Tuesday, May 31, 2022

கண்ணாமூச்சி ரே...ரே...


பல நுழைவாயில்கள் கொண்ட புல்வெளிநாய்களின் கைவிடப்பட்ட வளை ஒன்றை கண்டு பிடிக்கும் லிண்டன் மரம், கறுப்பு முகமூடி, இரட்டைக் கரடிக்குட்டிகளான ஹக்கிள் மற்றும் பெர்ரி ஆகியோர் அதன் மூலம் யகரியிடம் குறும்பு செய்து மகிழ்கின்றனர்.

பின்னர் மேலூம் வேடிக்கையான குறும்புளை ஹக்கிள் பெர்ரியின் பெற்றோரான பேராசைத் தேனியிடமும்  தேன் நிலவிடமும் நிகழ்த்தும்போது எதிர்பாராத விதமாக வளையின் மேற்பகுதி இடிந்து விழுந்து நுழைவாயில்கள் மூடிக்கொள்கின்றன. 
பெர்ரியும் கறுப்பு முகமூடியும் வளைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். 

யகரி புல்வெளிநாய்களை உதவிக்கு அழைத்து வந்து இருவரையும் மீட்கிறான்.

கதையின் முதல்பகுதி  நகைச்சுவையாகவும் இறுதிப்பகுதி பதைபதைப்பாகவும் நகர்கிறது.


குறும்பான விளையாட்டுகள் ஆபத்தில் முடியக்கூடும் என்பதை அந்த சிறிய பிள்ளைகள் இப்போது புரிந்துகொண்டிருக்கலாம்.  
என்னைப் பொறுத்தவரை , எல்லாம் நன்றாகவே முடிந்தது நான் இனி நிம்மதியாக உறங்கப் போகிறேன் !





Prairie dog


தரை நாய் (Prairie dog) என்பது வட அமெரிக்காவில் கனடா மற்றும் மெக்சிகோ பகுதியில் பிரெய்ரி என்ற நெடும் பரப்புப் புல்வெளியில் வாழும் எலி வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும். இதனை பிரெய்ரி நாய் என்றும் அழைப்பர். இதற்கு நாய் எனப் பெயர் இருப்பினும் இது நாய் இனத்திலிருந்து உருவத்திலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் வேறுபட்டது.


மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும் புல்வெளி நாய்கள்







*****


Monday, May 30, 2022

மஞ்சள் சட்டை மன்மதன்!

 



உயிரோடு பிடித்துக் கொடுத்தால் ஐயாயிரம் டாலர்கள் வெகுமதி என்ற அறிவிப்புடன் லக்கிலூக்கின் சுவரொட்டிகள் பரவுகின்றன.

சுதந்திர நகருக்கு புதுவாழ்க்கை தேடிச் செல்லும் ஆஞ்சி, போனி, செர்ரி என்ற மூன்று பெண்களுக்கு பயணத் துணைவனாக லக்கிலூக் உதவுகிறார். அந்நகரமோ பாழடைந்த நிலையில் சமூக விரோதிகளின் ஆக்ரமிப்பில் உள்ளது.

வெகுமதி வேட்டையன்
செவ்விந்தியர்
சமூகவிரோதிகள் 
இராணுவம் என பலரும்  துரத்த ஏராளமான நிகழ்வுகளுக்குப் பின்  அந்த சுவரொட்டி மோசடியான ஏற்பாடு என தெரியவந்து லக்கிலூக் விடுவிக்கப்படுகிறார்.


அப்போது சுதந்திர நகரின் வழியாக விரைவில் இரயில்பாதை வருவதும் அங்கே ஒரு இரயில் நிலையம் அமைய இருப்பதும்  தெரியவருகிறது. இனி அந்நகரமும் அப்பெண்களின் வாழ்வும் புத்துயிர் பெறும்.




லக்கிலூக் மீது காதல் கொள்ளும் செர்ரி லக்கிக்கு நேசிக்கப்படுவதன் மூலம் நேசிப்பதன் சுவையை கற்றுத்தர முன் வருகிறாள், ஆனால் குடும்பம் என்ற ஒன்றில் பிணைக்கப்படுவதை விரும்பாத அந்த மஞ்சள் சட்டை மன்மதன் வழமை போல பெண்களின் மனதில் ஆறாத இரணத்தை ஏற்படுத்திச் செல்பவனாகவே இருக்கிறான்.



