யகரி தைரியமும் தாராள குணமும் கொண்ட இளம் செவ்விந்திய வீரன்.
'சின்ன இடி' அவனுடைய விசுவாசமான குதிரை, அவனுடைய சியோக்ஸ் பழங்குடி இனத்தினர் பருவங்களுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.
யகரி அனைத்து விலங்குகளுடனும் பேசும் அற்புதமான திறன் உடையவனாக இருக்கிறான்.
யகரியின் சாகஸங்கள் அவன் சார்ந்துள்ள பழங்குடியின் வாழ்க்கை முறை மற்றும் சூழலைப் பற்றி அறிய தருவதுடன். சகிப்புத்தன்மை, நீதி, ஒற்றுமை, இரக்கம், மற்றும் நகைச்சுவையுடன் வாழ்க்கையைப் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.
******
யகரியும் பெரும் கழுகாரும்
அன்றும் வழக்கம்போல் பெரும் கழுகாரை கனவில் சந்திக்கிறான் யகரி. தான் அவனது கனவில் வருவது அதுவே கடைசி முறை என்கிறார் பெரும் கழுகார். தான் அவரை மீண்டும் காண முடியாதா? என அதிர்ச்சியுடன் கேட்கும் யகரிக்கு, 'பெரும் கழுகாரான தன்னைப்போல யகரி நடந்து கொள்ளும்போது மீண்டும் சந்திக்கலாம்' என்று கூறி விடை பெறுகிறார்.
மறுநாள் முதல் பெரும் கழுகாரைப்போல தானும் மாற முயற்சிகள் மேற்கொள்கிறான் யகரி. அவனுடைய முயற்சிகள் வாத்து ஒன்றை 'இந்த அளவு தப்பிச்சதே பெரிய விஷயம், இதைவிடக் கம்மியான ஒன்னுக்கே மண்டைத்தொலி போயிருக்கும்' என மிரள வைக்கிறது.
பெரும் கழுகாரைப் போல ஆவது எப்படி எனும் அவனது கேள்விக்கு பதில் அளிப்பார் யாருமில்லை.
அப்போது அவனது தோழி வானவில் ஒரு சிறுத்தைக்குட்டியை கொண்டு வருகிறாள். யகரி அதை தொட முயலும்போது அது மிரண்டு போய் காட்டுக்குள் ஓடுகிறது. அந்தக் குட்டியைத் தேடிச் செல்லும் இருவரும் காட்டில் பெரிய சிறுத்தை ஒன்றை எதிர்கொள்கின்றனர்.
யகரி துணிச்சலாக வானவில்லின் உதவியுடன் மரக்கிளை ஒன்றை விசையுடன் இழுத்து விட்டு சிறுத்தையைத் தாக்கி இருவரும் தப்பிக்க வழி செய்கிறான்.
ஒருநாள் அவனது பழங்குடியினர் காட்டுக்குதிரைகளைப் பிடிக்கும்போது 'சின்ன இடி' எனும் குதிரை தப்பிச்செல்வதைக் காண்கிறான்.
அவனது தந்தையின் ஆலோசனைப்படி கழுகுகள் அடிக்கடி காணப்படும் குன்றுப்பகுதிக்குச் செல்லும் யகரி, அங்கே சின்ன இடி என அழைக்கப்படும் காட்டுக்குதிரை பாறைகளில் கால் சிக்கித் தவிப்பதைக் காண்கிறான். கருணையுடன் அதை விடுவித்து அனுப்புகிறான்.
அப்போது பெரும் கழுகார் அவனை நேரில் சந்திக்கிறார். அவன் சிறுத்தைக்கு எதிராக தைரியத்துடனும், காட்டுக்குதிரையின் துன்பத்தைக் கண்டு கருணையுடனும் நடந்து கொண்டதால், அவன் தன்னைப்போன்று நடந்து கொள்வதில் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்.
மேலும் தான் அவனது குல தெய்வமாகவும் பாதுகாவலராகவும் இருப்பதாகவும், அவனுக்கு மேலும் சாதனைகள் காத்திருப்பதாகவும் கூறி, அவரது அழகான இறகு ஒன்றை யகரிக்கு பரிசாக அளிக்கிறார்.
ஒருவழியாக பெரும் கழுகாரைப்போல தான் ஆகி விட்டதாக மகிழும் யகரி அந்த இறகை தலையில் சூடிக்கொண்டு தன் பழங்குடியினரிடம் விரைந்து சென்று பெரும் கழுகார் தன்னை நேரில் சந்தித்து இறகு அளித்ததைக் கூறுகிறான்.
ஆனால் அவனது மக்கள் யகரியின் கற்பனைகள் மடக்குதிரையின் வேகத்தில் பாய்ந்தோடுவதாகக் கூறி அவனது சொற்களை நம்ப மறுக்கின்றனர்.
அவனது தந்தையோ, அவனது இனத்தில் சாதனை செய்தவர்களே கழுகாரின் இறகை அணியலாம் என்றும், யகரி இன்னும் சாதனை ஒன்றும் நிகழ்த்தவில்லை என்றும் கூறி இறகை அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறார்.
