Saturday, November 11, 2017

கலையாத சித்திரங்கள்...

வாருங்கள் இனிய நண்பர்களே வணக்கம் !

உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றான "சிக்கன் வித் ப்ளம்ஸ் " எனக்கு நண்பர் இலுமியால் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாட்களின் எனது பரபரப்பான வாசிப்புகளின் வேகத்தில் இந்தப் படைப்பு எனக்கு இருள் அறையில் யானையை தடவிப் பார்த்த கதையாக இருந்தது. இசைக்கலைஞன் நசீர் அலியைப் பற்றிய எனது புரிதலும் கருத்துகளும்  எதிர்மறையாக இருந்தன. இன்று நிதானமாக வாசிக்கையில்தான் புரிகிறது, இது எப்பேர்ப்பட்ட காவியம் என்று... 

இந்தப்பதிவில்
 சிக்கன் வித் ப்ளம்ஸ்  கதை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.  பதிவை படித்தபின் கதையை வாசித்தால் பின்னர் கதையை வாசிக்கும்போது உங்கள் சுவாரஸ்யமும் தேடலும் குறையலாம். எனவே இந்தக்  கதையை இதுவரை  வாசிக்காதவர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி முதலில் வாசித்து விடுங்கள். 






பிறகு  இக்கதை குறித்து இரு சிறந்த வலைப்பூ எழுத்தாளர்களின் பதிவுகளை வாசித்துப் பாருங்கள்.

கனவுகளின் காதலரின் பதிவு :




Illuminati blog tamil பதிவு :




இனி நாம் பதிவை வாசிக்கலாம்...! 




என் வரவு வானத்திற்கு எந்த இறையையும் கொணரவில்லை
என் பிரிவும் அதன் மேன்மையை செழிக்கச் செய்யப் போவதில்லை
பிறப்பும் இறப்பும் இருத்தலின் ஒரு நிலையே
காரணங்களையும் கருத்துகளையும் காதுகளும் அறிந்ததில்லை

உமர்கய்யாம்


 டார் இசைக்கலைஞனான நசீர் அலி இசையை உயிராக கொண்டவன், அவனுடைய இசை நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வருமானம்  குறைவானதாக இருந்தாலும், சராசரி மனிதர்களைப்போல வேலை செய்து சம்பாதிப்பதில் நாட்டமற்று இருக்கிறான்.


 'இரான்' எனும் இளநங்கையிடம்  மனதை பறிகொடுக்கும் நசீர் அலி, அவளது அன்பையும் பெறுகிறான். 

 இரானை மணந்து கொள்ள அவளுடைய தந்தையிடம் பெண் கேட்டுச் செல்கிறான்.

நசீருக்கு நிலையான வருமானமில்லாததை குறிப்பிட்டு பெண் தர மறுத்து விடுகிறார் இரானின் தந்தை.



காதலின் தோல்வியில் துவண்டுபோன நசீர் அலி இசையில் ஆறுதலை தேடுகிறான். அவனது  நிறைவுறா காதலின் நினைவுகள் அவனது இசையில் கரைந்து வெளிப்படுகிறது.



நசீரின் நிலை கண்டு கவலை கொள்ளும் அவனது அன்னை,  நசீரை சிறுவயதிலிருந்து ஒருதலையாக நேசிக்கும் 'நாஹித்' எனும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள்.

விருப்பமின்றியே அத்திருமண வாழ்வை மேற்கொள்ளும் நசீர் அலி நான்கு குழந்தைகள் பிறந்த பின்னும் குடும்பம் என்ற ஒன்றில் பற்றற்றவனாகவே இருக்கிறான்.


