Friday, February 11, 2022

பீவெர்களின் கிராமம்

 





அந்த கோடைக்காலம் சியோக்ஸ் முகாமில் அமைதியாக கழிந்து கொண்டிருந்தது.







  இடிக்குட்டியும் யகரியும் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் சிறிது விளையாடிய பின் நதியின் முடிவுப்பகுதிக்கு சென்று பார்க்க விரும்பினர்.

வழியில் ஆற்றின் குறுக்கே பாலம் போன்று அமைந்திருந்த மரக்கட்டைகளின் குவியல் மீது ஏறி கடக்க முயலும்போது ஆயிரம் வாயன் எனும் பீவெர்   'பொறுக்கிகளே மற்றவர்களின் வேலையைக் கெடுக்காதீர்கள். சீக்கிரம் கீழே இறங்குங்கள் கொள்ளைக்காரர்கள் , நாசக்காரர்கள்'  என பலவாறு அர்ச்சனை செய்தான்.

குழப்பமுற்ற யகரியும்  இடிக்குட்டியும் மரக்கட்டைகள் மீதிருந்து கீழே இறங்கினர். 

 அப்போது ' என்ன நடக்கிறது? ' என கேட்டவாறு வரும்  மர அணை என்ற  பீவெரிடம் ஆயிரம் வாயன்  ' இந்த பிடரி மயிர் கொண்ட நான்கு கால் பிராணியும், இறகு அணிந்த இரண்டுகால் பிராணியும் அணை மீது ஏறி வேலையை நாசம் செய்கின்றனர்' என புகார் செய்தான். 

அணையை பரிசோதித்த மரஅணை, 'தீவிரமான பாதிப்பு ஏதுமில்லை' என ஆயிரம் வாயனை அமைதிப்படுத்தி விட்டு,  யகரியும் இடிக்குட்டியும் பயந்து ஓடிப்போகாமல் இருந்ததை பாராட்டினார்.  பின்னர், தாங்கள் பீவெர் பழங்குடிகள் என்றும் அங்கு அணை கட்டி வசிக்கப் போவதாகவும்  யகரிக்கு விளக்கினார்.

 ' தண்ணீரிலா வசிக்கப் போகிறீர்கள்?' என வியப்புடன் கேட்டான் யகரி.




அப்போது சில  பீவெர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்தன. ஆயிரம் வாயன் 'வேலை செய்பவர்களின் பாதையை மறிக்காமல்   ஒதுங்கி இருங்கள்'  என்று சிடுசிடுத்தான்.

பீவெர்களில் ஒன்று இடிக்குட்டி  மீது சவாரி செய்ய ஆசைப்பட்டது. யகரியும் சம்மதித்தான். அதைப்பார்த்த மற்ற பீவெர்களும் ஆயிரம் வாயனின் ' வேலை என்னாகிறது?' என்ற புலம்பலை மீறி இடிக்குட்டி மீது ஏறி அமர்ந்தன.




இதனால் கடுப்பான இடிக்குட்டி  'உங்களுக்கு குதிரைச்சவாரி வேணுமோ?' என்று புன்னகையுடன் கேட்டு,  புயல் வேகத்தில் கிளம்பியது. அதன் பாய்ச்சலில் பீவெர்கள் ஒவ்வொன்றாக தூக்கியெறியப்பட்டன. இடிக்குட்டியின் பாதையில் அணை குறுக்கிட,  ஆயிரம் வாயன் அணையின் கதியைப்பற்றி  கவலைப்பட்டுக் கதற, இடிக்குட்டி ஒரே தாவலில் அணையை தாண்டி சாகஸம் செய்தது. 

  ஆயிரம் வாயன் ' அந்தக்குதிரை என்னை வெறிகொள்ளச்செய்கிறது, வெட்டி கூறு வைச்சுடுவேன். என கொந்தளித்தான்.
பின்னர் குதிரைச்சவாரியில் நீண்ட நேரம் சென்று விட்டது,  மீண்டும் வேலைக்குத் திரும்புங்கள்.' என உத்தரவிட்டான்.

 மர அணை யகரியிடம் 'சுண்ணாம்பு, மண் மற்றும் உதிர்ந்த இலைகளைக் கொண்டு அணையை பூசுவோம், நீரின் வேகம் குறைந்த பின் எங்கள் குடிசைகளைக் கட்ட ஆரம்பிப்போம்' என்று தெரிவித்தார்.

 மீண்டும் வருவதாகக் கூறி கிளம்பினான் யகரி.
 '



நீங்கள் போனால் ரொம்ப உபயோகமா இருக்கும்,  எதையும் சேதப்படுத்தாதீங்க' என ஆயிரம் வாயன் கூறினான்.

 'எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்' என மரஅணை புன்னகையுடன் வழியனுப்பினார் .

'அருமையான பீவெர்கள்' என்றான் யகரி.

'கொஞ்ச பேரு ஓவரா கூவுறாங்க' என்றது இடிக்குட்டி.




அப்போது அவர்களுக்கு 'லிண்டென்  மரம்' எனும் சுட்டித்தனம் நிறைந்த பீவெர் குட்டி அறிமுகமாகிறது.


( Linden என்பது Tiliaceae குடும்பத்தைச் சேர்ந்த மரவகை)




 சிலநாள் கழித்து மீண்டும் பீவெர்களை பார்த்து வர இடிக்குட்டியுடன் கிளம்பினான் யகரி.
வழியில் பெரிய மரம் ஒன்றை வீழ்த்த முயன்று கொண்டிருந்த இரட்டைப்பல்லன் என்ற பீவெரை சந்தித்தனர். தன்னுடைய ஓய்வு நேரத்தில்  சிறந்த கலைப்படைப்பு ஒன்றை படைக்க இருப்பதாக  இரட்டைப்பல்லன் தெரிவித்தான்.