மறுநாள் யகரியின் நினைவாற்றலைத் தூண்ட நீராவிக் குடிலும் குளிர் நீர் வைத்தியமும் பார்க்கப்படுகிறது. ஆனாலும் பெரும் கழுகார்தான் தனக்கு இறகு அளித்தார் என்பதில் யகரி உறுதியாக இருக்கிறான்.
தொடரும் நாட்களில் யகரி தன் இரகசியத்துடன் தனித்திருந்தான்.
'பெரும் கழுகாரைப்போல ஆகி விட்டதாக பெருமையுடன் இருந்தேன். யாரும் என்னை நம்பவில்லை' என சிந்தனையுடன் உலவிக்கொண்டிருந்த யகரியை திடீரென காட்டுத்தீ சூழ்ந்து கொள்கிறது.
காட்டுத்தீயிலிருந்து தப்ப ஓடும் யகரியை பெரும் கழுகார் சந்தித்து தன்னைப் பின்தொடரச் சொல்கிறார். நெருப்பும் புகையும் சூழ்ந்திருக்க நெடுந்தூரம் ஓடும் யகரி களைப்புறும் வேளையில் பெரும் கழுகார் 'இது அவனுக்குப் புதிய ஒன்றின் ஆரம்பம் என்றும், அவனுடைய குல தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பின்தொடரும்படியும்' கூறுகிறார்.
ஒரு பாதுகாப்பான இடத்தை சென்றடையும் இருவரும் இரவை அங்கே கழிக்க முடிவு செய்கின்றனர்.
'தன் மக்கள் தன்னை ஏன் நம்பவில்லை' எனும் யகரியின் கேள்விக்கு, அவன் இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, என்றும் ஒருநாள் அவனது இறகு அவனுக்குத் திரும்பக் கிடைக்கும் என்றும் பெரும் கழுகார் பதிலளிக்கிறார்.
விடிந்த போது பெரும் கழுகார் அங்கில்லை. யகரி வீடு திரும்பும் பயணத்தை மேற்கொள்கிறான்.
இரவில் ஓநாயின் ஊளைச்சத்தம் கேட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடும்போது கரடிக்கான பொறிக்குழி ஒன்றில் விழுகிறான். குழிக்குள் இறங்கத் துணியாத ஓநாய் அவனிடமிருந்து விலகிச் செல்கிறது. அந்த ஆழமான பொறிக்குழியையே அன்றிரவைக் கழிக்கும் பாதுகாப்பான இடமாகக் கொள்கிறான் யகரி.
காலையில் பயணத்தை தொடரும் யகரி தொலைவில் தூசுப்படலத்தைக் கண்டு அங்கே செல்கிறான்.
அங்கு காட்டுக் குதிரைகளின் கூட்டத்தைக் காண்கிறான். அவற்றினூடே அவன் முன்னர் காப்பாற்றிய 'சின்ன இடி' எனும் குதிரையும் இருக்கிறது.
யகரி அதன் மீது ஏற முயலும்போது அவனை உதறித் தள்ளும் சின்ன இடி, பின்னர் யகரியின் நட்பான அழைப்பை ஏற்றுக் கொள்கிறது.
அந்நேரத்தில் தனக்கு பிராணிகள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறன் இருப்பதை உணர்ந்து கொள்கிறான் யகரி.
சின்ன இடி மற்ற குதிரைகளுக்கு தன் புதிய நண்பனான யகரியை அறிமுகம் செய்கிறது. அக்குதிரைகளில் ஒன்று, யகரி சின்ன இடியின் மீது அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, 'தான் சுதந்திரமாக இருப்பதையே விரும்புவேன்' என்கிறது. 'அக்குதிரைக்கு நட்பு என்பதன் அர்த்தம் இன்னும் புரியவில்லை' என்கிறது சின்ன இடி.
அப்போது தொலைவில் மக்கள் கூட்டம் செல்வதைக் காணும் யகரியும் சின்ன இடியும் அங்கே விரைந்து செல்கின்றனர். அருகில் சென்ற பின் அது தன்னுடைய பழங்குடி இனம்தான் என்பதைக் கண்டு கொள்கிறான் யகரி.
எவரும் பிடிக்க முடியாத சின்ன இடியை யகரி வசப்படுத்தியதால் அவன் சாதனை நிகழ்த்தி இருப்பதாகக் கூறி பெரும் கழுகார் யகரிக்கு பரிசாகக் கொடுத்த இறகை திருப்பி அளிக்கிறார் அவனுடைய தந்தை.
அந்த இறகை பெருமையுடன் தலையில் சூடிக் கொள்ளும் யகரி, அனைத்தும் பெரும் கழுகார் கூறியபபடியே நடந்ததாக மகிழ்வடைகிறான்.
அவனுடைய இனத்தின் பயணம் தொடர்கிறது, தன் பாதுகாவலரும் தன்னை தொடர்வதை காண்கிறான் யகரி.
முற்றும்!
********
This comment has been removed by a blog administrator.
ReplyDelete