Saturday, September 25, 2021

2,விதியின் குரல்

 


அதிகாரம் தன்  காலடியில் குழப்பத்தைக் கண்டெடுக்கும்போது, தன் ஒழுங்கு என்னும் முகமூடியைக் காப்பாற்றிக்கொள்ள எவ்விதமான கீழ்த்தரமான நடவடிக்கையிலும் இறங்கும்.

V foe vendetta 

இந்த அத்தியாயத்தில் நோர்ஸ்ஃபயர் அரசின் முக்கிய தலைவர்கள் சிலரை அறிமுகம் செய்து கொள்வோம். 

கிராஃபிக் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் சித்திரங்களல்ல.

நேரில் பழகும் மனிதர்களைப்போல அவர்களை அவர்களுடைய குணாதிசயங்களோடு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


இவர்தான் 'தலைவர்'.  'விதி' கம்ப்யூட்டரின் உத்தரவுகளை செயல்படுத்துபவர்.
இவரைப்பற்றிய விவரங்களை சில அத்தியாயங்களின் பின்பாக நாம் அறிய முடியும்.
 கான்ராட் ஹேயர். வீடியோ கண்காணிப்பு 'கண்' துறையின் தலைவர். 


 பிரையன் ஈதரிட்ஜ். தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்புத்துறையான 'காதுகளி'ன் தலைவர். 


 எரிக் ஃபின்ச். தடயவியல் துறையான 'மூக்கு' ன் தலைவர். 
அரசு அதிகாரிதான் என்றபோதிலும் அரசின் கொள்கைகளோடு முரண்படுபவர்.

டெரக் அல்மோன்ட். போலீஸ் துறையான 'ஃபிங்கர்ஸ்'ன் தலைவர். 

 ரோஜர் டாஸ்கோம்ப். விதியின் குரல் ஒலிபரப்பப்படும் ஜோர்டான் டவரின் தலைமை அதிகாரி. 



இது ஒரு சிலேடையான நகைச்சுவை.

ஆங்கிலத்தில் Bitter என்பது கசப்பு என்பதைக் குறிக்கவும், வெறுப்பினால் உருவான கசப்பான மனநிலை என்பதைக் குறிக்கவும் இங்கே உபயோகிக்கப்படுகிறது.

You are bitter Almond என்பதும் Bitter Almond என்பதும் இங்கே உபயோகிக்கப்பட்ட சிலேடை. நீ வெறுப்பினால் கசந்து போயிருக்கிறாய் அல்மோண்ட் என்பதும், கசப்பான அல்மோண்ட் (கசப்புச்சுவை கொண்ட பாதாம் பருப்பு.) என்பதையும் கலந்து டாஸ்கோம்ப் அல்மோண்டை இங்கே சிறுபிள்ளைத்தனமாக பகடி செய்கிறான்.




'விதியை நம்பு'

நகைக்கடைகளிலும் பைனான்ஸ் கம்பெனிகளிலும் 'எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்' என்பதாக விளம்பரம் செய்திருப்பார்கள்.

அது போன்ற ஒரு ஸ்லோகம் இது.

கம்ப்யூட்டர் 'விதி' மீது நம்பிக்கை வையுங்கள்.


இவர்  லூயிஸ் ப்ரொதெரோ.

 கம்ப்யூட்டர் 'விதி'க்காக ரேடியோவில் குரல் கொடுப்பவர். இவரது குரலை கம்ப்யூட்டர் 'விதி'யின் குரலாகவும், 'விதி'யை அனைத்தும் அறிந்த சர்வ வல்லமை படைத்த ஒன்றாகவும் பொதுமக்கள் நம்புகின்றனர்.




Norsefire அரசின்  முக்கியமான அடையாளம் 'விதியின் குரல்'.

நேரடியாக அறியப்படாத 'விதியின் குரல்' போன்ற மர்மங்கள், அவை மிகவும் சக்தி வாய்ந்தவை என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். 

