயற்சி செய்யுங்கள்.






இங்கும் மிருகம்  என்பது சேர்க்கப்படவில்லை! ஒரு கட்டம் என்ன உணர்ச்சிகளுடன் விவரிக்கப்படுகிறதோ  அதை அர்த்தம் சிதையாமல் உணர்வுகள் மாறாமல் கொண்டுவர முயல வேண்டும்.





இதை "இங்க பாருங்கப்பா அந்த பன்னி காயப்பட்டுருக்கான்! ரொம்ப ரத்த சேதம்.  "

என்று அர்த்தம் சரியாக வரும்படி அமைக்கலாம்.  திறமையான மொழிபெயர்ப்பாளரால் இன்னும் மேம்படுத்தவும் முடியும் .




வார்த்தைகளில் விரசம் இருந்தால் கூட அர்த்தம் சிதையாமல் அதே நேரம் தமிழுக்கு ஏற்றபடி சற்று நாசூக்காக அமைக்கலாம்.

உதாரணமாக : மார்பை சப்பக் குடு என்பதை  "உன்னோட பாலை குடு " என்று அந்த வசனம் சொல்ல வருவது மாறி விடாமல் முயற்சிக்கலாம்.

இன்னும் ஒவ்வொரு கட்டமாக கவனித்து செய்திருக்க வேண்டிய விஷயங்களை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.   நீங்கள் கவனம் கொள்ள தவறிய விஷயங்களை புரிந்து கொள்ள இதுவே போதும் என நினைக்கிறேன்

முடிந்தவரை சிறப்பாக கொண்டு வர முயற்சி செய்துள்ளீர்கள்.

இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.




மொழிபெயர்த்தவர் ஒரிஜினல்படி காலியாக விட்ட இடத்தில் லெட்டரிங் செய்தவர் தன் "திறமையை" காட்டியுள்ளார்! இது சரியல்ல.

லெட்டரிங் செய்பவரின்  பொறுப்பு தனக்கு தரப்பட்ட மொழிபெயர்ப்பை அப்படியே வசனங்களில் சேர்த்து விடுவது மட்டுமே. அப்படியே  வசனங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்று தோன்றினால் மொழிபெயர்ப்பாளரிடம் விவாதித்து அவரது அனுமதி பெற்று  செய்யலாம்.


ஒரு கதையை நீங்கள் மொழிபெயர்த்தால் அது தரமாக வெளியாவதன் முழுப் பொறுப்பும் உங்களையே சேரும்.
உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் மொழிபெயர்ப்பில் ஒரு எழுத்தையோ, புள்ளியையோ கூட மாற்ற அனுமதிக்காதீர்கள்.

பலூனில் வசனம் போடப்பட்ட பின் அனைத்தும் சரியாக வந்துள்ளதா?  எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் உள்ளனவா என சரி பார்த்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து அதன்பிறகே வெளியிட அனுமதிக்க வேண்டும்.

நண்பர் இலுமியின் கருத்துகள் இங்கே மிகப் பொருத்தமாக அமைகிறது.

////ஒரு விஷயத்தை பொறுப்பெடுத்து நாம் செய்ய நினைக்கும் போது அதை பலரும் பல விதங்களில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைக்கவே முயற்சிப்பார்கள். அது மனித இயல்பு.
 அதை நடைமுறைப்படுத்த விட்டோம் என்றால் அது நம் தவறே அன்றி அவர்களுடையதல்ல.

 ஒரு மொழிபெயர்ப்பாளனின் பொறுப்பு இவ்விஷயங்களில் லெட்டரிங் செய்யும் ஆட்களின் பொறுப்பையும், ஆசையையும் விட பெரியது. ஒரு கதையை அதன் ஜீவனைக் கெடுக்காது கொடுக்க வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு. மற்றவர்களுடையதல்ல.

அந்த வகையில், உருப்படியான,  மொழிபெயர்ப்பை முன்னேற்றக் கூடிய ஆலோசனைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் என்பதற்காக எல்லாம் கதையை  காவு கொடுக்க முடியாது.