'இரட்டைப்பல்லன் மற்ற பீவெர்களிடமிருந்து வித்தியாசமாகக் காணப்படுகிறார்' என்றான் யகரி.

தான் ஒரு 'கலைஞன்' என்பதால் அப்படித் தெரியலாம் என்றான் இரட்டைப்பல்லன்.
 
அப்போது  'காட்டுரோஜா' என்ற பீவெர் இலைகளை சேகரித்துக் கொண்டிருப்பதையும், கரடி  ஒன்று அவளை தாக்க வருவதையும் கண்டனர்.




இட்டைப்பல்லன் மின்னல் வேகத்தில் மரம் ஒன்றை  வெட்டித்தர, அதன் மூலம் கரடியை தாக்கி விரட்டினான் யகரி.

காட்டு ரோஜா யகரிக்கு நன்றி சொன்னாள். 

அனைவரும் இரட்டைப்பல்லன் இன்னும் வேலைக்குத் திரும்பாதது பற்றி ஆயிரம் வாயன் கடுகடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அணை கட்டும் இடத்தை சென்றடைந்தர்.

இரட்டைப்பல்லன் யகரியின் சாகஸத்தை மற்றவர்களுக்கு விவரித்தான்.
 காட்டு ரோஜா யகரியும் இடிக்குட்டியும் தைரியமானவர்கள் என்று பாராட்டினாள்.  


அப்போது முரட்டுப்பலகை, காட்டு ரோஜா தம்பதியின் சுட்டி வாரிசான லிண்டென்  மரம் அவர்களை 'வல்லமை மிக்கவர்கள்' என்று கூறினான்.  காட்டு ரோஜா  லிண்டென்  மரத்திடம், 'எதையும் மிகைப்படுத்திச் சொல்லக்கூடாது' என்று கூறினாள்.

யகரி மர அணையிடம், வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதாக கூறினான். 
'இன்னும் சில நாட்களில் குடிசைகள் தயாராகி விடும்' என்று மரஅணை தெரிவித்தார்.

அப்போது ஆயிரம் வாயன் யகரி, இரட்டைப்பல்லன்,  இடிக்குட்டி  ஆகியோரை அணையின் கரையை வலுப்படுத்த மேலும் மரங்கள் சேரிக்க அழைத்தான்.




மரங்கள் அடர்ந்த பகுதியில் 'மரப்படுக்கை' என்னும் எப்போதும் குறட்டை விட்டுத்தூங்கும் இயல்பு கொண்ட பீவெரை சந்தித்தனர். ஆயிரம் வாயன் அந்த சோம்பறியை எழுப்பி விட்டும் அவன் மீண்டும் தூங்கி விடுகிறான்.

மரங்களை இரட்டைப்பல்லன் வெட்டித்தர,  அனைத்தையும் இடிக்குட்டி இழுத்து வந்தது. ஆயிரம் வாயன் மூவர் அணியின் திறமையை பாராட்டினான். 



திரும்பும் வழியில் மரப்படுக்கையை மீண்டும் சந்தித்தனர். மரக்கட்டைகளின் குவியலைக் கண்டு 'அற்புதம்' என குதுகலிக்கும் மரப்படுக்கை அதன் மீதே ஏறிப்படுத்து தூங்கி விட்டான். மரப்படுக்கையை திருத்த முடியாது என்று ஆயிரம் வாயன் அலுத்துக் கொண்டான். 
அந்த ஊர்வலத்தை காணும் கடமான் ஒன்று 'எதுவும் வளர்ச்சியை தடுக்க முடியாது' என்று கூறியது.

மரத்தடிகளை அணைப்பகுதியில் சேர்த்த பின் களைத்துப் போன யகரியை 'மறுநாளும் வருவாயா?' என ஆயிரம் வாயன் கேட்கிறான். யகரி பதிலளிக்கும் முன், காட்டு ரோஜா, பிர்ச் மரப்பட்டைகளை உண்ண. யகரியை அழைத்தாள். மறுநாள் வருவதாக கூறி கிளம்பினான் யகரி. வீடு திரும்பும் வழியில் இரட்டைப்பல்லன் இன்னமும் களைப்பின்றி வேலை செய்யும் சத்தம் கேட்கிறது. 

அப்போது எருமை விதையின் அம்பு ஒன்று அவர்களை உரசாத குறையாக கடந்து மரத்தில் பதிந்தது.
 
 அவர்களை வேட்டைக்கான விலங்கு என நினைத்து விட்டதாக தெரிவித்தான் எருமை விதை. 




' ஒரு உண்மையான வேட்டைக்காரன் வில்லை நீட்டும் முன் கண்களை திறந்து வைத்துக்கொள்வான்' என யகரி அவனை எச்சரித்தான் .


யகரியை 'இன்றும் விளையாட வரவில்லையே? ' என ஆச்சரியத்துடன் வினவினாள் வானவில்.

ஆற்றுப்பகுதியில் வேலை செய்ததாக தெரிவித்தான் யகரி, வேலையா? என வியந்தாள் வானவில்.




இடிக்குட்டியிடம் 'நமக்கு நல்ல உறக்கம் தேவை! காலையில் சீக்கிரம் எழ வேண்டும்.' என தெரிவித்தான் யகரி. அதை மறைந்திருந்து கேட்கும் வானவில் தானும் காலையில் சீக்கிரம் எழ தீர்மானிக்கிறாள்.

மறுநாள் அதிகாலையில் யகரி கிளம்பும்போது வானவில் தானும் வருவதாக கூறினாள். முதலில் தயங்கும் யகரி வானவில்லின் ஏமாற்றத்தை உணர்ந்து சம்மதித்தான்.

