நாங்கள் நெருப்பின் முன் அமர்ந்திருந்தபோது, ஷெர்லாக் ஹோம்ஸ் என்னிடம் சில மஞ்சள் நிறமான தாள்களைக் கொடுத்து, "வாட்சன், நீங்கள் இவற்றை ஒருமுறை மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது. இவை குளோரியா ஸ்காட்டின் அசாதாரண வழக்கின் ஆவணங்கள். மேலும், நீதிபதி ட்ரெவர் இதைப் படித்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோன செய்தி இதுதான்" என்றார்.
நான் ஈடுபட்ட முதல் வழக்கு அதுதான், என்று அவர் என்னிடம் கூறினார். அவரை உலகப் புகழ்பெற்ற துப்பறிவாளராக மாற்றிய நுட்பத்தை அவர் வளர்த்துக் கொண்டிருந்த தனது கல்லூரி நாட்களில் ஹோம்ஸ் எப்படி இருந்திருப்பார் என்று நான் கற்பனை செய்து பார்க்க முயன்றேன். இளமைக்கும் முதுமைக்கும் இடையிலான வேறுபாட்டைத் தவிர, இப்போது அவர் பெரிதாக மாறியிருக்க மாட்டார் என்று நான் யூகித்தேன்.
என் கையில் இருந்த தாளில் ஒரு சிறிய குறிப்பு கிறுக்கப்பட்டிருந்தது. அந்தப் புதிரான செய்தியைப் படித்துவிட்டு நான் நிமிர்ந்து பார்த்தபோது, ஹோம்ஸ் சிரித்துக்கொண்டிருந்தார்.
நீங்கள் சற்றுக் குழப்பமாகத் தெரிகிறீர்கள், வாட்ஸன்! என்றார் அவர்.
இப்படிப்பட்ட ஒரு செய்தி எப்படிப் பேரச்சத்தை உண்டாக்கும் என்று எனக்குப் புரியவில்லை என்றேன்.
இருந்தாலும் உண்மை மாறப்போவதில்லை, என்று ஹோம்ஸ் பதிலளித்தார். நல்ல திடகாத்திரமான உடல்வாகு கொண்ட அந்த முதியவர், இந்தக் கடிதத்தைப் படித்த மாத்திரத்திலேயே, யாரோ ஒருவன் துப்பாக்கியின் பின்புறக் கட்டையால் பலமாக ஓங்கி அடித்ததைப் போல நிலைகுலைந்து கீழே விழுந்து கிடந்தார்!
கல்லூரியில் எனக்கு இருந்த ஒரே நண்பன் விக்டர் மட்டும்தான். ஒருநாள் காலை நான் தேவாலயத்திற்குச் சென்றபோது, அவனுடைய 'புல்-டெரியர்' நாய் என் கணுக்காலை அப்படியே கவ்விப் பிடித்துக்கொண்டது. அதனால் பத்து நாட்கள் நான் படுத்த படுக்கையாகிவிட்டேன்.
அந்தச் சமயத்தில் அவன் அடிக்கடி என்னைப் பார்க்க வருவான். அதன் விளைவாக, ஒரு நீண்ட விடுமுறையின் போது நார்ஃபோல்க் பகுதியில் உள்ள 'கோனித்தோர்ப்' என்ற இடத்திலிருக்கும் அவனது தந்தையின் வீட்டுக்கு ஒரு மாதம் தங்குவதற்கு என்னை அழைத்தான்.
பெரியவர் ட்ரெவர் வசதியானவர், மனைவியை இழந்தவர், அந்தப் பகுதியின் கெளரவ நீதிபதி மற்றும் நிலச்சுவாந்தார். என் நண்பன் விக்டர் அவருக்கு ஒரே மகன். அவர் பெரிய படிப்பாளியாகத் தெரியவில்லை, ஆனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல பலம் கொண்டவர். நிறைய தேசங்களுக்குப் பயணம் செய்தவர். அவரது நீல நிறக் கண்கள் மூர்க்கத்தனத்தின் உச்சத்துக்கே செல்வது போன்ற கூர்மை கொண்டவை.
ஒரு மாலை நேரம், நான் ஏற்கனவே ஒரு முறையான அமைப்பாக உருவாக்கி வைத்திருந்த 'கூர்ந்து கவனித்தல்' ஊகித்து 'முடிவெடுத்தல்' முறைகளைப் பற்றி விக்டர் பேசத் தொடங்கினான். அப்போது என் துப்பறியும் முறை என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பங்கு வகிக்கும் என்று எனக்கே தெரியாது.
நான் செய்த ஒன்று அல்லது இரண்டு சிறிய சாதனைகளை விக்டர் விவரித்தபோது, அவன் மிகைப்படுத்திச் சொல்வதாக அவனது தந்தை நினைத்தார்.
மிஸ்டர் ஹோம்ஸ்! என்னைப் பற்றி உங்களால் ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா? துப்பு துலக்குவதற்கு நான் ஒரு சிறந்த ஆசாமி!
உங்களைப் பார்த்துச் சொல்ல பெரிய விஷயங்கள் ஏதுமில்லை என்றே கருதுகிறேன். ஆனால் ஒன்று... கடந்த ஒரு வருடமாக யாரோ உங்களைத் தாக்கப் போகிறார்கள் என்ற பயத்திலேயே நீங்கள் அலைந்து கொண்டிருக்கிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியும்!
உங்களிடம் மிகவும் அழகான கைத்தடி ஒன்று இருக்கிறது. அதில் செதுக்கப்பட்டுள்ள விவரங்களை நான் கவனித்தேன், அதை நீங்கள் வாங்கி இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.
ஆனால், அந்தத் தடியின் தலைப்பகுதியில் சிரமப்பட்டு ஒரு துளையிட்டு, அதற்குள் உருக்கிய ஈயத்தை ஊற்றி நிரப்பியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண கைத்தடியை இவ்வளவு பயங்கரமான ஆயுதமாக நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்."
ஏதோ ஒரு ஆபத்து உங்களை நெருங்குகிறது என்ற பயம் உங்களுக்குள் இல்லை என்றால், இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்க மாட்டீர்கள் !
(பழங்காலத்தில் மர கைத்தடிக்குள் ஈயத்தை நிரப்பி கனமான ஆயுதமாக மாற்றுவதுண்டு!)
அதுமட்டுமல்ல, J. A. என்ற முதலெழுத்துகளைக் கொண்ட ஒருவருடன் நீங்கள் மிகவும் நெருக்கமானத் தொடர்பு வைத்திருந்திருக்கிறீர்கள். ஆனால், காலப்போக்கில் அவரைப் பற்றிய நினைவுகளை உங்கள் வாழ்விலிருந்தே முற்றிலும் துடைத்தெறிய வேண்டும் என்பதில் நீங்கள் குறியாக இருந்திருக்கிறீர்கள்.
அவ்வளவுதான்! இதைக் கேட்ட மாத்திரத்தில் மிஸ்டர் ட்ரெவர் மெதுவாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார். ஒரு விசித்திரமான, வெறித்த பார்வையுடன் தனது பெரிய நீல நிறக் கண்களால் என்னையே உற்று நோக்கினார். அடுத்த நொடி, மேஜை விரிப்பின் மேல் சிதறிக் கிடந்த உணவுத் துனுக்குகளில் முகம் புதைய, அப்படியே முன்பக்கமாகச் சரிந்து மயங்கி விழுந்தார்.











No comments:
Post a Comment