Thursday, March 24, 2022

தீவுக்கைதிகள்

 




ஒருநாள் மலைப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த யகரியும் வானவில்லும் இடிக்குட்டியுடன் மலையின் உச்சிப்பகுதிக்குச் சென்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
 


அப்போது பெரும்மழை பிடித்துக்கொள்ளவே அங்கிருந்த குகைப்பகுதியில் தங்கினர். இடி, மின்னலோடு இரவும் பகலுமாக இரு நாட்கள் பெய்த மழையால் அவர்கள் தங்கியிருந்த மலைப்பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவு போல் ஆகி விடுகிறது.



உதவிக்காக தன் கிராமத்தினருக்கு புகை சமிக்ஞை அனுப்ப உலர்ந்த சுள்ளிகளை தேடிச்செல்லும் யகரி இடியால் வீழ்ந்த ஒரு மரத்தின் அடியில் கால் சிக்கிக் கொண்டிருந்த ஒரு கடமான் குட்டியையும் அதன் பெற்றோரையும் காண்கிறான்.

அந்த மான்கள் குட்டியை விடுவிக்க முடியாமல் உதவிக்காக தவித்துக் கொண்டிருந்தன. 
யகரி தன் தோழர்களையும் உதவிக்கு அழைத்து மரத்தைப் புரட்டி குட்டியை விடுவிக்கிறான். மரம் விழுந்ததில் மான்குட்டியான பிர்ச் ஷுட்டின் கால் முறிந்திருந்தது. வானவில்லின் யோசனைப்படி கால்முறிவுக்கு மரக்கட்டைகளை வைத்து கட்டுப் போடுகிறான் யகரி.



 அப்போது யகரி மற்றும் வானவில்லின் தந்தையர் படகில் அவர்களை தேடி வருகின்றனர். அவர்களிடம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வானவில் முயலும்போது, யகரி 'பிர்ச் ஷுட்டுக்கு இன்னும் நமது உதவி தேவை' என கூறி தடுத்து விடுகிறான்.

மான்கள் இருக்கும் இடத்துக்கு திரும்பி நகர முடியாத பிர்ச் ஷூட்டுக்காக சிறு குடில் அமைக்கின்றனர்.
அன்று இரவு யகரியை சந்திக்கும் பெரும் கழுகார், யகரியின் தீர்மானம் சரியானது. என்றும் அவர்களுடைய பெற்றோருக்கு அவர்களைப்பற்றிய நம்பிக்கையை உறுதிப்படுத்த ஒரு வழியை கண்டு பிடிக்கும்படியும் கூறிச்செல்கிறார்.




அதே இரவில் வால்வரின் எனும் சிறு விலங்கு தாக்க வருகிறது ஆபத்தை உணர்ந்த கடமான்கள் வால்வரினை துரத்தியடித்தன. அப்போதிருந்து மான்குட்டிக்கு பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானித்தனர். அங்கே தாங்கள் தங்குவது என்ற யகரியின் தீர்மானம் சரியானதுதான் என வானவில் கூறினாள்.

பிர்ச் ஷுட்டின் தந்தையான பெரும் கொம்பன், அந்த வால்வரின் பலகாலமாக தங்கள் கூட்டத்தை தொடர்ந்து வருவதாகவும் தனியே சிக்கும் மான்களை தாக்குவதாகவும் தெரிவிக்கிறான்.

பிர்ச் ஷுட்டின் தாயான நீர் அல்லி அமைதியற்று காணப்படுகிறாள். 



யகரியும் வானவில்லும் பாதுகாப்புப் பனியில் இருக்கும்போது தவறுதலாக அங்கே அரிதான மரங்களை தேடிவரும் இரட்டைப்பல்லனை தாக்கி விடுகின்றனர்.
தன்னுடைய தலை வீங்கியதன் காரணத்தை தெரிந்து கொண்ட இரட்டைப்பல்லன் பிர்ச் ஷுட்டுக்கு பாதுகாப்பாக மரங்களால் வேலி அமைத்து தருகிறான்.

இவர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் வால்வரின் ஒரு சதித்திட்டத்தை துவங்கியது.