வழியில் பெர்ரி பழங்களை சேகரிக்கிறான் யகரி, காரணம் கேட்கும் வானவில்லுக்கு 'பிர்ச் மரப்பட்டைகளை விட இது நன்றாக இருக்கும்.' என்றான்.
 
ஆற்றை நெருங்கும்போது இரட்டைப்பல்லன் வேலை செய்யும் சத்தம் கேட்கிறது. புரியாமல் விழிக்கும் வானவில்லுக்கு யகரி, அணைப்பகுதியில் அனைத்தும் புரியும் என பதிலளித்தான்.



அணைப்பகுதியில் காட்டு ரோஜா  'லிண்டென்  மரம்'  காணாமல் போய் விட்டதாக கூறுகிறாள். 

  முரட்டுப்பலகையும் ஆயிரம் வாயனும் லிண்டென்  மரம் வழக்கமாக விளையாடும் ஆற்றின் கீழ்ப்பகுதிக்கு அவனைத்தேடி போயிருப்பதை தெரிந்து கொண்ட யகரி  அங்கே  விரைகிறான்.


அங்கு நிகழ்பவை புரியாமல் குழம்பும் வானவில்லுக்கு விவரங்களை எடுத்துக்கூறி,  தனக்கு விலங்குகளுடன் பேசும் திறமை இருப்பதை இரகசியமாக வைத்திருக்கும்படி சொல்கிறான்.

ஆற்றுப்பகுதியில் முரட்டுப்பலகையையும் ஆயிரம் வாயனையும் கண்டார்கள்,  லிண்டென்  மரம் இன்னும் அதிக தூரத்தில் இருக்கலாம் என்றான் ஆயிரம் வாயன்.  அவர்களை தாண்டி விரைவாக அருவிப்பகுதியை வந்தடைகிறது யகரியின் குழு. 



அங்கு லிண்டென்  மரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. நீர்வீழ்ச்சியில் லிண்டென்  மரம் மூழ்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வருகின்றனர்.





அப்போது யகரியின் குலதெய்வமான பெரும் கழுகார் அங்கு வருகிறார். அவர்கள் லிண்டென்  மரத்தை  இழக்கவில்லை என்றும்  ஆற்றுநீர் நிலத்தடியில் ஓடும் ஒரு குகைப்பகுதிக்குள் அவன் உயிரோடு இருக்கிறான் என்றும் தைரியம் அளித்துச் செல்கிறார்.




தாமதிக்காமல் நிலத்தடி ஆற்றுக்குள் பாய்ந்து செல்லும் யகரி லிண்டென்  மரத்தை ஒரு குகைப்பகுதியில் கண்டு பிடித்தான்.  அங்கிருந்து வெளியேற முடியாத வண்ணம் மேல் திறப்பு வெகு உயரத்தில் உள்ளது. வானவில்லும் இடிக்குட்டியும் கவலைப்படத் துவங்கிய நேரத்தில் யகரியின் குரல் கேட்டு  விரைந்தனர். யகரியின் யோசனைப்படி முரட்டுப்பலகையும் ஆயிரம் வாயனும் ஒரு பெரும் மரத்தை ஏணி போல் செதுக்கித்தர, அதன் உதவியுடன் லிண்டென்  மரமும் யகரியும் மேலேறி வந்தனர்.




லிண்டென்  மரம் தன் தந்தையிடம் 'வாழ்க்கைல இப்படி ஜாலியா இருந்ததில்ல அப்பா!' என்று உற்சாகமாக கூறினான். மேலும் அதே விளையாட்டை மீண்டும் விளையாட யகரியை அழைத்தான். இதனால் கடுப்பான முரட்டுப்பலகை லிண்டென்  மரத்தை குப்புறப் போட்டு நாலு சாத்து சாத்தினான். 
இதற்கு முன் இப்படி சாத்து வாங்கியதில்லை என்று கூறினான் லிண்டென்  மரம், வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் 'முதல்முறை என்பது உண்டு' என்றது இடிக்குட்டி.


காட்டு ரோஜாவும் மற்ற பீவெர்களும் லிண்டென்  மரம் நலமாக திரும்பி வந்ததில் மகிழ்வடைந்தனர். 

மூன்று நாட்களில் கிராமம் முழுமை பெற்று விடும் என்று மர அணை கூறினார். '
ஒருவழியாக நாம் பிர்ச் மரப்பட்டைகளை ருசிக்கலாம்' என்று கூறினாள் காட்டு ரோஜா.

 அப்போது பூம்ம்! என்று பெரும் சத்தம் எழுந்தது.  




அது என்ன?  என்றாள் காட்டுரோஜா

பூகம்பமோ?  என்றான் முரட்டுப்பலகை

இடியோசையோ?  என்றான் ஆயிரம் வாயன்

யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்ததே?  என்றான் மரப்படுக்கை

'பயப்பட வேண்டாம்! அது இரட்டைப்பல்லனின் வேலையாகதான் இருக்கும்' என்று கூறினான் யகரி


அடுத்த மூன்று நாட்களில் 
இரட்டைப்பல்லன் தன்னுடைய இரகசிய கலைப்படைப்பை உருவாக்கி  யகரி குழுவினரின் உதவியுடன் நதியில் சேர்க்கிறான். 




அணை மற்றும் குடிசைகள் கட்டும் வேலை முடிந்து  பீவெர்களின் கிராமம்  வசிக்க தயாராகி இருந்தது.

அப்போது இன்ப அதிர்ச்சியாக இரட்டைப்பல்லனின் கலைப்படைப்பு அங்கு வந்து சேர்கிறது. 

அதை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
லிண்டென்  மரம் அதில் ஏறி உற்சாகமாக விளையாடத் துவங்கினான்.