அவனை விரும்பி மணந்து கொண்ட நாஹித் தான் எண்ணியது போல வாழ்வு அமையவில்லை என்பதை உணர்கிறாள்,  குடும்ப பாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதான அவளது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாத நிலையிலிருக்கிறான் அந்த "இசைக்கலைஞன் "



அவர்களிடையே நடக்கும் வாக்குவாதம் ஒன்றில் நசீரின் டார் இசைக்கருவியை உடைத்து விடுகிறாள் நாஹித். துயரத்துடன் புதிய இசைக்கருவியை வாங்க செல்லும் நசீர் கடைத்தெருவில் இரானை சந்திக்கிறான்.  அவளிடம் பேச முயலும்போது,  அவள் நசீரை அடையாளம் தெரிந்து கொண்ட போதும், அவனை தெரியாதென மறுத்துச் செல்கிறாள். 


அவள் கண்களிலிருந்து மறையும் வரை நொறுங்கிப் போன இதயத்துடன் பார்வையை நீள விட்டிருந்தான் நசீர் அலி. அவனுடைய மனதில் அன்றுவரை உருப்பெற்றிருந்த காதற்சித்திரங்கள் மெல்ல கலைந்து கொண்டிருந்தன.




நசீர் புதிய இசைக்கருவியை இசைக்க முயலும்போது இரான் அவனை மறுதலித்துச் சென்றது நினைவில் எழுகிறது.  அதுவரை காதலின் நினைவுகளுடன் ஜீவனுள்ள இசையை மீட்டிக் கொண்டிருந்த அக் கலைஞனின் இசையில் துயரத்தால் அபஸ்வரம் எழுகிறது.



அபஸ்வரத்தின் காரணத்தை புதிய இசைக்கருவி மீது போடும் நசீர் வேறு வேறு கருவிகளை வாசித்துப் பார்க்கிறான். ஒவ்வொரு முறையும் இரானின் "உங்களை தெரியலையே " என்ற வரிகள் நினைவுக்கு வந்து  இசைக்கருவி மீதே பழி போட வைக்கிறது.

இறுதியாக தொலைதூர நகரொன்றில் உள்ள சிறந்த வாத்தியம் ஒன்றினை பற்றிக் கேள்விப்பட்டு அதை வாங்க செல்கிறான்.

அக்கருவியை இசைத்துப் பார்க்கும் முன்னாக கடைக்காரன் ஓபியத்தை அலிக்கு புகைக்கத் தருகிறான். ஓபியத்தின் போதை மயக்கத்துடன் அக்கருவியை வாசிக்கும்போது இரானைப் பற்றிய துன்ப நினைவுகளை தற்காலிகமாக நினைவில் கொள்ளாத நசீர் அந்த இசைக்கருவியில் திருப்தி கொண்டு அதை வாங்கி வருகிறான்.


மறுநாள் புதிய மனிதனைப் போல தன்னை தயார் செய்து கொள்ளும் நசீர் இசைக்கருவியை மீட்டத் துவங்குகிறான்.  

ஆனால்... ஆனால்...  அவனுடைய மனதில் அழியா சித்திரமாக பதிந்து விட்ட இரானின் வார்த்தைகள் அவனை துவளச் செய்கிறது.


இனி ஒருபோதும் அந்த சித்திரங்கள் அழியப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட நசீர் மரணத்தில் அமைதியை தேட தீர்மானிக்கிறான்.

அடுத்த எட்டு நாட்களில் மரணம் அவனை வந்தடைகிறது.

மரணம் தன்னை தேடி வரும் வரை காத்திருக்க தீர்மானிக்கிறான் நசீர்.   அவனுடைய மரணத்துக்குப் பின் அவனுடைய குழந்தைகளின் நிலை என்னாகும்? என்ற வாசகனின் வலி நிறைந்த கேள்விக்கு
முதல் நாளில் நசீரின்  செல்ல மகள் பர்சானாவின் எதிர்காலம் விவரிக்கப்படுகிறது.

 மரணத்திலிருந்து தப்பிக்க மீண்டும் ஒருமுறை இசைக்கருவியை வாசிக்க முயன்று தோற்றுப் போகிறான் நசீர்.