நான் ஒரு தன்னந்தனி குதிரைவீரன்...
தனிமை எனக்குத் தொல்லையில்லை....
பெண்கள் மீது வெறுப்பில்லை...
விடைபெற்றுக்கொள்வேன்,
பிணைத்துக்கொள்ள விரும்பவில்லை...
துணையாக ஒரு குதிரையுண்டு,
எங்கள் பயணம் முடிவதில்லை....

வாயை மூடு!
உன் நிழலை விட வேகமாக நீ சுடும்போது அது சண்டையில்லை, மரணதண்டனை. 


நிறுத்தி விட்ட புகைப்பழக்கத்தை தூண்டுகிறதே! 

*****

Friday, May 27, 2022

வெற்றி பெற விரும்பு!

 


யகரியின் உற்ற தோழனான இடிக்குட்டி குதிரைகளின் பெரும் ஆவியின் அழைப்பின்படி தன்னுடைய திறமைகளின் எல்லைகளை விரித்துக் கொள்ள யகரியை பிரிந்து பயணமாகிறது.

இடிக்குட்டியை  தேடியலையும் யகரி எவ்வளவு முயன்றும் தன் முயற்சியில் வென்றானில்லை. சோகத்துடன் தன் குடியிருப்புக்குத் திரும்புகிறான்.
அவனுடைய சாகஸங்கள் நிறைந்த  வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்த முதல் தோல்வி அது.

இடிக்குட்டி, காட்டாற்று வெள்ளம்,  பனிமலை, புதிர்ப்பாதை, நெருப்பு ஆகிய வாழ்வா சாவா போராட்டங்களில் தான் யகரியை மீண்டும் சந்திப்போமா என்பதே கேள்விக்குறியான தருணங்களிலும், வெற்றி ஒன்றே குறிக்கோளாக உயிரைப் பணயம் வைத்து வென்று யகரியிடம் திரும்புகிறது.

இடிக்குட்டியிடம் யகரி கேட்டான்: 
என்னிடம் ஏன் சொல்லிவிட்டுச் செல்லவில்லை?

இடிக்குட்டி சொன்னது: 
அது ஒரு இரகசியம் யகரி!

ஆம்! அது இடிக்குட்டியின் இரகசியம்...








காதல் கொல்ல வந்தேன்...

 


1, The heisei holmes

இருண்ட குகைப்பகுதியில் ஓடும் ரோலர் ஹோஸ்டரில் தலை துண்டிக்கப்பட்டு ஒரு கொலை நடக்கிறது. முதலில் ஈரமான நீர்த்துளிகளும் பின்னர் சூடான குறுதித்துளிகளும் கொனானின் முகத்தில் தெரிக்கின்றன. 

கத்தி ஒன்றும் கண்டு பிடிக்கப்படுகிறது, ஆனால் அக்கொலை கத்தியால் நிகழ்த்தப்பட்டதல்ல.



தன்னுடைய திறமையால் கொலை நடந்த விதத்தையும் கொலையாளியையும் கண்டு பிடிக்கிறார் கொனான்.



******



Thursday, May 26, 2022

வானவில்லை காணவில்லை...



சியோக்ஸ் கிராமத்தின் ஓரிரவுக் கூட்டத்தில் ஊர் சுற்றிப் பெரியவர் தான் பனிமலைக்கு சென்று வந்ததையும் அங்கு அனைத்தும் வெண்மையாக இருந்ததையும் வெள்ளைக் கரடிகளை கண்டு வந்ததையும் விவரிக்கிறார்.

அதைக் கேட்கும் வானவில் தானும் வெள்ளைக்கரடிகளை காணும் ஆவலில் மந்திரக்காலணிகளின் உதவியுடன் பனிநிலத்தை தேடிச் செல்கிறாள்.

அவளது குலதெய்வமும் பாதுகாவலருமான பெரும் முயலார் நானாபோஸாவும் யகரியும் அவளை தேடி புறப்பட்டனர். 