அணையை உருவாக்க உழைத்த உழைப்பாளிகளின்  நினைவுச்சின்னம் நதியின் அணைப்பகுதியில் பெருமையுடன்  நின்றது. அங்கே கொண்டாட்டங்கள் துவங்கின.

முற்றும்





*******

Linden tree




Beaver 

பழுப்பு நிற மென்மயிரும் அகன்ற தட்டையான வாலும் கூர்மையான பற்களும் உடைய, நிலம், நீர் இரண்டிலும் வாழும், ஆறுகளின் குறுக்கே மரக்கிளைகளைக் கொண்டு அணையிடும் விலங்கு வகை;

பீவெர் என்பது பகுதி-நீர்வாழ் (semi-aquatic) கொறி உயிரி (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது.

பீவெர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது இருப்பிடத்தினை அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் இவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவெர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.

உலகில் இரண்டாவது பெரிய கொறி உயிர் இதுவேயாகும். பீவெர்கள் தங்கள் வாழ்க்கைக்காலம் முழுதும் வளர்கின்றன. முதிர்ந்த பீவெர்கள் சுமார் 25 கிலோ வரை எடையுள்ளவை. பெண் நீர் எலிகள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன. இது பொதுவாக வேறு பாலூட்டிகளில் காணப்படாத தன்மையாகும்.

ஐரோப்பிய நீர் பீவெர்கள் ஒரு நிலையில் அவற்றின் உரோமத்துக்காகவும், ஒருவகை வாசனைத் திரவியத்துக்காகவும் வேட்டையாடப்பட்டு அழியும் நிலையிலிருந்தன. எனினும் பின்னர் மீண்டும் ஐரோப்பா முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்பொழுது, எல்பே (Elbe), ரோன் (Rhone) ஆகிய இடங்களிலும், ஸ்கண்டினேவியாவின் பகுதிகளிலும், பீவெர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. பவேரியா, நெதர்லாந்து ஆகிய இடங்களுக்கும் இவை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவை புதிய இடங்களுக்கும் பரவி வருகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், பீவெர்கள், 17 ஆம் நூற்றாண்டளவில் அழிந்துவிட்டன.

அமெரிக்க பீவெர் கனடாவின் தேசிய விலங்காகும். இது கனடாவின் ஐந்து சத நாணயத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அந்நாட்டின் முதலாவது தபால்தலையிலும் இடம் பெற்றிருந்தது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் இது தொல்லை கொடுக்கும் பிராணியாகக் கருதப்படுகிறது.
 

*******


Monday, January 24, 2022

பாலைநிலத்தின் தியாகிகள்

 



அந்த ஆண்டு வசந்தகாலத்தின் வருகை மெதுவாக இருந்தது. பனி சியோக்ஸ் நிலத்தை இன்னும் போர்த்தியிருந்தது. பசியும் குளிரும்  மக்களை  வாட்டி வதைத்தது, 
புற்களுக்கும் உணவுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு மக்களும் விலங்குகளும் பசித்த வயிற்றுடன் இருந்தனர்.

ஆண்டின் இந்நேரத்தில் பனி விலகி இருக்க வேண்டுமே  என சின்ன இடி திகைப்புடன் கூறியது.

எருமை இறைச்சியை உலர வைத்துச் சேமிக்கப்படும் பெம்மிகன் எனும் மதிப்பான உணவின் இருப்பு தீர்ந்து போயிருந்தது.


யகரியின் சியோக்ஸ் இனத்தினர் எருமை மந்தையின் இப்போதைய இருப்பிடத்தை அறிந்து வர, சாம்பல் ஓநாய் எனும் வீரனை அனுப்பி விட்டு தற்போதைய முகாமை எருமை மந்தையின் அருகில் அமைக்கத் தீர்மானித்துக் கிளம்பினர்.

எருமை விதை சின்ன இடியின் மீது சவாரி செய்ய விரும்புகிறான். ஆனால் அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் சின்ன இடி அவனை தூக்கி எறிகிறது. வானவில் சின்ன இடியை புகழ்ந்து பாராட்டிப் பேசி சின்ன இடி மீது சவாரி செய்வதில் வெற்றி பெறுகிறாள்.

அப்போது எருமை மந்தையின் இருப்பிடத்தை தேடிச் சென்ற சாம்பல் ஓநாய் திரும்பி வருகிறான். அங்கிருந்து ஒருநாள் பயணத் தொலைவில் வளமான எருமைக்கூட்டம் இருப்பதாக தெரிவிக்கிறான்.




இனத்தின் தலைவர் எருமைகள் பெரும் ஆவிகளின் பரிசு என்றும், வகோண்டா  தன் பலத்தை மக்களுக்கு அளிக்க அவற்றை உருவாக்குவதாகவும் கூறுகிறார். அன்றிரவு துணிச்சல் மிக்க வீரர்கள் எருமைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக நடனம் ஆடுகிறார்கள்.

மறுநாள் வீரர்கள் எருமை வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். வானவில் யகரியை விறகு சேகரிக்க அழைக்கிறாள். 



அப்போது யகரியை சந்திக்கும் பெரும் கழுகார் இம்முறை குளிர்காலம் சியோக்ஸ்களுக்கு நீண்டதாகவும்,  எருமை வேட்டையர்களின் பாதை கடினமானதாகவும் இருக்கும் என தெரிவிக்கிறார். மேலும் விபரம் அறிய யகரி முயலும் போது, மணல்வெளியின் மத்தியில் மேற்கொண்டு பேசுவோம் என கூறிச்செல்கிறார்.

வானில் மேகங்கள் கறுப்பதைக் காணும் யகரி புயலின் ஆரம்பத்தை உணர்கிறான்.




