Sunday, March 20, 2022

ஓநாய்களின் பூமி

 



குளிர்காலத்தின் துவக்கத்தில் யகரியின் பழங்குடி மக்களின் முகாம் வனப்பகுதிகளுக்கு நகர்ந்தது.



முகாம் அமைக்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் செவ்விந்திய வீரன் "துன்புறுத்தப்பட்ட ஓநாய்"க்கு மூன்று குளிர்காலங்களுக்கு முந்தைய சில சம்பவங்களை நினைவூட்டுகிறது. ஒரு ஓநாயை வேட்டையாட முயன்றபோது  அதன் தாக்குதலில் கையில் காயம்பட்ட கதை அது... தப்பி ஓடிய ஓநாய் நொண்டியவாறு சென்றதையும் துன்புறுத்தப்பட்ட ஓநாய் நினைவு வைத்திருந்தான்.

முகாம் அமைத்தபின் யகரி, வானவில் மற்றும் எருமை விதையுடன் பனியில் சறுக்கி விளையாடினான். அப்போது  வானவில் தூரத்தில் ஒரு Coyote யை பார்த்ததாக கூறுகிறாள்.

 அங்கு வரும் துன்புறுத்தப்பட்ட ஓநாய், வானவில் பார்த்தது   'ஒரு Wolf ஆக இருக்க வாய்ப்புள்ளது'  என்று கூறி விலங்கு காணப்பட்ட இடத்தை நெருங்கிச் சென்று  பார்க்கிறான். அங்கே ஒரு ஓநாயின் கால் தடங்கள் காணப்படுகின்றன.


மறுநாள் யகரி விறகு சேகரிக்க செல்லும்போது நொண்டியவாறு நடக்கும் ஒரு ஓநாயை பார்க்கிறான். முகாமுக்கு வந்து தன் தோழர்களிடம் தான் கண்டதை சொல்லுகிறான். அதைக் கேட்கும் துன்புறுத்தப்பட்ட ஓநாய்,  தன் வேட்டை தலைக்கவசத்தை அணிந்து   அந்த நொண்டி ஓநாயை தேடி புறப்படுகிறான்.

அப்போது அங்கு வரும் மாந்த்ரீக வைத்தியர் அவன் ஓநாய்களை மறக்க வேண்டும் என்று கூறி தடுக்க முயலுகிறார்.  அவருக்கு தன்னுடைய கரத்தின் காயத்தழும்பை காட்டி தன்னால் அதை மறக்க முடியாது என கூறிச் செல்கிறான். 'அவனுடைய வேட்டை சிந்தனை முட்டாள்தனமானது' என்று கூறினார் மாந்த்ரீகர்.


அன்று இரவு யகரியின் கனவில் ஒரு ஓநாய் வருகிறது. 'நம்முடைய பாதைகள் விபத்து போல் குறுக்கிட்டன' என்று கூறுகிறது. அதைத் தொடர்ந்து ஓநாய்கள் ஊளையிடும் ஒலியும் கேட்கிறது.


காலையில் விழித்தெழும் யகரி தன் கூடாரத்துக்கு அருகில் ஓநாயின் கால் தடங்களை காண்கிறான். அதை பின்பற்றி செல்ல தீர்மானித்து இடிக்குட்டியை அழைக்கிறான். ஆனால்  இடிக்குட்டி ஓநாய் தடத்தை பின்தொடர விரும்பவில்லை,  எனவே தனியே ஓநாயின் தடங்களை பின்பற்றி செல்கிறான் யகரி.

தனிமையான பயணத்தில் யகரியின் மனதில் 'ஓநாய்கள் தாக்குமோ?' என்ற அச்சம் எழுகிறது.



அப்போது அவனை சந்திக்கும் பெரும்கழுகார் ஓநாய்களின் நிலத்திற்கு அவன் தனியே வந்துள்ள போதும் அவனுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாததைப் பற்றி சிந்திக்க சொல்கிறார். மேலும் அவன் செல்லும் பாதை தற்செயலானதல்ல என்று கனவில் வந்த ஓநாயின் சொற்களை உறுதிப்படுத்திச் செல்கிறார்.

அதன்பின் தொர்ந்து முன்னேறும் யகரி தான் முன்னர் விறகு சேகரிக்கையில் பார்த்த ஓநாயை சந்திக்கிறான். அந்த ஓநாய் தன்னை மூன்று காலன் என அழைக்கலாம் என்றும் தான் அவனுக்காக காத்திருப்பதாகவும் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள  பைன் மரக்காட்டில் முதன்முறை சத்தித்ததாகவும் கூறியது.

மேலும் அவன் ஓநாய்களை பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியது.

 யகரி தான் முந்தைய இரவில் கனவில் கேட்ட ஓநாய்களின் ஊளைச்சத்தத்தைப் பற்றி கூறினான். 

மூன்றுகாலன் 'அது ஊளைச்சத்தம் இல்லை அது ஓநாய்களின் பாடல்' என்று கூறி அதன் கதையை யகரிக்கு விவரித்தது.




நீண்ட... மிக நீண்ட காலங்களுக்கு முன் ஓநாய்களின் முதல் குலம் தோன்றியபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒரு நீண்ட பாடலை துவங்கினர். சூரியனுக்காக பாடப்பட்ட முடிவற்ற பாடல் அது...

சூரியனோ விரைவிலேயே மேகங்களால் தன் காதுகளை மூடிக்கொண்டு தூங்க சென்று விட்டது.