யகரி இரட்டைப்பல்லன் செதுக்கிய சிற்பத்தின் மூலம் தங்கள் முகாமுக்கு தாங்கள் காயம்பட்ட மான்குட்டிக்கு உதவியாக இருப்பதை தெரிவிக்கிறான்.

அந்நேரம்  வால்வரின் சூழ்ச்சியாக பெரும் கொம்பனை பிர்ச் ஷுட் மற்றும் நீர் அல்லியிடமிருந்து பிரித்து அனுப்பி விட்டு பிர்ச் ஷூட்டை தாக்க முயல்கிறது. 



வால்வரினின் சதிச்செயலை புரிந்து கொண்ட யகரியும் பெரும் கொம்பனும் திரும்பி வருகின்றனர்.
 பெரும் கொம்பனின் ஆக்ரோஷ தாக்குதலில் தூக்கி எறியப்பட்ட வால்வரின் தீவை விட்டே வெளியேறி சென்றது.

சிலநாட்களில் பிர்ச் ஷுட்டின் கால் குணமாகி விடவே பெரும் கொம்பன் யகரியையும் வானவில்லையும் அவர்களுடைய முகாமில் சேர்த்து விட்டு பிரியாவிடை பெற்று  தங்களுடைய கூட்டத்துடன் இணைந்து கொள்ள பயணமானான்.



இவ்வாறு சிறு மான்குட்டிக்கு ஆபத்தான காலத்தில் உதவி செய்து அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்வை யகரி மீட்டுக் கொடுத்தான்.

மீண்டும் சந்திப்போம்.



*******★★★★★********




Moose


ஐரோவாசியக் காட்டுமான் (elk அல்லது moose, Alces alces) என்பது புதிய உலக மான் வகைகளில் ஒன்று. பூமியில் வாழும் மான் குடும்ப உயிரினங்களில் மிகப் பெரியதாகும். இவை கனடா, அலாஸ்கா, நியூ இங்கிலாந்து, பென்னோஸ்காண்டியா, பால்டிக் நாடுகள் மற்றும் உருசியாவில் காணப்படுகின்றன. இவை ஓநாய், கரடிகள் மற்றும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. மற்ற வகை மான்களைப் போல் இல்லாமல் மூஸ்கள் தனியாக வாழ்கின்றன, கூட்டமாக வாழ்வது இல்லை. இவை பொதுவாக மெதுவாக நகரக் கூடியவை, ஆனால் கோபப்படுத்தப்பட்டால் வேகமாகவும், மூர்க்கத்தனத்துடனும் நடந்து கொள்ளும்.



Wolverine

வால்வரின் (குளோ குளோ) என்பது குளோ (லத்தீனில்: "குளுட்டன்") பேரினத்தைச் சேர்ந்த முஸ்டலிடே (வீசெல்) என்ற குடும்பத்தைச் சேர்ந்த தரைவாழ் உயிரினம் ஆகும். இது குளுட்டன் எனவும், சில சமயங்களில் கார்குஜூ, ஸ்குங் கரடி, குவிக்ஹச் அல்லது குலான் எனவும் அழைக்கப்படுகிறது. இது கட்டுக்கோப்பான, தசைப்பிடிப்பான ஊனுண்ணியாகும். முஸ்டலிடே குடும்பத்திலுள்ள மற்ற உயிரினங்களை விட இதுவே மிகவும் சிறிய கரடி ஆகும். வால்வரின் அதன் உடல் அளவோடு ஒப்பிடும்போது அது தனது உடலைவிட பல மடங்கு பெரிய இரையைக் கொல்லக்கூடிய தன்மையுடையதாக இருப்பதால் அதன் முரட்டுத்தனம் மற்றும் வலிமை ஆகியவற்றுக்குப் பெயர்போனதாக இருக்கிறது.

