Thursday, December 28, 2017

ஒரு புதிய நம்பிக்கை!

ஹோம்ப்ரே 2!

தமிழ் மொழிபெயர்ப்பு தரத்தின் மீதான ஒரு புதிய நம்பிக்கை !




முதல் பாகத்தை விடவும் அருமையான மொழிபெயர்ப்பு, வசனக்கோர்வை, குறைந்த எழுத்துப் பிழைகள்,  நெருடலற்ற வாசிப்பு என்று வெகு சிறப்பாக கவனமெடுத்து செய்யப்பட்டுள்ளது.
 ஈடுபாட்டுடன் உழைத்தவர்களுக்குப் பாராட்டுகள்

ஹோம்ப்ரே 2 ஐ ஆங்கில பதிப்பின் சில பக்கங்களுடன் நான் ஒப்பிட்டுப் பார்த்த வரை அருமையான தரத்தில்
அர்த்தம் மாறாமல், வாசிப்பில் இடறல் ஏற்படுத்தாமல் , கவனமுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


வசனங்கள் பல இடங்களில் அருமையாக வந்துள்ளது.




ஒவ்வொரு கட்டத்தையும் சிரத்தை எடுத்து அந்த கட்டம் வெளிப்படுத்தும் உணர்வுகளை தமிழில் அமைக்க முயற்சித்திருப்பது வாசிக்கையில் புரிகிறது.
 தரமான படைப்பை வழங்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு  பாராட்டுகள்.

உங்களைப் போன்றவர்களே மொழிபெயர்ப்பு
செய்யும் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுதாரணங்கள்.  தொடருங்கள்!

 சில இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும்,    ஹோம்ப்ரேவை ஹம்பர் என்றும், அனாவை இறுதியில் ஆன்னி என்றும், மங்கோலை  மொங்கோல் என்றும் பெயர்களை வெவ்வேறு  விதமாக மாற்றி உச்சரிப்பதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

(ஆங்கிலத்தில் அந்த இறுதிப் பகுதியில் "ஆன்" என்றும்  "மொகல்" என்றும் உள்ள போதும், தமிழில் பெயர் குழப்பங்களை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து)

உள் பக்க சித்திரங்களில் சென்ஸார் தேவையில்லை என்பதும் எனது கருத்து.
18+ என்று அயல்நாடுகளில் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுவது, இங்கு மனத்தடை ஏற்படுத்துவது புரிகிறது.




Saturday, November 11, 2017

கலையாத சித்திரங்கள்...

வாருங்கள் இனிய நண்பர்களே வணக்கம் !

உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றான "சிக்கன் வித் ப்ளம்ஸ் " எனக்கு நண்பர் இலுமியால் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாட்களின் எனது பரபரப்பான வாசிப்புகளின் வேகத்தில் இந்தப் படைப்பு எனக்கு இருள் அறையில் யானையை தடவிப் பார்த்த கதையாக இருந்தது. இசைக்கலைஞன் நசீர் அலியைப் பற்றிய எனது புரிதலும் கருத்துகளும்  எதிர்மறையாக இருந்தன. இன்று நிதானமாக வாசிக்கையில்தான் புரிகிறது, இது எப்பேர்ப்பட்ட காவியம் என்று... 

இந்தப்பதிவில்
 சிக்கன் வித் ப்ளம்ஸ்  கதை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.  பதிவை படித்தபின் கதையை வாசித்தால் பின்னர் கதையை வாசிக்கும்போது உங்கள் சுவாரஸ்யமும் தேடலும் குறையலாம். எனவே இந்தக்  கதையை இதுவரை  வாசிக்காதவர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி முதலில் வாசித்து விடுங்கள். 






பிறகு  இக்கதை குறித்து இரு சிறந்த வலைப்பூ எழுத்தாளர்களின் பதிவுகளை வாசித்துப் பாருங்கள்.

கனவுகளின் காதலரின் பதிவு :




Illuminati blog tamil பதிவு :




இனி நாம் பதிவை வாசிக்கலாம்...! 




