Thursday, January 18, 2018

அடையாளம், தொன்மங்கள்...

வாடிவாசல் திறந்து விடும்... 


                     
ஜனவரி 2017
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை நீடித்துக் கொண்டிருந்தது.

 தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க,  தமிழ் மாணவர்கள் வாடிவாசல் திறக்கும் வரை, வீடு வாசல் செல்ல மாட்டோம்.  என்று அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியை நெருங்கி விட்ட தருணம் அது.

தமிழ் மக்கள் இருளிலும் மழையிலும் குளிரிலும் வெயிலிலும் பல நாட்களாக போராடி தம் பராம்பரியத்தை மீட்டெடுத்தனர்.

 அப்படிப்பட்ட வெற்றிக்கு கவியரசு வைரமுத்துவின்  கவிதை வரிகள் :

************* வாடிவாசல்!  *************



வாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும் நீர்
    ஆராய வேண்டும்

*************************************












No comments:

Post a Comment