ஆனால் அந்தப் புதிரான இசை நிலவை ஈர்த்தது, அதை நன்கு கேட்கும் பொருட்டு  முழுநிலவாக தன்னை வெளிப்படுத்தியது. அத்தகைய ஒரு அழகான பார்வையாளரின் முன்  பாடகர்கள் உரக்கப் பாடினர். முழுநிலவு இரவுகளில் அவர்கள் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஓநாய்களின் பாடலைப்பற்றிய கதையை முடித்த மூன்றுகாலன் ஓநாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருப்பதையும்  அவனுக்குக் காட்டியது. ஓநாய்க்குட்டிகளின் குறும்புகளை ரசித்து மகிழ்ந்தான் யகரி.

மூன்றுகாலன் யகரியிடம், 'ஓநாய்கள் மீது அவனுக்கு இன்னும் பயம் இருக்கிறதா?' என்று கேட்டது.

 யகரி, பயமில்லை. என்று கூறினான்.

மூன்றுகாலன் 'நேரம் வரும்போது அவன் நிறைய ஓநாய்களை சந்திக்கலாம்' என்று கூறி அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.


மறுநாள் 'துன்புறுத்தப்பட்ட ஓநாய்' ஓநாய்களின் பொறியில் சிக்கிக் கொள்கிறான் அவனை நெருங்காமல் சுற்றிலும் ஓநாய்கள் முற்றுகையிட்டிருந்தன.



அதே நாளின் இரவில் யகரியை சந்திக்க வரும் மூன்றுகாலன், துன்புறுத்தப்பட்ட ஓநாய் கொல்லப்படுவதை தவிர்க்க பரஸ்பரம் மதிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிந்து,  யகரியை துன்புறுத்தப்பட்ட ஓநாயிடம் தூதனாக அனுப்பி வைக்கிறது.


யகரி ஓநாய்களின் முற்றுகையினூடாக சென்று துன்புறுத்தப்பட்ட ஓநாயை சந்தித்து ஓநாய்களின் ஒப்பந்தத்தை விளக்குகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் துன்புறுத்தப்பட்ட ஓநாய்  தன் சம்மதத்தை மற்ற ஓநாய்கள் புரிந்து கொள்ளும் விதமாக   மூன்றுகாலன் கூறிபடி கைகளையும் தரையில் ஊன்றி தவழ்ந்து ஓநாய்களின் முற்றுகையிலிருந்து வெளியேறுகிறான்.


யகரியை மீண்டும் சந்திக்கும் மூன்றுகாலன்,  தானே ஓநாய்ளின் தலைவர் என்றும் தான் நொண்டியில்லை,  துன்புறுத்தப்பட்ட ஓநாயை ஏமாற்றி பொறியில் சிக்க வைக்கவே நொண்டியாக நடித்ததாகவும் கூறியது. 

துன்புறுத்தப்பட்ட ஓநாய் இப்போது அமைதி அடைந்து விட்டதால் இனி அவனால் ஓநாய்களுக்கு தொந்தரவு இருக்காது என நிம்மதி அடைந்தது.

 யகரி எப்போது வேண்டுமானாலும் ஓநாய்களின் பூமிக்கு வரலாம் என்றும் வரவேற்றது.


முகாமுக்குத் திரும்பிய துன்புறுத்தப்பட்ட ஓநாய் கூறினான் : 



இனி என்னை சாந்தமான ஓநாய் என்று அழையுங்கள். என் ஆன்மா அமைதி அடைந்தது.

இவ்வாறாக துன்புறுத்தப்பட்ட ஓநாய்க்கு ஓநாய்களின் மீது ஏற்பட்டிருந்த வன்மம் நீங்கியது.

 விலங்குகள் அவற்றின் பாதைகளில் செல்லுகின்றன. மனிதனின் பேராசைகளும் தேவைகளும் அந்தப் பாதைகளில் குறுக்கிடுகின்றன. இயற்கை படைப்புகள், விலங்குகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை மனிதனால் நாசமடைகின்றன. மனிதன் என்பவன் தோன்றாமலே இருந்திருந்தால் இந்தப்பூமி அனைத்து உயிர்களுக்கும்   சொர்க்கமான ஒன்றாக அமைந்திருக்கும்.


***********★★★************

மீண்டும் சந்திப்போம்.





Coyote :

அமெரிக்கக் குள்ளநரி (Coyote) என்பது "நாய்" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.[4]

பார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.



Wolf :


ஓநாய் அல்லது சாம்பல்நிற ஓநாய் என்பது நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இது வீட்டு நாயை விட உருவில் பெரியது. காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஓநாய்கள் பலவகையான மான்களையும், எல்க்கு, விரிகலை மூசுமான் எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஓநாய்கள் இல்லை.


ஓநாய்களில் இரண்டே வகைகள்தான் இன்றுள்ளன. முதல் வகையானது சாம்பல்நிற ஓநாய் (Gray wolf), இரண்டாவது வகை செந்நாய் (Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.



Pine tree

தேவதாரு அல்லது ஏங்கு அல்லது “பைன்” என்பது "பைனஸ்" குடும்பம் என்ற பிரிவில் உள்ள தாவரம் ஆகும். இது பினாய்டேயே குடும்பத்தை சேர்ந்த துணை குடும்பமாகும். ராயல் தாவரவியல் பூங்கா, க்வ் மற்றும் மிசோரி தாவரவியல் பூங்கா ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட தாவர பட்டியல், தற்போது 126 பைன் வகைகளை வகைப்படுத்தியுள்ளது.

*******

No comments:

Post a Comment