Wednesday, 2 August 2017

காமிக்ஸ் என்பதும்.... காதல் என்பதும்....


எந்த ஒரு மொழிபெயர்ப்பையும் மூன்று விதங்களில் மொழிபெயர்க்கலாம் :

1. மூலத்திற்கு எந்த வித மரியாதையும் இல்லாது தன் இஷ்டத்திற்கு கதையை மொழிபெயர்ப்பது. இதுவே தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பின் வழக்கமான பாணி. 

2. மூலத்தை ஒட்டி, அந்த அர்த்தம் சரியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் வரிக்கு வரி ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்ப்பது.

3. மூலத்தை ஒட்டி, அதன் அர்த்தம் சிதையாமல் அதே நேரம் அது மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு ஏற்றவாறு வசன நடையை அமைத்து அதை படிக்க எளிதாக மொழிபெயர்ப்பது.

இதில் இருப்பதிலேயே மூன்றாவது மிகவும் கடினமானது.  ஆனால் இதுவே சரியான மொழிபெயர்க்கும் முறை.


ஒரு விஷயத்தை பொறுப்பெடுத்து நாம் செய்ய நினைக்கும் போது அதை பலரும் பல விதங்களில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைக்கவே முயற்சிப்பார்கள். அது மனித இயல்பு.
 அதை நடைமுறைப்படுத்த விட்டோம் என்றால் அது நம் தவறே அன்றி அவர்களுடையதல்ல.

 ஒரு மொழிபெயர்ப்பாளனின் பொறுப்பு இவ்விஷயங்களில் லெட்டரிங் செய்யும் ஆட்களின் பொறுப்பையும், ஆசையையும் விட பெரியது. ஒரு கதையை அதன் ஜீவனைக் கெடுக்காது கொடுக்க வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு. மற்றவர்களுடையதல்ல.

அந்த வகையில், உருப்படியான,  மொழிபெயர்ப்பை முன்னேற்றக் கூடிய ஆலோசனைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் என்பதற்காக எல்லாம் கதையை  காவு கொடுக்க முடியாது.

 மொழிபெயர்ப்பை பொறுத்த வரையில் முடிந்த அளவுக்கு சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உருப்படியான ஆலோசனைகளை தேடிப் பெறுங்கள். ஆனால் இது போன்ற திணித்தல் விஷயங்களில் உறுதியாக இருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் மற்றவர்கள் இடம் எடுக்கத் தான் செய்வார்கள்.

மொழிபெயர்ப்பில் அர்த்தத்தை சரியாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நம் சொந்த சரக்கை திணிக்க மொழிபெயர்ப்பு சரியான இடமல்ல.  நம் சொந்த சரக்கை காட்ட வேண்டும் என்றால் நாம் கதை அல்லது கவிதை எழுதிப் பழகலாம். விஜயனைப் போல அடுத்தவர் கதையில் கை வைக்கக் கூடாது.

 மொழிபெயர்ப்பு செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது என்றால் சில காலம் கிடப்பில் போட்டு விட்டு பின்னர் ஆர்வம் இருக்கும் போது செய்யுங்கள்.  ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று அவசர இலக்கு வைத்துக் கொண்டு அதை மனதில் வைத்து செய்தால் அது உங்கள் ஆர்வத்தையும் திறனையும் பாதிக்கும்.

இவ்வளவு மெனக்கெட்டு இங்கேயுள்ள அரைகுறைப் புரிதல் உள்ள ஆட்களுக்கு செய்ய வேண்டுமா, பேசாமல் அரைகுறையாகவே செய்து விட்டுப் போகலாமே என்ற எண்ணம் சில நேரங்களில் வரலாம். அதில் தவறில்லை. நீங்கள்
 எவ்வளவு முயற்சி செய்து செய்தாலும் இங்கே பெரிதாக நன்றியோ பாராட்டோ கிடைக்கப் போவதில்லை. அதனால் அதை எதிர்பார்த்து எதையும் செய்ய வேண்டாம்.

 இந்த உறுதி, தரம் மற்றவர்களுக்கானதல்ல, நமக்கானது, நாம்  செய்யும் கதைக்கானது. பனிஷர் செய்த போது வசனங்களை தமிழுக்கு ஏற்ப மாற்றிய போது அதன் அர்த்தமோ, ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணமோ கெடாத வகையில் தான் செய்தேன். இவ்வாறு செய்வது எளிதல்ல. ஆனால் இது தான் தகுந்த முறை.

   ஒரு காமிக்ஸ்  குழுவில் வெண்டெட்டாவில் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த பதில்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அவர்களின் மொழிபெயர்ப்பில் தரம் ஏன் இருப்பதில்லை என்று.
அந்தக் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக நாமும் இருக்க வேண்டாம். நம்மைப் பார்த்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சிலர் ஆசைப்படும் அளவுக்கு நம்முடைய மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.  இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதற்கான ஒரே பலன் உங்களைப் போல, மெர்லின் செய்தவரை போல சிலர் உண்மையை உணர்ந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதில் தான் இருக்கிறது.

 நமக்கு பிடித்தவற்றை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நாம் அனைவருமே இதை செய்கிறோம். இதில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிதாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால் இன்றைக்கு முன்னோடிகளான நாம் சரியாக செய்யாவிட்டால், பின்னர் தமிழ் வாசக மொழிபெயர்ப்பு இன்று இருக்கும் நிலையில் தான் இருக்கும். கொள்கை இல்லாது, குறிக்கோள் இல்லாது, காரணம் இல்லாது, தரம் இல்லாது கும்பல் சேர்த்து பொழுது போக்கிற்காக மொக்கை போடும் மோசமான மொழிபெயர்பிற்கு சரியான வரவேற்பில்லை என்று புலம்ப மட்டுமே உபயோகப்படும் ஒரு ஜந்துவாக.

 உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு செய்யுங்கள். ஆனால் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்ய வேண்டாம். 

by illuminati blog tamil

V for vendetta தமிழில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி.
https://www.mediafire.com/download/alvzwu8ft29a20xNo comments:

Post a Comment