Wednesday, June 28, 2017

கதையாய் ஒரு காவியம்...!

                                                        பரகுடா 1. அடிமைகள்

வாழும் கணம் நிச்சயமற்ற மானிடன் தன் மோகங்களை தீர்த்துக்கொள்ள எந்த கொடுஞ்செயலிலும் இறங்க துணிகிறான். 
சக உயிரை அடிமை கொள்ளும் போக்கு எங்கே துவங்கிற்று? இன்றும் கூட அடிமைகளை நீங்கள் காண முடியும். சரக்கு,சிலுக்கு, வண்ணத்திரை என அவற்றின் பரிணாமங்கள்தான் வேறு.


வெண்துறை, பெயருக்கு எதிராகவே குணம் இருக்கும். என்பதை மெய்ப்பிக்கும் ஒரு வாழிடம். புவியிலேயே நரகங்களை சிருஷ்டிக்கும் பிளாக்டாக், வளர்ப்பு முறைகளே மனிதனின் தன்மைகளை தீர்மானிக்கிறது என்ற கூற்றின் சான்றான ராஃபி, கொள்ளையர்களின் கப்பங்களில் தன் வளங்களை பெருக்கிக் கொள்ளும் கவர்னர், மற்றோரின் கண்ணீரிலும் சாபத்திலும் பிழைப்பைத் தேடும் அடிமை வியாபாரி பெராங்கோ, அடிமைகளை காப்பாற்றி விடத் துடிக்கும் பாதிரிகள் என்று முரண்பாடுகளின் உறைவிடம் அது.

வெண்துறையின் அடிமைகள் சந்தையும், மரியா மீது விழுந்த சவுக்கடிகளும் தரும் அதிர்வுகள் ஏராளம். லேடி ஸ்கூவபோ வாழ்க்கை எல்லாம் அதிகாரம் செய்தே வாழ்ந்திருக்கக்கூடும். மேடையில் அரை நிர்வாணமாக நின்றபோது அடிமைத்தனத்தின் குரூரத்தை அவர் உணர்ந்திருக்கக்கூடும். உள்ளத்தின் வேதனைகளே அவரது உயிரைப் பறித்தது. சில ரணங்களுக்கு மரணம்தான் மருந்தாகுமோ?

மிஸ்டர் ப்ளின் போன்ற மனிதர்கள் தங்கள் ஆழ்ந்த அமைதியின் பின்னாக வாழ்க்கை தரும் அனுபவ பாடங்களை அடைந்திருக்கக் கூடும். அவரவர்களுக்கான பாதைகளை அவரவர்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்பதும், புத்தக வாசிப்பில் ஓய்வு நேரங்களை செலவழிப்பதும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள். தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள் எல்லோருமே கோழைகளல்ல.
இளம் நெஞ்சங்களை ரணமாக்கி, விதியின் கொடிய கரங்களில் பிணைத்து, வன்மங்களை விதைத்து விட்டு தன் பேராசைகளின் வழியில் "பரகுடா" கடலோடுகிறது. அதன் இலக்கு, தொட்டவரை பலி கொள்ளும் கஷார் வைரம்.

பல ஆண்டுகளாக வாசகர்களின் நெஞ்சங்களில் பயணம் மேற்கொண்டிருந்த "பரகுடா" இன்று தன் பயணத்தை நிறைவு செய்துள்ளது. வாசித்த பின் எளிதில் கடந்து சென்று விடக்கூடிய ஒன்றல்ல இது,
தமிழ் வாசகர்கள் என்றென்றும் கொண்டாட வேண்டிய ஒரு படைப்பு. இத்தகைய சிறந்த படைப்புகள் தமிழில் வருவது அபூர்வம்.
கடற்கொள்ளையர்கள், அடிமைகள் சந்தை, புதையல்வேட்டை என அக்கால வாழ்க்கையை தத்ரூபமாக காட்சிப்படுத்தும் இத்தொடரை தயாரித்தவர்களையும் கதையின் வலிமைக்கு ஈடு கொடுத்து மொழிபெயர்த்து, கருத்துச்செறிவு மிக்க வசனங்களை அமைத்து தமிழுக்கு அர்ப்பணித்தவர்களையும் பாராட்ட சிறந்த வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.
வாசிப்பின்போது என்னுள் எழுந்த உணர்வுகளை விளக்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை.
கதையில் நான் ரசித்த சில இடங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். ஓராயிரம் வார்த்தைகளின் விளக்கத்தை சில சித்திரங்கள் சாதித்து விடும்தானே?

கதை வாசிப்பின் போது இடறலோ நெருடலோ புரியாமையோ ஏற்படவில்லை, ஒரே ஒரு சிறு எழுத்துப் பிழையைத் தவிர. 



ரத்தக்களரி.



அடிமைகள் சந்தை.















No comments:

Post a Comment