என் வரவு வானத்திற்கு எந்த இறையையும் கொணரவில்லை
என் பிரிவும் அதன் மேன்மையை செழிக்கச் செய்யப் போவதில்லை
பிறப்பும் இறப்பும் இருத்தலின் ஒரு நிலையே
காரணங்களையும் கருத்துகளையும் காதுகளும் அறிந்ததில்லை

உமர்கய்யாம்


 டார் இசைக்கலைஞனான நசீர் அலி இசையை உயிராக கொண்டவன், அவனுடைய இசை நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் வருமானம்  குறைவானதாக இருந்தாலும், சராசரி மனிதர்களைப்போல வேலை செய்து சம்பாதிப்பதில் நாட்டமற்று இருக்கிறான்.


 'இரான்' எனும் இளநங்கையிடம்  மனதை பறிகொடுக்கும் நசீர் அலி, அவளது அன்பையும் பெறுகிறான். 

 இரானை மணந்து கொள்ள அவளுடைய தந்தையிடம் பெண் கேட்டுச் செல்கிறான்.

நசீருக்கு நிலையான வருமானமில்லாததை குறிப்பிட்டு பெண் தர மறுத்து விடுகிறார் இரானின் தந்தை.



காதலின் தோல்வியில் துவண்டுபோன நசீர் அலி இசையில் ஆறுதலை தேடுகிறான். அவனது  நிறைவுறா காதலின் நினைவுகள் அவனது இசையில் கரைந்து வெளிப்படுகிறது.



நசீரின் நிலை கண்டு கவலை கொள்ளும் அவனது அன்னை,  நசீரை சிறுவயதிலிருந்து ஒருதலையாக நேசிக்கும் 'நாஹித்' எனும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள்.

விருப்பமின்றியே அத்திருமண வாழ்வை மேற்கொள்ளும் நசீர் அலி நான்கு குழந்தைகள் பிறந்த பின்னும் குடும்பம் என்ற ஒன்றில் பற்றற்றவனாகவே இருக்கிறான்.


அவனை விரும்பி மணந்து கொண்ட நாஹித் தான் எண்ணியது போல வாழ்வு அமையவில்லை என்பதை உணர்கிறாள்,  குடும்ப பாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதான அவளது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாத நிலையிலிருக்கிறான் அந்த "இசைக்கலைஞன் "



அவர்களிடையே நடக்கும் வாக்குவாதம் ஒன்றில் நசீரின் டார் இசைக்கருவியை உடைத்து விடுகிறாள் நாஹித். துயரத்துடன் புதிய இசைக்கருவியை வாங்க செல்லும் நசீர் கடைத்தெருவில் இரானை சந்திக்கிறான்.  அவளிடம் பேச முயலும்போது,  அவள் நசீரை அடையாளம் தெரிந்து கொண்ட போதும், அவனை தெரியாதென மறுத்துச் செல்கிறாள். 


அவள் கண்களிலிருந்து மறையும் வரை நொறுங்கிப் போன இதயத்துடன் பார்வையை நீள விட்டிருந்தான் நசீர் அலி. அவனுடைய மனதில் அன்றுவரை உருப்பெற்றிருந்த காதற்சித்திரங்கள் மெல்ல கலைந்து கொண்டிருந்தன.




நசீர் புதிய இசைக்கருவியை இசைக்க முயலும்போது இரான் அவனை மறுதலித்துச் சென்றது நினைவில் எழுகிறது.  அதுவரை காதலின் நினைவுகளுடன் ஜீவனுள்ள இசையை மீட்டிக் கொண்டிருந்த அக் கலைஞனின் இசையில் துயரத்தால் அபஸ்வரம் எழுகிறது.



அபஸ்வரத்தின் காரணத்தை புதிய இசைக்கருவி மீது போடும் நசீர் வேறு வேறு கருவிகளை வாசித்துப் பார்க்கிறான். ஒவ்வொரு முறையும் இரானின் "உங்களை தெரியலையே " என்ற வரிகள் நினைவுக்கு வந்து  இசைக்கருவி மீதே பழி போட வைக்கிறது.