 மொழிபெயர்ப்பை பொறுத்த வரையில் முடிந்த அளவுக்கு சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உருப்படியான ஆலோசனைகளை தேடிப் பெறுங்கள். ஆனால் இது போன்ற திணித்தல் விஷயங்களில் உறுதியாக இருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் மற்றவர்கள் இடம் எடுக்கத் தான் செய்வார்கள்.

மொழிபெயர்ப்பில் அர்த்தத்தை சரியாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நம் சொந்த சரக்கை திணிக்க மொழிபெயர்ப்பு சரியான இடமல்ல.  நம் சொந்த சரக்கை காட்ட வேண்டும் என்றால் நாம் கதை அல்லது கவிதை எழுதிப் பழகலாம். விஜயனைப் போல அடுத்தவர் கதையில் கை வைக்கக் கூடாது.

 மொழிபெயர்ப்பு செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது என்றால் சில காலம் கிடப்பில் போட்டு விட்டு பின்னர் ஆர்வம் இருக்கும் போது செய்யுங்கள்.  ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று அவசர இலக்கு வைத்துக் கொண்டு அதை மனதில் வைத்து செய்தால் அது உங்கள் ஆர்வத்தையும் திறனையும் பாதிக்கும்.

இவ்வளவு மெனக்கெட்டு இங்கேயுள்ள அரைகுறைப் புரிதல் உள்ள ஆட்களுக்கு செய்ய வேண்டுமா, பேசாமல் அரைகுறையாகவே செய்து விட்டுப் போகலாமே என்ற எண்ணம் சில நேரங்களில் வரலாம். அதில் தவறில்லை. நீங்கள்
 எவ்வளவு முயற்சி செய்து செய்தாலும் இங்கே பெரிதாக நன்றியோ பாராட்டோ கிடைக்கப் போவதில்லை. அதனால் அதை எதிர்பார்த்து எதையும் செய்ய வேண்டாம்.

 இந்த உறுதி, தரம் மற்றவர்களுக்கானதல்ல, நமக்கானது, நாம்  செய்யும் கதைக்கானது. பனிஷர் செய்த போது வசனங்களை தமிழுக்கு ஏற்ப மாற்றிய போது அதன் அர்த்தமோ, ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணமோ கெடாத வகையில் தான் செய்தேன். இவ்வாறு செய்வது எளிதல்ல. ஆனால் இது தான் தகுந்த முறை.

   ஒரு காமிக்ஸ்  குழுவில் வெண்டெட்டாவில் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த பதில்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அவர்களின் மொழிபெயர்ப்பில் தரம் ஏன் இருப்பதில்லை என்று.
அந்தக் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக நாமும் இருக்க வேண்டாம். நம்மைப் பார்த்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சிலர் ஆசைப்படும் அளவுக்கு நம்முடைய மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.  இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதற்கான ஒரே பலன் உங்களைப் போல, மெர்லின் செய்தவரை போல சிலர் உண்மையை உணர்ந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதில் தான் இருக்கிறது.

 நமக்கு பிடித்தவற்றை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நாம் அனைவருமே இதை செய்கிறோம். இதில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிதாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால் இன்றைக்கு முன்னோடிகளான நாம் சரியாக செய்யாவிட்டால், பின்னர் தமிழ் வாசக மொழிபெயர்ப்பு இன்று இருக்கும் நிலையில் தான் இருக்கும். கொள்கை இல்லாது, குறிக்கோள் இல்லாது, காரணம் இல்லாது, தரம் இல்லாது கும்பல் சேர்த்து பொழுது போக்கிற்காக மொக்கை போடும் மோசமான மொழிபெயர்பிற்கு சரியான வரவேற்பில்லை என்று புலம்ப மட்டுமே உபயோகப்படும் ஒரு ஜந்துவாக.

 உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு செய்யுங்கள். ஆனால் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்ய வேண்டாம். ////
By illuminati blog tamil