இரண்டாம் நாளில் நசீரின் சகோதரன் அப்டி நசீரை காண வருகிறான்.  நசீருக்கு குடும்பம் மீதுள்ள பொறுப்புகளை பற்றி அறிவுரை சொல்கிறான்.

அப்டியிடம் "தனக்கு அறிவுரை சொல்ல. உனக்கு என்ன தகுதி உள்ளது?" என அப்டியின் கடந்த கால பொறுப்பற்ற செயல்களை சுட்டிக் காட்டுகிறான் நசீர்.

தன் தவறுகளை உணரும் அப்டியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் நசீர் தன்னுடைய மரணத்துக்குப் பின் தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறான் . அன்றைய இரவில் தன் குழந்தைளைப்பற்றிய கவலைளின்றி தனக்குப் பிடித்த கனவுக்கன்னியின் கனவுகளுடன் நிம்மதியாக உறங்கினான்.


மூன்றாவது நாள் :

 நாஹித் நசீருக்குப் பிடித்த சிக்கனும் ப்ளம்ஸ் பழங்களும் சமைத்து எடுத்து வருகிறாள். அவனிடம் தனக்கு சிறு வயது முதல் இருந்த காதலை எடுத்துச் சொல்லி அவன் மனதை மாற்ற முயல்கிறாள். 

ஆனால் நசீருக்கு அவள் தன் வாத்தியத்தை உடைத்ததே மீண்டும் மீண்டும் நினைவில் எழுகிறது. தன் அபஸ்வரத்தின் ஆரம்பமாக அவளை கருதும் நசீர் அவளை வெளியேற சொல்கிறான்.  துயரத்துடன் சென்று விடுகிறாள் நாஹித்.

நான்காம் நாளில் நசீரின் கடைசி மகன் மொசாபரின் எதிர்காலம் விவரிக்கப்படுகிறது.

அவற்றைக் காண நசீர் அலி உயிரோடு இல்லை என்பது நசீருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

ஐந்தாம் நாள்

வாழ்க்கையில் யானையை இருளில் தடவிப் பார்த்த கதையாகதான் நமது புரிதல் இருக்கிறது. புரியாத எதையும் கேட்டுத் தெளிவு பெறுவதே முழுமையாகப் புரிய வைக்கும்.




ஆறாம் நாள் :

விதிக்கப்பட்டது எதுவோ அதுவே நடக்கிறது, அது நடந்தே தீரும்.




ஏழாம் நாள் :

தன்னுடைய தங்கைக்கு உதவி தேவைப்பட்ட நேரத்தில் உதவி, அந்த ஒரு விஷயத்திலேனும் தான் பயனுள்ளவனாக இருந்ததாக ஆறுதல் கொள்கிறான்.

எட்டாவது நாளில் இறந்து போகிறான்.

...முன் சென்றோரில் திரும்பியவர் எவரும்
 கடந்த பாதையை சொன்னாருமில்லை
வரும் செயல்களை தடுத்தாரும் இல்லை
முன் சென்றோரில் திரும்பினார் இல்லை....

உமர்கய்யாம்






இப்பூமி ஒரு ரகசியத்தை எமக்கு அறியத் தர முன் வருமானால், எமது கேள்வி இதுவாக இருக்கும்.

"இரான் நசீரை அறிந்து கொண்டும் அறியாதவளைப்போல வேடம் கொண்டதன் காரணம் என்ன? "


                 *******நிறைவு******

.....மெளனத்தில் ஏதோ சத்தம் - அடி
உன்னால் எனக்குள்ளே யுத்தம்.....

1 comment:

  1. அற்புதமான விமர்சனம்.

    உங்கள் எச்சரிக்கையை மீதி விமர்சனத்தை படித்துவிட்டு கதையை படித்தேன் உங்களது விமர்சனத்தின் வீரியம் கதையில் அவ்வளவாக இல்லை.
    மிக்க நன்றி

    ReplyDelete