வால்வரின்கள் வடக்கு வடமுனைக்குரிய காடுகள் மற்றும் வட அரைக்கோளத்திலுள்ள உபவடதுருவ மற்றும் ஆல்பைன் துருவப்பகுதி ஆகிய தொலைதூர இடங்களில் முதன்மையாகப் பரவியுள்ளன. அதே போல அலாஸ்கா, கனடா, ஐரோப்பாவின் நார்டிக் நாடுகள் மற்றும் மேற்கு ரஷ்யா மற்றும் சைபீரியா முழுவதுமே பெருமெண்ணிக்கையில் உள்ளன. 19 ஆம் நூற்றாண்டு முதல் அவை பொறிக்குள் சிக்குதல், எல்லைக் குறைப்பு மற்றும் வசிப்பிட துண்டாக்கல் போன்ற சிக்கல்களால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. இதனால் தென்துருவத்தின் ஐரோப்பிய எல்லையில் அவை உண்மையில் அழிந்துவிட்டன. இருப்பினும் வட அமெரிக்கா மற்றும் வட ஆசியாயில் பெருமெண்ணிக்கையில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[2]


Brich 

பிர்ச்  என்பது பெட்டுலா (/ˈbɛtjʊlə/),[2] பெதுலேசியே குடும்பத்தில் உள்ள ஒரு மெல்லிய-இலைகள் கொண்ட இலையுதிர் கடின மரமாகும்.  இது பீச்-ஓக் குடும்ப Fagaceae உடன் நெருங்கிய தொடர்புடையது.  பெதுலா இனமானது 30 முதல் 60 அறியப்பட்ட வகைகளைக் கொண்டுள்ளது  அவை பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில், குறிப்பாக மிதமான காலநிலை மற்றும் போரியல் காலநிலையின் வடக்குப் பகுதிகளில் பரவலாக குறுகியகால முன்னோடி இனமாகும்.


*******★★★*******





Sunday, March 20, 2022

ஓநாய்களின் பூமி

 



குளிர்காலத்தின் துவக்கத்தில் யகரியின் பழங்குடி மக்களின் முகாம் வனப்பகுதிகளுக்கு நகர்ந்தது.



முகாம் அமைக்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் செவ்விந்திய வீரன் "துன்புறுத்தப்பட்ட ஓநாய்"க்கு மூன்று குளிர்காலங்களுக்கு முந்தைய சில சம்பவங்களை நினைவூட்டுகிறது. ஒரு ஓநாயை வேட்டையாட முயன்றபோது  அதன் தாக்குதலில் கையில் காயம்பட்ட கதை அது... தப்பி ஓடிய ஓநாய் நொண்டியவாறு சென்றதையும் துன்புறுத்தப்பட்ட ஓநாய் நினைவு வைத்திருந்தான்.

முகாம் அமைத்தபின் யகரி, வானவில் மற்றும் எருமை விதையுடன் பனியில் சறுக்கி விளையாடினான். அப்போது  வானவில் தூரத்தில் ஒரு Coyote யை பார்த்ததாக கூறுகிறாள்.

 அங்கு வரும் துன்புறுத்தப்பட்ட ஓநாய், வானவில் பார்த்தது   'ஒரு Wolf ஆக இருக்க வாய்ப்புள்ளது'  என்று கூறி விலங்கு காணப்பட்ட இடத்தை நெருங்கிச் சென்று  பார்க்கிறான். அங்கே ஒரு ஓநாயின் கால் தடங்கள் காணப்படுகின்றன.


மறுநாள் யகரி விறகு சேகரிக்க செல்லும்போது நொண்டியவாறு நடக்கும் ஒரு ஓநாயை பார்க்கிறான். முகாமுக்கு வந்து தன் தோழர்களிடம் தான் கண்டதை சொல்லுகிறான். அதைக் கேட்கும் துன்புறுத்தப்பட்ட ஓநாய்,  தன் வேட்டை தலைக்கவசத்தை அணிந்து   அந்த நொண்டி ஓநாயை தேடி புறப்படுகிறான்.

அப்போது அங்கு வரும் மாந்த்ரீக வைத்தியர் அவன் ஓநாய்களை மறக்க வேண்டும் என்று கூறி தடுக்க முயலுகிறார்.  அவருக்கு தன்னுடைய கரத்தின் காயத்தழும்பை காட்டி தன்னால் அதை மறக்க முடியாது என கூறிச் செல்கிறான். 'அவனுடைய வேட்டை சிந்தனை முட்டாள்தனமானது' என்று கூறினார் மாந்த்ரீகர்.