வானவில்லின் சுவடுகளை தொடர்ந்தும் மந்தி அம்பின் வழிகாட்டுதலிலும் கடுமையாக பயணம் செய்து அவர்கள் வானவில்லிடம் சென்றடைந்தனர்.

அவர்களை மந்திரப்படகு ஒன்று பனிநிலத்திற்கு பறந்து சேர்த்தது. அங்கே அவர்கள் வெள்ளைக்கரடிகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.




இதுவரை நான் வாசித்த யகரியின் கதைகளில் இயற்கை அபாயங்கள், காட்டு விலங்குகளின் வாழ்க்கை முறைகள் போன்ற கதை சொல்லலிருந்து இக்கதை மாறுபட்டு மாயாஜாலம் அதிகம் உள்ளது. இறுதியில் அனைத்தும் கனவுதான் என்றே கதையும் முடிகிறது.




 
Nanabhzo

அனிஷினாபே ஆதிசூகானில் (பாரம்பரிய கதைசொல்லல்), குறிப்பாக ஓஜிப்வேயில், நானாபுஷ் என்றும் அழைக்கப்படும் நானாபோஜோ ([nɐˌnɐbʊˈʒʊ]), ஒரு ஆவியாகும், மேலும் உலக உருவாக்கத்தின் கதை உட்பட அவர்களின் கதைசொல்லலில் முக்கிய இடம் வகிக்கிறது.  நானாபோஜோ ஓஜிப்வே தந்திர உருவம் மற்றும் கலாச்சார நாயகன் (இந்த இரண்டு தொல்பொருள்களும் பெரும்பாலும் முதல் நாடுகளின் புராணங்களில், மற்றவற்றுடன் ஒரே உருவமாக இணைக்கப்படுகின்றன).

நானாபுஷ் என்றும் அழைக்கப்படும் நானாபோசோ, பல ஃபர்ஸ்ட் நேஷன் கதை சொல்லல்களில் ஒரு தந்திரமான நபர்.  கதைசொல்லல் மூலம் நானாபுஷைப் பயன்படுத்துவது பொழுதுபோக்காக இருந்தாலும், தகவல் மற்றும் பொதுவான வாழ்க்கைப் பாடங்களைக் கடத்துவதற்கான ஒரு வழியாக இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.  நானாபோஜோ கதை சொல்லலில் ஆண் அல்லது பெண் விலங்குகள் அல்லது மனிதர்களின் வடிவத்தை எடுக்க முடியும்.  மிகவும் பொதுவாக அவை பழங்குடியினருக்கு அருகில் வாழும் காக்கை அல்லது சிறுநரி போன்ற விலங்குகள். அவை பிடிப்பதை கடினமாக்கும் அளவுக்கு தந்திரமானவை




Word: kayak

Tamil Meaning: எஸ்கிமோக்களால் பயன்படுத்தப்படும் பனிப் படகு.

 



இங்கே க்ளிக்! 

பனிக்கரடி





*******


Wednesday, May 25, 2022

லக்கிலூக்கை மீட்டது யார்?



காவல் அதிகாரிகளான மூன்று சகோதரர்களால் ஆயுதங்கள் நுழைய  தடை விதிக்கப்பட்ட தவளை நகரத்துக்குச் செல்லும் லக்கிலூக் நகர மக்களின் வேண்டுகோளின்படி  சமீபத்தில் நிகழ்ந்த கோச்சுவண்டி கொள்ளை ஒன்றின் தடங்களை தேடி  கண்டறியும் பணியில் ஈடுபடுகிறார்.

அத்தடங்கள் நகர காவல் அதிகாரியின் அதிகார வரம்பை கடந்து செல்கின்றன.

அந்நகரில் புகையிலை கிடைப்பது அரிதாக உள்ளது. புகைப்பழக்கம் கொண்ட லக்கிலூக்குக்கு கிடைக்கும் சிறிதளவு புகையிலைகளையும் சந்தர்ப்பங்கள் பாழ் செய்கின்றன.


மதுச்சாலையில் லக்கிக்கு அறிமுகமாகும் மருத்துவர் "புதன்கிழமை"  அளவு மீறிய மதுவும் புகையும் தன்னை சீரழித்ததைக் கூறி லக்கியை புகைப்பழக்கதை கைவிடச் சொல்கிறார்.