 எருமை வேட்டையர்கள் சாம்பல் ஓநாயை பின்பற்றி  காற்றினூடாக எருமை மந்தை காணப்பட்ட இடத்தை வந்தடைகிறார்கள். அங்கே மந்தை காணப்படவில்லை , அவற்றின் தடங்களும் புயல் காற்றினால் துடைக்கப்பட்டுள்ளன.
அப்போது புயலும் மழையும் வலுக்கிறது. இடி ஒன்று மரத்தின் மீது விழுந்து பற்றி எரியச் செய்கிறது. 

வகோண்டா கோபமாக இருப்பதாகவும், வேட்டைக்கு இது உகந்த நேரமில்லை என்றும் வகோண்டா சாந்தமடையும் வரை மந்தையை தேடுவதை நிறுத்தி விட்டு இரவைக் கழிக்க பாதுகாப்பான இடத்தை கண்டறிய முடிவு செய்கின்றனர்.


அன்றைய இரவு முகாமில் இடியும் புயலும் சூழ்ந்திருந்தது. பயங்கரமான இடிச்சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்து விழித்தான் யகரி. அவனுக்கு, சின்ன இடிக்கு இது மிகவும் மோசமான இரவாக இருக்கும் என்ற  சிந்தனை எழுந்தது. 

புயலுக்கும் இடிக்கும் நடுவில் சின்ன இடி இருக்கும் குதிரைப்பட்டிக்குச் செல்கிறான்.


********



நீ மிகவும் பயந்து விட்டாயா சின்ன இடி?

நான் இது போன்ற ஒரு புயலைப் பார்த்ததில்லை.

என்னாச்சு?

அமைதிப்பாறையாரே! இடிச்சத்தம் உங்களையும் எழுப்பி விட்டதா?

வயது ஏறும்போது உறக்கம் விட்டுச்செல்கிறது.

புயலைக்கண்டு உங்களுக்கு அச்சமில்லையா?

வானமும் பூமியும் நமது நண்பர்கள் யகரி. 
 
ஆனாலும் நம் வேட்டை வீரர்களைப்பற்றி கவலையாக உள்ளது.


அவர்களின் கஷ்டங்கள் இரவோடு முடிவுக்கு வந்து விடும். அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இருள் வேட்டையர்களின் தற்காலிக தங்குமிடத்தை சூழ்ந்திருந்தது.

புயல் அமைதியடைந்து வருகிறது. இப்போது நீ தூங்க முடியும் யகரி.

நான் வளர்ந்த பின் ஒருபோதும் இடிக்குப் பயப்பட மாட்டேன்.



********


உறக்கத்தில் யகரி இரு பெரும் கொம்புகளிடையே சின்ன இடி மீது செல்வது போன்று கனவு கண்டான். தகிக்கும் பாலைநிலத்தைக் கடந்து எருமை மந்தையை அடைகிறான். ஒரு வெள்ளை எருமை நீரில் நனைவதைக் காண்கிறான். எருமை மந்தை அவனைப் பின்பற்றி வருவதையும் கண்டான்.

காட்டெருமைகள் தன்னை நசுக்கப் போகிறது என அஞ்சிய வேளையில் கனவு கலைந்து விழிக்கிறான்.


கனவில் எருமை மந்தையைக் கண்டதை தாயாரிடம் கூறுகிறான் யகரி. மொத்த பழங்குடியினரும் அதைப்பற்றியே சிந்திப்பதாகக் கூறுகிறார் தாயார்.


வேட்டையாட சென்றவர்களுக்கோ பாலைப்பகுதி வரை தேடியும் எருமை மந்தையின் தடங்கள் காணக் கிடைக்கவில்லை. இம் மர்மத்தை விளக்க வகோண்டாவிடம் முறையிட தீர்மானிக்கிறார் தலைவர்.



அங்கிருந்து வெகு தொலைவில்  வேட்டைக்குழுவை தேடி வரும் யகரி,  எருமை விதை,  வானவில் குழுவினர் ஒரு குன்றின் மீது ஏறி நோட்டமிடத் தீர்மானிக்கின்றனர். குன்றை முதலில் அடையும் போட்டியில் எருமை விதையின் குதிரை வெற்றி பெறுகிறது.  சின்ன இடியிடம் 'நீ இன்னும் வேகமாக சென்றிருக்க முடியும்' என யகரி கூறும்போது ' வானவில்லுக்காக விட்டுக் கொடுத்ததாக சின்ன இடி கூறுகிறது.


அங்கிருந்து வேட்டையர்களின் இருப்பிடம் தெரியவில்லை,  ஆனால் முந்தைய இரவில் தான் கனவில் கண்ட எருமைக்கொம்புகளை ஒத்த பாறைகளைக் காண்கிறான் யகரி. அவ்வழியே எருமை மந்தையை தேடிச்செல்ல தீர்மானிக்கிறான். அவனைப்போகவிட்டு எருமை விதையும் வானவில்லும் முகாம் திரும்புகின்றனர்.


கொம்புகள் போன்ற பாறைகளை தாண்டி பாலைவனம் விரிந்துள்ளது. எருமைகளைக் கொண்டு வர பாலைவனத்தை கடக்க தீர்மானிக்கிறான் யகரி. 'பாலைவனத்தில் எருமைகளா?'  என்ற கேள்விக்கு கனவில் அவற்றை அங்குதான் கண்டேன் என்கிறான். வழியில் ஓநாய் ஒன்றும் பாலைவனத்தின் பயங்கரத்தைப் பற்றி எச்சரிக்கிறது.  எனினும் மன உறுதியுடன் முன்னேறுகிறான் யகரி.