அன்று இரவு யகரியின் கனவில் ஒரு ஓநாய் வருகிறது. 'நம்முடைய பாதைகள் விபத்து போல் குறுக்கிட்டன' என்று கூறுகிறது. அதைத் தொடர்ந்து ஓநாய்கள் ஊளையிடும் ஒலியும் கேட்கிறது.


காலையில் விழித்தெழும் யகரி தன் கூடாரத்துக்கு அருகில் ஓநாயின் கால் தடங்களை காண்கிறான். அதை பின்பற்றி செல்ல தீர்மானித்து இடிக்குட்டியை அழைக்கிறான். ஆனால்  இடிக்குட்டி ஓநாய் தடத்தை பின்தொடர விரும்பவில்லை,  எனவே தனியே ஓநாயின் தடங்களை பின்பற்றி செல்கிறான் யகரி.

தனிமையான பயணத்தில் யகரியின் மனதில் 'ஓநாய்கள் தாக்குமோ?' என்ற அச்சம் எழுகிறது.



அப்போது அவனை சந்திக்கும் பெரும்கழுகார் ஓநாய்களின் நிலத்திற்கு அவன் தனியே வந்துள்ள போதும் அவனுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாததைப் பற்றி சிந்திக்க சொல்கிறார். மேலும் அவன் செல்லும் பாதை தற்செயலானதல்ல என்று கனவில் வந்த ஓநாயின் சொற்களை உறுதிப்படுத்திச் செல்கிறார்.

அதன்பின் தொர்ந்து முன்னேறும் யகரி தான் முன்னர் விறகு சேகரிக்கையில் பார்த்த ஓநாயை சந்திக்கிறான். அந்த ஓநாய் தன்னை மூன்று காலன் என அழைக்கலாம் என்றும் தான் அவனுக்காக காத்திருப்பதாகவும் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள  பைன் மரக்காட்டில் முதன்முறை சத்தித்ததாகவும் கூறியது.

மேலும் அவன் ஓநாய்களை பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியது.

 யகரி தான் முந்தைய இரவில் கனவில் கேட்ட ஓநாய்களின் ஊளைச்சத்தத்தைப் பற்றி கூறினான். 

மூன்றுகாலன் 'அது ஊளைச்சத்தம் இல்லை அது ஓநாய்களின் பாடல்' என்று கூறி அதன் கதையை யகரிக்கு விவரித்தது.




நீண்ட... மிக நீண்ட காலங்களுக்கு முன் ஓநாய்களின் முதல் குலம் தோன்றியபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒரு நீண்ட பாடலை துவங்கினர். சூரியனுக்காக பாடப்பட்ட முடிவற்ற பாடல் அது...

சூரியனோ விரைவிலேயே மேகங்களால் தன் காதுகளை மூடிக்கொண்டு தூங்க சென்று விட்டது.

ஆனால் அந்தப் புதிரான இசை நிலவை ஈர்த்தது, அதை நன்கு கேட்கும் பொருட்டு  முழுநிலவாக தன்னை வெளிப்படுத்தியது. அத்தகைய ஒரு அழகான பார்வையாளரின் முன்  பாடகர்கள் உரக்கப் பாடினர். முழுநிலவு இரவுகளில் அவர்கள் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஓநாய்களின் பாடலைப்பற்றிய கதையை முடித்த மூன்றுகாலன் ஓநாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருப்பதையும்  அவனுக்குக் காட்டியது. ஓநாய்க்குட்டிகளின் குறும்புகளை ரசித்து மகிழ்ந்தான் யகரி.

மூன்றுகாலன் யகரியிடம், 'ஓநாய்கள் மீது அவனுக்கு இன்னும் பயம் இருக்கிறதா?' என்று கேட்டது.

 யகரி, பயமில்லை. என்று கூறினான்.

மூன்றுகாலன் 'நேரம் வரும்போது அவன் நிறைய ஓநாய்களை சந்திக்கலாம்' என்று கூறி அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.