இந்த அமைப்பில் உள்ள ஒரு பலவீனம், நோர்ஸ்ஃபயர் அரசு ஒரு தனி மனிதனின் குரலைச் சார்ந்துள்ளது.
 'விதி'யின் குரலில் மாற்றம் ஏற்பட்டால் பொது மக்களிடையே 'விதி'க்கு என்ன ஆனது என்ற கேள்வி எழும். அரசு மீதான நம்பிக்கை குறையும்.


***********

ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புக்கும் அது இடம்பெறும் பக்கத்திலுள்ள நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டு.

முதல் அத்தியாயத்தில் V யின் முழுத் தோற்றம் அறிமுகமாகும் போது 'வில்லன்' என்ற தலைப்பு.

அதாவது அராஜக ஆட்சியாளர்களுக்கு V வில்லன்.

இரண்டாம் அத்தியாயத்தில் 'விதி ரேடியோ' அலைவரிசைக்கு குரல் கொடுக்கும் லூயிஸ் அறிமுகமாகும் போது 'விதியின் குரல்' என்ற தலைப்பு.

மற்ற அத்தியாயங்களிலும் கூட நீங்கள் இப்படி தலைப்பு பக்கத்தின் காட்சியுடன் பொருந்துவதைக் காண முடியும். 



 
பொதுமக்களை வந்தடையும் செய்திகள் எந்த அளவுக்கு தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன என்பதை இந்தக் கட்டங்கள் விவரிக்கின்றன.




"அவர்கள் கலாச்சாரத்தை வேரோடு அழித்து விட்டார்கள்.
இறந்த ரோஜாக்களைத் தூக்கியெறிவது போல..."


நோர்ஸ்ஃபயர் அரசில் மதவாதத்துக்கு முக்கிய இடம் உண்டு. அந்த அரசு பிற இனங்களை அவர்களுடைய கலாச்சாரங்களோடு வேரோடு அழித்தது.
அது எத்தனை மேம்பட்டதாக இருந்த போதிலும்...


இசை இல்லை...
பாடல்கள் இல்லை...

சதாகாலமும் ஒலிக்கும் தலைவனின் பிரச்சாரம் மட்டுமே. 

அந்தப் பிரச்சாரத்துக்கு ஒரு முடிவு கட்ட V தீர்மானித்தான்.

அவனுடைய அடுத்த இலக்கு லூயிஸ் ப்ரொதெரோ 'விதியின் குரல்'



நான் கவனிக்கல...

ரயிலில் ஏற வரும் சராசரி மனிதன் முகத்துக்கு நேராக துப்பாக்கி நீட்டப்பட்ட பின்புதான் அந்தப்  பெட்டியில் அதிகாரத்தின் அடிவருடிகள் பயணிப்பதை உணருகிறான்.

அதிகாரத்தில் உள்ளவர்களின்அகம்பாவத்தையும், பொதுமக்கள் மீதான அவர்களுடைய அலட்சியப் பார்வையையும்,
எளிய மனிதர்கள் அதிகாரத்துக்கு அஞ்சி ஒதுங்குவதையும் இக்காட்சியில் உணரலாம்.



லூயிஸ் விதியின் குரலாக பேசும்போது அதிகாரமும் ஆளுமையுமாக கச்சிதமாக ஒலிக்கிறார் .

ஆனால் பொதுவாழ்வில் அவர் சொன்னதையே திரும்பச் சொல்லும் ஒரு வளவளா ஆசாமி. 

பொம்மைகள் மீதான பிரியம்கூட அவருக்கு மனிதர்கள் மீது கிடையாது.
அதிகார வர்க்கம் பெரும்பாலும் இதுபோன்ற ஈரமற்றவர்களாலேயே நிரம்பியுள்ளது.



பொம்மைகள் பற்றிய அக்கறையிலும், செக்ஸ் ஜோக்குகளிலும் மூழ்கியுள்ள அவர் தன்னைச் சூழ்ந்து வரும் ஆபத்தை உணர்ந்தாரில்லை...





தொடரும்...


No comments:

Post a Comment