லக்கியின் விசாரணைகள் சட்டத்தின் காவலர்களையே குற்றவாளிகளாக்கி "நீயா நானா" சவாலில் நிறுத்துகிறது. 

தன்னுடைய  துப்பாக்கியை திருட்டுக்கொடுத்து மாற்றுத் துப்பாக்கியோடும்,  புகை பிடிக்க வழியில்லாததால் ஏற்பட்ட கை நடுக்கத்தோடும் சவாலை எதிர்கொள்ள தயாராகிறார் லக்கிலூக்.

ஆனால் மருத்துவர் புதன்கிழமை கொள்ளும் ஒரு  மாற்று சிந்தனை லக்கியை மரணத்திலிருந்து  மீட்கிறது.
இருமுறை...

முதுகில் சுட்டுக்கொல்லப்படுவதிலிருந்தும்...

புகைப்பழக்கத்தின் மெதுவான மரணத்திலிருந்தும்...










Saturday, May 21, 2022

நதியில் தொலைந்த ஞாபகம்...

 



முதுவேனிற்காலத்தில்  கானக மரங்கள் சிவப்பும் தங்கநிறமுமாக  நிகழ்த்திக் கொண்டிருந்த மாயாஜாலத்தினூடாக பயணித்துக் கொண்டிருந்த யகரியும் இடிக்குட்டியும். ஆற்றின் குறுக்கே நீண்டிருந்த ஒரு மரக்கிளையில் கரடிக்குட்டி ஒன்று ஆபத்தான நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்ததை காண்கின்றனர்.



பீதியில் உறைந்து போயிருந்த அந்தக்குட்டி கரைக்கு திரும்ப முடியாதவாறு அதிர்ச்சியில் செயலிழந்து போயிருந்தது.

அதைக் காப்பாற்ற யகரி முயலும்போது, மரக்கிளை முறிந்து  ஆற்றில் விழுந்த யகரியும் கரடிக்குட்டியும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

வெள்ளத்தின் வேகத்தில் கரைக்கு ஒதுக்கப்பட்ட கரடிக்குட்டி காட்டுக்குள் ஓடி மறைகிறது. யகரியோ தலையில் அடிபட்டு மயக்கமடைகிறான். 

யகரியை காப்பாற்ற முயலும் இடிக்குட்டியின் முயற்சி தோல்வியடைகிறது.

குட்டிக்கரடியான தேன்கூட்டின் தாய்க்கரடி ஆற்றில் அடித்துச்செல்லப்படும் யகரியை காப்பாற்றுகிறது.



தலையில் அடிபட்டதால் நினைவாற்றலை இழந்துள்ள யகரியை தன்னுடைய குட்டிக்கரடி 'தேன்கூடு' என நினைக்கும் தாய்க்கரடி அவனுக்கு கரடிகளுக்கான வாழ்க்கை பயிற்சிகளை அளிக்கிறது. 



ஒரு கரடிக்குட்டியைப்போல நடந்து கொள்ள சிரமப்படும் யகரிக்கு மீண்டும் தலையில் அடிபட்டு நினைவாற்றல் திரும்புகிறது.



உண்மை நிலையை புரிந்து கொள்ளும் யகரி, தன்னை தேடிவரும் இடிக்குட்டி, எருமைவிதை மற்றும் வானவில்லின் உதவியுடன்  குட்டிக்கரடியை தேடிக்கண்டு பிடித்து தாய்க்கரடியுடன் சேர்த்து வைத்து விட்டு தன் குடியிருப்புக்குத் திரும்புகிறான்.


*****


Friday, May 20, 2022

பழி வாங்கும் பச்சோந்தி!

 




பழிவாங்குதல் என்பது மிகவும் சக்தி வாய்ந்த நோக்கம். ஆனால் அந்த நோக்கத்தில் நீதி இருக்க வேண்டும்.
 
அநீதியும் வன்மமும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் பதியப்பட்டு நினைவுகூறப்படும்போதெல்லாம் கசப்பையும் அறுவெறுப்பையுமே பிறப்பிக்கும்...