மறுநாள் 'துன்புறுத்தப்பட்ட ஓநாய்' ஓநாய்களின் பொறியில் சிக்கிக் கொள்கிறான் அவனை நெருங்காமல் சுற்றிலும் ஓநாய்கள் முற்றுகையிட்டிருந்தன.



அதே நாளின் இரவில் யகரியை சந்திக்க வரும் மூன்றுகாலன், துன்புறுத்தப்பட்ட ஓநாய் கொல்லப்படுவதை தவிர்க்க பரஸ்பரம் மதிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிந்து,  யகரியை துன்புறுத்தப்பட்ட ஓநாயிடம் தூதனாக அனுப்பி வைக்கிறது.


யகரி ஓநாய்களின் முற்றுகையினூடாக சென்று துன்புறுத்தப்பட்ட ஓநாயை சந்தித்து ஓநாய்களின் ஒப்பந்தத்தை விளக்குகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் துன்புறுத்தப்பட்ட ஓநாய்  தன் சம்மதத்தை மற்ற ஓநாய்கள் புரிந்து கொள்ளும் விதமாக   மூன்றுகாலன் கூறிபடி கைகளையும் தரையில் ஊன்றி தவழ்ந்து ஓநாய்களின் முற்றுகையிலிருந்து வெளியேறுகிறான்.


யகரியை மீண்டும் சந்திக்கும் மூன்றுகாலன்,  தானே ஓநாய்ளின் தலைவர் என்றும் தான் நொண்டியில்லை,  துன்புறுத்தப்பட்ட ஓநாயை ஏமாற்றி பொறியில் சிக்க வைக்கவே நொண்டியாக நடித்ததாகவும் கூறியது. 

துன்புறுத்தப்பட்ட ஓநாய் இப்போது அமைதி அடைந்து விட்டதால் இனி அவனால் ஓநாய்களுக்கு தொந்தரவு இருக்காது என நிம்மதி அடைந்தது.

 யகரி எப்போது வேண்டுமானாலும் ஓநாய்களின் பூமிக்கு வரலாம் என்றும் வரவேற்றது.


முகாமுக்குத் திரும்பிய துன்புறுத்தப்பட்ட ஓநாய் கூறினான் : 



இனி என்னை சாந்தமான ஓநாய் என்று அழையுங்கள். என் ஆன்மா அமைதி அடைந்தது.

இவ்வாறாக துன்புறுத்தப்பட்ட ஓநாய்க்கு ஓநாய்களின் மீது ஏற்பட்டிருந்த வன்மம் நீங்கியது.

 விலங்குகள் அவற்றின் பாதைகளில் செல்லுகின்றன. மனிதனின் பேராசைகளும் தேவைகளும் அந்தப் பாதைகளில் குறுக்கிடுகின்றன. இயற்கை படைப்புகள், விலங்குகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை மனிதனால் நாசமடைகின்றன. மனிதன் என்பவன் தோன்றாமலே இருந்திருந்தால் இந்தப்பூமி அனைத்து உயிர்களுக்கும்   சொர்க்கமான ஒன்றாக அமைந்திருக்கும்.


***********★★★************

மீண்டும் சந்திப்போம்.





Coyote :

அமெரிக்கக் குள்ளநரி (Coyote) என்பது "நாய்" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.[4]

பார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.



Wolf :


ஓநாய் அல்லது சாம்பல்நிற ஓநாய் என்பது நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இது வீட்டு நாயை விட உருவில் பெரியது. காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஓநாய்கள் பலவகையான மான்களையும், எல்க்கு, விரிகலை மூசுமான் எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஓநாய்கள் இல்லை.


ஓநாய்களில் இரண்டே வகைகள்தான் இன்றுள்ளன. முதல் வகையானது சாம்பல்நிற ஓநாய் (Gray wolf), இரண்டாவது வகை செந்நாய் (Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.



Pine tree

தேவதாரு அல்லது ஏங்கு அல்லது “பைன்” என்பது "பைனஸ்" குடும்பம் என்ற பிரிவில் உள்ள தாவரம் ஆகும். இது பினாய்டேயே குடும்பத்தை சேர்ந்த துணை குடும்பமாகும். ராயல் தாவரவியல் பூங்கா, க்வ் மற்றும் மிசோரி தாவரவியல் பூங்கா ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட தாவர பட்டியல், தற்போது 126 பைன் வகைகளை வகைப்படுத்தியுள்ளது.