பாலைவனத்தின் வெப்பம் தகிக்கத் தொடங்குகிறது. இருவரும் தாகத்தால் சோர்ந்து நம்பிக்கை இழக்கும் வேளையில் பெரும் கழுகார் வந்து மன உறுதியை விட்டுக்கொடுக்க இது தருணமில்லை என தேற்றுகிறார். முன்னர் வாக்களித்தபடி மணல்வெளியின் மத்தியில் சந்திப்பதை உறுதிப்படுத்திய பெரும் கழுகார் அங்கிருந்த சப்பாத்திக்கள்ளியின் நீரை பருக சொல்கிறார். இருவரும் தாகம் தீர்த்தபின் யகரியின் சிரமங்கள் இன்னும் தீரவில்லை என்றும் மறுநாள் அவன் எருமை  மந்தையைக் காண்பான் என்றும் பாறைச்சுவர் மட்டுமே அவன் தவிர்க்க வேண்டியதென்றும் புதிராக கூறிச்செல்கிறார்.



மறுநாள் பயணத்தை தொடரும் யகரியும் சின்ன இடியும் வேலி போல் அமைந்த பெரும்  பாறைப்பகுதி ஒன்றை வந்தடைகின்றனர். கடந்து செல்ல வழி இல்லாத அந்தப் பாறைச்சுவர் ஏறிக் கடக்கவும் முடியாத அளவு உயரமாக உள்ளது. என்ன செய்வதென யோசிக்கும்போது,  சின்ன இடி 'எந்த வேலியிலும் ஒரு திறப்பு இருக்கும்.' என்கிறது. அப்போது பெரும் கழுகார் கூறியதன் அர்த்தத்தை உணரும் யகரி அந்தப் பாறைச்சுவரின் திறப்பை தேடி சுற்றி வருகிறான். ஓரிடத்தில் நீர்வீழ்ச்சியை காணும் இருவரும் நீர் அருந்தி களைப்பாறுகின்றனர். நீர்வீழ்ச்சியை சிந்தனையுடன் நோக்கும் யகரிக்கு தன் கனவில் வெள்ளை எருமை ஒன்று நீரில் நனைந்தவாறு காட்சியளித்தது நினைவுக்கு வருகிறது. அதன் மூலம் நீர்வீழ்ச்சியின் பின்னே பாதை இருப்பதை கண்டு பிடித்து பாறைச்சுவரின் உட்பகுதிக்குள் சின்ன இடியுடன் நுழைகிறான். அங்கே புல்வெளியையும் கொழுத்த எருமைக்கூட்டத்தையும் காண்கிறான். அவனது குலதெய்வம் அவன் எருமைகளை கண்டடைவதில் வெற்றி பெற்று விட்டதை அறிவிக்கிறது.




அப்போது எருமை ஒன்று யகரியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்க வருகிறது. ஆனால் வெள்ளை எருமை ஒன்றால் யகரி காப்பாற்றப்படுகிறான். 'அஞ்சாதே!  இங்கே பயப்பட ஏதுமில்லை' என யகரியை தேற்றும் வெள்ளை எருமையிடம் தன் மக்கள் பசியில் வாடுவதை தெரிவிக்கிறான் யகரி.


தங்களின் உணவுப்பற்றாக்குறை காலத்தில் புகலிடம் தரும் அந்த வளமான மறைவிடம் பற்றி வேறு எவரும் அறியக்கூடாது என கூறும் வெள்ளை எருமை, மக்களுக்கு தாங்கள் அவசியம் தேவை என்றும்,  நல்ல வேட்டையர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக கொல்ல மாட்டார்கள் என்றும் கூறுகிறது. பின்னர் தன் கூட்டத்தினரிடம்  வசந்தகாலம் துவங்கி விட்டதை யகரி நினைவூட்டியதையும் இயற்கையின் விதிகளை நீண்ட நாட்கள் புறக்கணிக்க முடியாது என்றும் கூறி அன்றே மந்தைக்கூட்டத்தை  பயணத்தை துவங்க உத்தரவிடுகிறது.

யகரி தன் கனவில் கண்டதுபோல் எருமை மந்தை அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.


யகரியும் வெள்ளை எருமையாரும் பிரியாவிடை பெரும் தருணம் உணர்ச்சிகள் நிறைந்தது. 

யகரி, நம் பாதைகள் இங்கே பிரிகின்றன.  உன் பழங்குடியினரிடம் திரும்பு.  எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கள் விதிக்குக் கீழ்ப்படிகிறோம்!


வருகிறேன் வெள்ளை எருமையாரே! 


வாழ்த்துகள்! தைரியமான  குட்டி சியோக்ஸ்!

( அமெரிக்கா ஆக்ரமிப்புக்குள்ளான போது வெள்ளை எருமையாரின் நம்பிக்கை பொய்த்துப் போனதுதான் வரலாறு. ஆக்ரமிப்பாளர்களின் நவீன ஆயுதங்கள் எருமை இனத்தை அழிவின் விளிம்பு வரை அருகச்செய்து அழித்தொழித்தன.)

வகோண்டாவின் பதிலுக்காக காத்திருந்த சியோக்ஸ் தலைவர் எருமை மந்தை வருவதைக் காண்கிறார். அந்தப் பரந்த புல்வெளியில் இயற்கையின் உணவுச்சங்கிலி இணைப்பு பெறுகிறது.



 முகாமுக்கு திரும்பும் யகரி விரைவில் மக்களின் பசி தீரும் என்று அறிவிக்கிறான்.


முற்றும்.

