Friday, October 31, 2025

கனவுகளின் காதலன்......


"இந்த உலகை பாழாக்கும் அனைத்து இருள்மைகளிற்கும் எதிரான ஒரு ஒளடதமாக அவர் இருந்தார்." 


எனக்கு அறிவூட்டிய ஆசான் கனவுகளின் காதலரின் வலைப்பதிவுகளிலிருந்து...


 மழையோ வெயிலோ குளிரோ ஒதுங்க ஒரு இடம் வேண்டும். இரவோ பகலோ சரிய ஒரு நிழல் வேண்டும்.

வாழ்க்கை என்பது பருவங்களினூடாக பயணிப்பது. இலைகள் செழுமையாக அசைந்து ஆடி கண்களிற்கும் மனதிற்கும் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் அளிக்கும் வசந்தகாலம் உள்ளது போலவே எல்லாம் போய்விட்ட உணர்வை அளிக்கும் இலையுதிர் காலமும் உண்டு. ஆனால் சக்கரம் நிற்பது இல்லை. காலம் உறைவது இல்லை. அற்ப மானுட மனங்கள் இக்காலச்சலனங்களினால் தம் உணர்வுகளில் சந்தேக சாயங்களை பூசிக் கொள்வதும் இம்மண்ணில் இல்லாமல் இல்லை .

தவறு என தீர்ப்பளித்து ஒருவரை நாம் நடத்தும் விதம் வழியாகவே நம்மைப் பற்றிய சித்திரத்தை நாம் வரைந்து கொள்கிறோம்... 

எந்த ஒரு கொடியவனின் உள்ளத்திலும் அன்பு இருக்கவே செய்கிறது மரணித்துக் கொண்டிருக்கும் விதையாக...

நீர் ஊற்றுகிறோமா தீயை ஊற்றுகிறோமா என்பது யார் கையில் இருக்கிறது.


"நண்பனே, கடந்த காலத்தில் நிலைப்பதென்பது கல்லறையொன்றை பார்த்துக்கொண்டிருத்தல் போன்றது.


"நீ மிருகமாக மாற விரும்பாத வரை மிருகங்களுடன் மோதாதே, பாதாளத்தின் உள்ளே நீ எட்டி பார்க்கும் போது பாதாளமும் உன் உள்ளே எட்டிப்பார்க்கும்" 


நீரோட்டம் ஒன்றின் ஆழங்கள் கொண்டுள்ள ரகசியங்கள் போலவே மனித மனங்களும், அவற்றின் ரகசியங்களும், அன்புகளும் மேற்பரப்பில் கோலங்கள் இட்டு அழகோவியமாவதில்லை.


நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு மனிதம் இருக்கிறது. அது வெளிப்படும் தருணங்களும் அதன் விழைவுகளும் நம்மை யாரென்று சரியாக அடையாளப்படுத்தி விடக்கூடியவை.


ரகசியங்கள் அறியாது அன்பு செய்பவன் காதலன். ரகசியங்கள் அறிந்து அன்பு செய்பவன் ஏறக்குறைய புனிதன் .


ஒன்றின் அழிவில்தான் பிறிதொன்று உருவாகிறது. ஒரு வாழ்வின் முடிவில் தான் இன்னொரு வாழ்க்கை சில சமயங்களில் தன்னைப் பிறப்பித்துக் கொள்கிறது.



No comments:

Post a Comment