*******

Saturday, March 12, 2022

ஒரு ஜலதோஷப்பறவை

 






ஒருநாள் பீவெர்களின் கிராமத்துக்கு இடைவிடாத. ஜலதோஷ தும்மல் பிரச்சனை கொண்ட பெலிகன்  ( Pelican )  ஒன்று வந்து சேர்கிறது.

அது  தங்குவதற்கு மர அணை தன் வீட்டில் இடமளிக்கிறார். வந்த விருந்தாளியோ அன்றைய இரவு தன் இடைவிடாத தும்மகளால் பீவெர் கிராமத்தையே தூங்க விடாமல் செய்து விடுகிறார்.




உறக்கம் தொலைத்த பீவெர் கிராமத்தினர் பெலிகனை வெளியேற சொல்கின்றனர். யகரி அந்த அந்நியப்பறவையை தன் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று கூடாரத்துக்குள் ஒளித்து வைக்கிறான்.

அங்கு பெலிகனின் தும்மல் சத்தத்தினால் கவரப்பட்டு வரும் வானவில்லிடம் தனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பதாக கூறி சமாளிக்கிறான். அவனுக்கு நீராவி குடிசையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆலோசனை கூறுகிறாள் வானவில். 

யகரிக்கு அது சிறந்த யோசனையாக தெரியவே , பெலிகனை அழைத்துக் கொண்டு மீண்டும் பீவெர்களின் கிராமத்துக்குச் செல்கிறான். 
ஆனால், மர அணை 'பட்டது போதும்' என்று தத்துவம் பேசி  உதவ மறுத்து விடுகிறார்.


பெலிகனை தன் மீது சுமந்தவாறு பயணிக்கும் இடிக்குட்டி அதன் தொடர் தும்மல் சப்தங்களால் செவித்திறன் பாதிக்கும் நிலையை அடைகிறது.
 
கை கொடுப்பான் தோழன் என்பதற்கேற்ப யகரிக்கு உதவ முன் வருகிறான் லிண்டென் மரம். அவனுடைய தோழகளின் உதவியோடு வியர்வைக் குடில் தயாராகிறது. 

நீராவி சிகிச்சையால்  பெலிகனின் ஜலதோஷம் நின்று விடுகிறது. ஆனால் அது மீன் பிடிக்க முயலும்போது ஆற்றில் இடறி விழுந்து மீண்டும் ஜலதோஷம் பிடித்துக் கொள்கிறது.

 லிண்டென் மரத்தின் யோசனைப்படி பெலிகனுடன் நீர்நாய்களின் வசிப்பிடத்துக்கு செல்கிறார்கள். நீர்நாய்கள் பெலிகனுக்கு நாள் முழுவதும் மீன் பிடித்து தருகின்றனர். பெலிகனின் தீராப்பசி அவர்களுக்கு தாங்கள் கொடுங்கரடியின் பிடியில் சிக்கியிருந்த காலத்தை நினைவூட்டுகிறது.
 
மாலை வரை மீன் பிடித்துக் கொடுத்து களைத்துப் போன நீர்நாய்களை  இரவில் பெலிகனின் தொடர் தும்மல்கள் தூங்கவும் விடவில்லை.




மறுநாளும் அதிகாலையே பெலிகனுக்கு மீன் பிடிக்கும் படலம் துவங்குகிறது. ஆனால் ஆற்றில் மீன்கள் காலியாகி விட்டிருந்தன. நொந்து போன நீர்நாய்களும் பெலிகனை வெளியேற சொல்லவே பெலிகனை அழைத்துக் கொண்டு கிளம்புகிறான் யகரி.




பெலிகனிடம் அன்றைய இரவை காட்டில் தனிமையில் கழிக்கச் சொல்லி விட்டு செல்லும் யகரி மறுநாள் திரும்பி வந்தபோது பெலிகனின் தும்மல் சத்தங்களால் உறக்கத்தை தொலைத்த காட்டுவாழ் பிராணிகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுகிறது.