*******



அமெரிக்கக் காட்டெருது அல்லது அமெரிக்க பைசன் (American bison) எனப்படுவது 19ம் நூற்றாண்டுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் பெருந்தொகையில் காணப்பட்ட காட்டெருது இன விலங்கு ஆகும். அமெரிக்க முதற்குடி குழுக்கள் பலவற்றின் உணவு, பொருளாதார, ஆன்மீக மூலதாரமாக அமைந்த இந்த விலங்குகள் ஐரோப்பியரின் வருகையின் பின்பு அவர்களால் பெருந்தொகையில் வணிகத்துக்காக வேட்டையாடப்பட்டு இன அழிவின் நிலைக்குத் தள்ளப்பட்டன. அண்மைக் காலத்தில் இவை சில தேசியப் பூங்காக்களில் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டு வருகின்றன. இன்று ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய விலங்கு இதுவே ஆகும்.

அமெரிக்கக் காட்டெருதுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பிரெய்ரிப் புல்வெளி, மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மேலும் செங்குத்தாக அமையாத மலைப்பாங்கான பகுதிகளிலும் வாழ்கின்றன.



How! - வோ!
Squaw - 
அமெரிக்க செவ்விந்தியப் பெண், அமெரிக்க செவ்விந்திய வழக்கில் மனைவி .

Tipi- கூடாரம்

Coyote- சிறு வட அமெரிக்க ஓநாய் வகை





*****



Monday, January 17, 2022

குல தெய்வத்தின் குரல்


 



யகரி  தைரியமும் தாராள குணமும் கொண்ட இளம் செவ்விந்திய வீரன்.

 'சின்ன இடி' அவனுடைய விசுவாசமான குதிரை,  அவனுடைய சியோக்ஸ் பழங்குடி இனத்தினர் பருவங்களுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். 


 யகரி அனைத்து விலங்குகளுடனும் பேசும் அற்புதமான திறன் உடையவனாக இருக்கிறான்.


யகரியின் சாகஸங்கள் அவன் சார்ந்துள்ள பழங்குடியின் வாழ்க்கை முறை மற்றும் சூழலைப் பற்றி அறிய தருவதுடன். சகிப்புத்தன்மை, நீதி, ஒற்றுமை, இரக்கம், மற்றும் நகைச்சுவையுடன் வாழ்க்கையைப் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.


******



யகரியும் பெரும் கழுகாரும்




 அன்றும் வழக்கம்போல் பெரும் கழுகாரை கனவில் சந்திக்கிறான் யகரி. தான் அவனது கனவில் வருவது அதுவே கடைசி முறை என்கிறார் பெரும் கழுகார். தான் அவரை மீண்டும் காண முடியாதா? என அதிர்ச்சியுடன் கேட்கும் யகரிக்கு,  'பெரும் கழுகாரான தன்னைப்போல யகரி நடந்து கொள்ளும்போது மீண்டும் சந்திக்கலாம்' என்று கூறி விடை பெறுகிறார்.



மறுநாள் முதல் பெரும் கழுகாரைப்போல தானும் மாற முயற்சிகள் மேற்கொள்கிறான் யகரி. அவனுடைய முயற்சிகள் வாத்து ஒன்றை 'இந்த அளவு தப்பிச்சதே பெரிய விஷயம்,  இதைவிடக் கம்மியான ஒன்னுக்கே மண்டைத்தொலி போயிருக்கும்' என மிரள வைக்கிறது.

பெரும் கழுகாரைப் போல ஆவது எப்படி எனும் அவனது கேள்விக்கு பதில் அளிப்பார் யாருமில்லை.

அப்போது அவனது தோழி வானவில் ஒரு சிறுத்தைக்குட்டியை கொண்டு வருகிறாள். யகரி அதை தொட முயலும்போது அது மிரண்டு போய் காட்டுக்குள் ஓடுகிறது. அந்தக் குட்டியைத் தேடிச் செல்லும் இருவரும் காட்டில் பெரிய சிறுத்தை ஒன்றை எதிர்கொள்கின்றனர்.



யகரி துணிச்சலாக  வானவில்லின் உதவியுடன் மரக்கிளை ஒன்றை விசையுடன் இழுத்து  விட்டு சிறுத்தையைத் தாக்கி இருவரும் தப்பிக்க வழி செய்கிறான்.

ஒருநாள் அவனது பழங்குடியினர் காட்டுக்குதிரைகளைப் பிடிக்கும்போது 'சின்ன இடி' எனும் குதிரை தப்பிச்செல்வதைக் காண்கிறான்.



அவனது தந்தையின் ஆலோசனைப்படி கழுகுகள் அடிக்கடி காணப்படும் குன்றுப்பகுதிக்குச் செல்லும் யகரி,  அங்கே சின்ன இடி என அழைக்கப்படும்  காட்டுக்குதிரை பாறைகளில் கால் சிக்கித் தவிப்பதைக் காண்கிறான். கருணையுடன் அதை விடுவித்து அனுப்புகிறான்.


அப்போது பெரும் கழுகார் அவனை நேரில் சந்திக்கிறார். அவன் சிறுத்தைக்கு எதிராக தைரியத்துடனும், காட்டுக்குதிரையின் துன்பத்தைக் கண்டு கருணையுடனும் நடந்து கொண்டதால்,  அவன் தன்னைப்போன்று நடந்து கொள்வதில் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்.



மேலும் தான் அவனது குல தெய்வமாகவும் பாதுகாவலராகவும் இருப்பதாகவும், அவனுக்கு மேலும் சாதனைகள் காத்திருப்பதாகவும் கூறி, அவரது அழகான இறகு ஒன்றை யகரிக்கு பரிசாக அளிக்கிறார். 


ஒருவழியாக பெரும் கழுகாரைப்போல தான் ஆகி விட்டதாக மகிழும் யகரி அந்த இறகை தலையில் சூடிக்கொண்டு தன் பழங்குடியினரிடம்  விரைந்து சென்று  பெரும் கழுகார் தன்னை நேரில் சந்தித்து இறகு அளித்ததைக் கூறுகிறான்.