இறுதியாக தொலைதூர நகரொன்றில் உள்ள சிறந்த வாத்தியம் ஒன்றினை பற்றிக் கேள்விப்பட்டு அதை வாங்க செல்கிறான்.

அக்கருவியை இசைத்துப் பார்க்கும் முன்னாக கடைக்காரன் ஓபியத்தை அலிக்கு புகைக்கத் தருகிறான். ஓபியத்தின் போதை மயக்கத்துடன் அக்கருவியை வாசிக்கும்போது இரானைப் பற்றிய துன்ப நினைவுகளை தற்காலிகமாக நினைவில் கொள்ளாத நசீர் அந்த இசைக்கருவியில் திருப்தி கொண்டு அதை வாங்கி வருகிறான்.


மறுநாள் புதிய மனிதனைப் போல தன்னை தயார் செய்து கொள்ளும் நசீர் இசைக்கருவியை மீட்டத் துவங்குகிறான்.  

ஆனால்... ஆனால்...  அவனுடைய மனதில் அழியா சித்திரமாக பதிந்து விட்ட இரானின் வார்த்தைகள் அவனை துவளச் செய்கிறது.


இனி ஒருபோதும் அந்த சித்திரங்கள் அழியப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட நசீர் மரணத்தில் அமைதியை தேட தீர்மானிக்கிறான்.

அடுத்த எட்டு நாட்களில் மரணம் அவனை வந்தடைகிறது.

மரணம் தன்னை தேடி வரும் வரை காத்திருக்க தீர்மானிக்கிறான் நசீர்.   அவனுடைய மரணத்துக்குப் பின் அவனுடைய குழந்தைகளின் நிலை என்னாகும்? என்ற வாசகனின் வலி நிறைந்த கேள்விக்கு
முதல் நாளில் நசீரின்  செல்ல மகள் பர்சானாவின் எதிர்காலம் விவரிக்கப்படுகிறது.

 மரணத்திலிருந்து தப்பிக்க மீண்டும் ஒருமுறை இசைக்கருவியை வாசிக்க முயன்று தோற்றுப் போகிறான் நசீர்.

இரண்டாம் நாளில் நசீரின் சகோதரன் அப்டி நசீரை காண வருகிறான்.  நசீருக்கு குடும்பம் மீதுள்ள பொறுப்புகளை பற்றி அறிவுரை சொல்கிறான்.

அப்டியிடம் "தனக்கு அறிவுரை சொல்ல. உனக்கு என்ன தகுதி உள்ளது?" என அப்டியின் கடந்த கால பொறுப்பற்ற செயல்களை சுட்டிக் காட்டுகிறான் நசீர்.

தன் தவறுகளை உணரும் அப்டியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் நசீர் தன்னுடைய மரணத்துக்குப் பின் தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறான் . அன்றைய இரவில் தன் குழந்தைளைப்பற்றிய கவலைளின்றி தனக்குப் பிடித்த கனவுக்கன்னியின் கனவுகளுடன் நிம்மதியாக உறங்கினான்.


மூன்றாவது நாள் :

 நாஹித் நசீருக்குப் பிடித்த சிக்கனும் ப்ளம்ஸ் பழங்களும் சமைத்து எடுத்து வருகிறாள். அவனிடம் தனக்கு சிறு வயது முதல் இருந்த காதலை எடுத்துச் சொல்லி அவன் மனதை மாற்ற முயல்கிறாள். 

ஆனால் நசீருக்கு அவள் தன் வாத்தியத்தை உடைத்ததே மீண்டும் மீண்டும் நினைவில் எழுகிறது. தன் அபஸ்வரத்தின் ஆரம்பமாக அவளை கருதும் நசீர் அவளை வெளியேற சொல்கிறான்.  துயரத்துடன் சென்று விடுகிறாள் நாஹித்.