அங்கிருந்து கிளம்பும் யகரி தான் முன்னர் கொடுங்கரடியிடமிருந்து காப்பாற்றிய ஸ்கின்னி கரடியிடம் உதவி கேட்க செல்கிறான்.  வழியில் ஏற்றமான  மலைப்பாதையில்  தும்மல் போட்ட பெலிகன் நிலைதடுமாறி  யகரி மீது விழ. இருவரும் உருண்டு மலை அடிவாரத்தை அடைகின்றனர்.




யகரிக்கு மேலும் தொல்லை அளிக்க விரும்பாத பெலிகன் யகரியிடம் தன்னை விட்டுச் செல்லும்படி     சொல்கிறது. இடிக்குட்டியும்அதை ஏற்றுக்கொள்ள யகரியிடம் கூறுகிறது. ஆனால் யகரி பெலிகனை கைவிட மறுக்கிறான்.

அப்போது அங்கு வந்த ஸ்கின்னி விவரங்களை கேட்டறிந்து பெலிகனை தூக்கிக் கொண்டு ஆற்றுப்பகுதிக்கு செல்ல, இடிக்குட்டி தன் பாரம் நீங்கியதில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ஸ்கின்னி பிடித்து தந்த மீன்களை திருப்தியாக சாப்பிட்ட பெலிகன் உறங்கச் செல்கிறது. அன்றைய இரவில் தும்மல் சத்தம் எழவில்லை , மாறாக பெலிகன் விட்ட பயங்கரமான குறட்டை சத்தத்தால் அந்த ஓய்விடம் நிரம்பியது.

காலையில் பெலிகனுக்கு ஜலதோஷம் விட்டிருந்தது.  உற்சாகத்துடன் பறந்த பெலிகன் முன்னர் தனக்கு உதவிய நீர்நாய்களுக்கு மீன்கள் பிடித்துக் கொடுத்து தன் நன்றியை தெரிவித்தது.

அடுத்து பீவர்கள் கிராமத்துக்கு  சென்று லிண்டென் மரத்தையும் அதன் தோழர்களையும் தன் அலகில் அமர்த்தி பறந்து பீவெர்களை மகிழ்வுற செய்தது. இரட்டைப்பல்லன் பெலிகனின் உருவத்தை மரங்களில் செதுக்கி மகிழ்ந்தான்.

இவ்வாறு எத்தனையோ எதிர்ப்புகளையும் சிரமங்களையும் சந்தித்த போதும், இடிக்குட்டி சலித்துக் கொண்ட போதும் பெலிகனே நம்பிக்கை இழந்த போதும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் பரிதாபத்துக்குறிய பெலிகனுக்கு உதவி அதன் வாழ்வை மீட்டுக் கொடுத்தான் இரக்கமுள்ள நெஞ்சம் படைத்த வீரன் யகரி.

பெலிகன்  தன்  பயணத்தை தொடர தீர்மானிக்கிறது. ஆனால் பீவெர்கள் சில நாள் தங்கி இருக்கும்படி வற்புறுத்துகின்றனர். 
அதைப் பார்த்த இடிக்குட்டி
 நிலைமை தலைகீழாக மாறி விட்டதாக  கூறியது.

  அப்போது நிறைய பெலிகன்கள் பீவெர்களின் கிராமத்தை வந்தடைந்தன.
இரட்டைப்பல்லன் மரங்களில் செதுக்கிய பெலிகனின் நினைவுச் சின்னங்களைப் பார்த்து ஜலதோஷ பெலிகனை கண்டு பிடித்ததாக அவை தெரிவித்தன.




 தன் கூட்டத்துடன் செல்ல தீர்மானித்து யகரியிடமும் மற்ற தோழர்களிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு உயர உயர மகிழ்ச்சியாகப் பறந்தது அந்த ஜலதோஷ... இல்லை, இல்லை, சந்தோஷப்பறவை!


மீண்டும் சந்திப்போம்...




***********




Pelican

கூழைக்கடா (Pelican) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர்.[1] கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதைக் கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோகிராம் வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழைக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை. இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.