ஆனால் அவனது மக்கள் யகரியின் கற்பனைகள் மடக்குதிரையின் வேகத்தில் பாய்ந்தோடுவதாகக் கூறி அவனது சொற்களை நம்ப மறுக்கின்றனர்.

அவனது தந்தையோ, அவனது இனத்தில் சாதனை செய்தவர்களே கழுகாரின் இறகை அணியலாம் என்றும்,  யகரி இன்னும் சாதனை ஒன்றும் நிகழ்த்தவில்லை என்றும் கூறி இறகை அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். 




மறுநாள் யகரியின் நினைவாற்றலைத் தூண்ட நீராவிக் குடிலும் குளிர் நீர் வைத்தியமும் பார்க்கப்படுகிறது. ஆனாலும் பெரும் கழுகார்தான் தனக்கு இறகு அளித்தார் என்பதில் யகரி உறுதியாக இருக்கிறான்.

தொடரும் நாட்களில் யகரி தன் இரகசியத்துடன் தனித்திருந்தான்.

'பெரும் கழுகாரைப்போல ஆகி விட்டதாக பெருமையுடன் இருந்தேன். யாரும் என்னை நம்பவில்லை' என சிந்தனையுடன் உலவிக்கொண்டிருந்த யகரியை திடீரென காட்டுத்தீ சூழ்ந்து கொள்கிறது.

காட்டுத்தீயிலிருந்து தப்ப ஓடும் யகரியை பெரும் கழுகார் சந்தித்து தன்னைப் பின்தொடரச் சொல்கிறார். நெருப்பும் புகையும்  சூழ்ந்திருக்க நெடுந்தூரம் ஓடும் யகரி களைப்புறும் வேளையில் பெரும் கழுகார் 'இது அவனுக்குப் புதிய ஒன்றின் ஆரம்பம் என்றும், அவனுடைய குல தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பின்தொடரும்படியும்' கூறுகிறார்.

ஒரு பாதுகாப்பான இடத்தை சென்றடையும் இருவரும் இரவை அங்கே கழிக்க முடிவு செய்கின்றனர்.



'தன் மக்கள் தன்னை ஏன் நம்பவில்லை'  எனும் யகரியின் கேள்விக்கு, அவன் இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, என்றும் ஒருநாள் அவனது இறகு அவனுக்குத் திரும்பக் கிடைக்கும் என்றும் பெரும் கழுகார் பதிலளிக்கிறார்.

விடிந்த போது பெரும் கழுகார் அங்கில்லை. யகரி வீடு திரும்பும் பயணத்தை மேற்கொள்கிறான்.



இரவில் ஓநாயின் ஊளைச்சத்தம் கேட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடும்போது கரடிக்கான பொறிக்குழி ஒன்றில் விழுகிறான். குழிக்குள் இறங்கத் துணியாத ஓநாய் அவனிடமிருந்து விலகிச் செல்கிறது. அந்த ஆழமான பொறிக்குழியையே அன்றிரவைக் கழிக்கும் பாதுகாப்பான இடமாகக் கொள்கிறான் யகரி.


காலையில் பயணத்தை தொடரும் யகரி தொலைவில் தூசுப்படலத்தைக் கண்டு அங்கே செல்கிறான்.

அங்கு காட்டுக் குதிரைகளின் கூட்டத்தைக் காண்கிறான். அவற்றினூடே அவன் முன்னர் காப்பாற்றிய 'சின்ன இடி' எனும் குதிரையும் இருக்கிறது. 

யகரி அதன் மீது ஏற முயலும்போது  அவனை உதறித் தள்ளும் சின்ன இடி, பின்னர் யகரியின் நட்பான அழைப்பை ஏற்றுக் கொள்கிறது.

அந்நேரத்தில் தனக்கு பிராணிகள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறன் இருப்பதை உணர்ந்து கொள்கிறான் யகரி.

சின்ன இடி மற்ற குதிரைகளுக்கு தன் புதிய நண்பனான யகரியை அறிமுகம் செய்கிறது. அக்குதிரைகளில் ஒன்று, யகரி  சின்ன இடியின் மீது அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, 'தான் சுதந்திரமாக இருப்பதையே விரும்புவேன்' என்கிறது. 'அக்குதிரைக்கு நட்பு என்பதன் அர்த்தம் இன்னும் புரியவில்லை' என்கிறது  சின்ன இடி.

அப்போது தொலைவில்  மக்கள் கூட்டம் செல்வதைக் காணும் யகரியும் சின்ன இடியும் அங்கே விரைந்து செல்கின்றனர். அருகில் சென்ற பின் அது தன்னுடைய பழங்குடி இனம்தான் என்பதைக் கண்டு கொள்கிறான் யகரி.

எவரும் பிடிக்க முடியாத சின்ன இடியை யகரி வசப்படுத்தியதால் அவன் சாதனை நிகழ்த்தி இருப்பதாகக் கூறி பெரும் கழுகார் யகரிக்கு பரிசாகக் கொடுத்த இறகை திருப்பி அளிக்கிறார் அவனுடைய தந்தை.

அந்த இறகை பெருமையுடன் தலையில் சூடிக் கொள்ளும் யகரி,  அனைத்தும் பெரும் கழுகார் கூறியபபடியே நடந்ததாக மகிழ்வடைகிறான்.

அவனுடைய இனத்தின் பயணம் தொடர்கிறது,  தன் பாதுகாவலரும் தன்னை தொடர்வதை  காண்கிறான் யகரி.

முற்றும்! 








கழுகு (eagle) என்பது அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும்.

யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.[1] இவற்றுள் இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடா நாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன.


********