திகில் 28, மர்ம முத்திரை கதையில் கமிஷனர் போர்டனால் சிறையில் அடைக்கப்பட்ட சமூகவிரோதி  'பச்சோந்தி என்ற புனைப்பெயர் கொண்ட பியரட் வால்கன்' சிறையில்  மாண்டு போகிறான்.  






அவனால் சிலகாலம் முன் தத்தெடுக்கப்பட்ட  'பிலிப்பி மானியர்'  என்ற இளைஞன் கமிஷனர் போர்டனை பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையில் சேர்ந்து கமிஷனரை கடத்தி கொல்ல முயன்றதை வாசித்திருப்பீர்கள்.

அந்த சதிச்செயல் ஜானியால் முறியடிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் மானியர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த R.I.P. Ric!  கதையில் அறுவை சிகிச்சை மூலம்  ஜானியைப்போல  தன் முகத்தோற்றத்தை மாற்றிக் கொண்டு இன்ஸ்பெக்டர் மானியர் மீண்டும் வருகிறான்.

ஜானியை தாக்கி  மறைத்து வைத்து விட்டு அவனது பாத்திரத்தை தான் எடுத்துக் கொள்கிறான்.

ஆனால் மானியர் தன்னுடைய புதிய அவதாரத்தில் ஜானியில் நண்பர்களை மட்டுமின்றி எதிரிகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
 தன்னுடைய பாதைகளின் தடைகளை அழிப்பதில் அவன் தயக்கமோ தாமதமோ காட்டுவதில்லை.


கமிஷனர் போர்டன் தன்னுடைய பணி ஓய்வு பெறும் இறுதி நாட்களில் பெடுலா எனும் (முன்னாள் சிறைப்பறவை) இளநங்கையை திருமணம் செய்து கொள்ளும் துடிப்பில் இருக்கிறார்.

நாடீன் கதாபாத்திரம் முந்தைய கதைகளை விடவும் சுதந்திரமாகவும் உல்லாச விரும்பியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜானி என தான் நம்பும் நபருடன் இளமை விளையாட்டில் ஈடுபடும் அளவுக்கு....

மானியரின் திட்டப்படி கமிஷனர் போர்டன் பெடுலாவின் திருமண விருந்தில் பெடுலா கொல்லப்படுகிறாள். கமிஷனரை கொன்று விட்டு அந்நிகழ்வுகளுக்கான பழியை ஜானி மீது சுமத்தி விட்டு தான் மறைந்து விட மானியர் சம்பவங்களை நிகழ்த்தியபோதும் அவனது திட்டம் தோல்வியடைகிறது.
R.I.P. மானியர்! 



பெண்கள் எளிதில் திருப்தி அடைவதில்லை.


டிரஸ்ஸிங் ரூம் சுவற்றில் சைலன்ஸர் துப்பாக்கியை நுழைக்கும் அளவுக்கு துளை இருக்குமா? அல்லது துளை போடும் உபகரணத்துடன் வந்து துளை போட்டானா?


இன்னாம்மா நாடீன் கண்ணு,  ஜானி கூட நீச்சல் விளையாடனும்னா நீச்சல் உபகரணம் ரெண்டு வேணுமில்லையா?


கமிஷனர் போர்டனுக்கு இப்படி ஒரு அடியா???



ஒருத்தனை ஒழிச்சுக் கட்டுன பிறகு இப்படி கேட்குறீங்களே கமிஷனர்? 








என் உயிர்...
நீ என் உயிர்...

என் சந்தோஷம்...
என் ஒரே சந்தோஷம்...

ஓ... நான் தந்திரங்களை வெறுக்கிறேன்...
 வஞ்சனையையும் ஏமாற்றுதலையும்...

இல்லை, எனக்கு நேரமில்லை...
 அற்பத்தனத்துக்கும் தந்திரத்துக்கும்...

செலவில் கணக்கு தேவையில்லை...
 கொடுப்பதில் தவறுமில்லை...

வாழும் வரை நேசியுங்கள்...
வாழும்போதே நேசியுங்கள்...

என் உயிர்...
நீ என் உயிர்...

என் சந்தோஷம்...
 என் ஒரே சந்தோஷம்...







இங்கே 'கிளிக்'கவும்.

Claude Monet