நான்காம் நாளில் நசீரின் கடைசி மகன் மொசாபரின் எதிர்காலம் விவரிக்கப்படுகிறது.

அவற்றைக் காண நசீர் அலி உயிரோடு இல்லை என்பது நசீருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

ஐந்தாம் நாள்

வாழ்க்கையில் யானையை இருளில் தடவிப் பார்த்த கதையாகதான் நமது புரிதல் இருக்கிறது. புரியாத எதையும் கேட்டுத் தெளிவு பெறுவதே முழுமையாகப் புரிய வைக்கும்.




ஆறாம் நாள் :

விதிக்கப்பட்டது எதுவோ அதுவே நடக்கிறது, அது நடந்தே தீரும்.




ஏழாம் நாள் :

தன்னுடைய தங்கைக்கு உதவி தேவைப்பட்ட நேரத்தில் உதவி, அந்த ஒரு விஷயத்திலேனும் தான் பயனுள்ளவனாக இருந்ததாக ஆறுதல் கொள்கிறான்.

எட்டாவது நாளில் இறந்து போகிறான்.

...முன் சென்றோரில் திரும்பியவர் எவரும்
 கடந்த பாதையை சொன்னாருமில்லை
வரும் செயல்களை தடுத்தாரும் இல்லை
முன் சென்றோரில் திரும்பினார் இல்லை....

உமர்கய்யாம்






இப்பூமி ஒரு ரகசியத்தை எமக்கு அறியத் தர முன் வருமானால், எமது கேள்வி இதுவாக இருக்கும்.

"இரான் நசீரை அறிந்து கொண்டும் அறியாதவளைப்போல வேடம் கொண்டதன் காரணம் என்ன? "


                 *******நிறைவு******

.....மெளனத்தில் ஏதோ சத்தம் - அடி
உன்னால் எனக்குள்ளே யுத்தம்.....

Friday, October 20, 2017

சொல்லில் குற்றமா? பொருளில் குற்றமா?

வென்டெட்டாவில் வெளியான மொழிபெயர்ப்புக்குறிப்புகளை பின்பற்றி மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதை "மெர்லினின் மந்திர டைரி "

இதன் ஒவ்வொரு கட்டமும் வசனங்கள் சரியாக அமைய வேண்டும் என்று கவனத்துடன்  செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தின் வசனம் தமிழில் அமைக்க கடினமாக இருந்தபோது, உதவி கேட்டுப் பெற்று சரியாக அமைக்கப்பட்டது.



கதையில் உதவிக்குறிப்புகள் தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிலும் ஒரு புதுமையாக, அடிக்குறிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்திலும் அதற்கான நட்சத்திரக்குறி அதே நிறத்திலும்  வழங்கப்பட்டுள்ளது.  வித்தியாசமாக சிந்தித்து செயல்படுத்திய மொழிபெயர்ப்பாளருக்கு பாராட்டுகள். 👏👏👏

மொழிபெயர்ப்பு புத்தகம்  சரியாக அமைய வேண்டும் என்பதற்காக  மீண்டும் மீண்டும் மாற்றங்கள் சொன்னபோதும் சளைக்காமல் ஈடு கொடுத்த அந்த ஆர்வத்தை இந்நாட்களில் காண்பது அரிது.

கதையின் வாசிப்பில்   எழுத்துப்பிழைகளோ கருத்துப்பிழைகளோ இடறி விடாமல் கவனத்துடன் முயற்சி எடுத்து செய்யப்பட்டுள்ளது. மீறி ஏதேனும் சொற்குற்றமோ?  பொருட்குற்றமோ?   தென்பட்டால் எமக்கு அறிய தாருங்கள். திருத்திக்கொள்ள முயல்கிறோம்.🙏

Thursday, October 19, 2017

கற்றுக் கொண்டால் குற்றமில்லை...

சென்ற பதிவின் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ள மொழிபெயர்ப்பு முறைகளில் மூன்றாவதை முயற்சித்துள்ளதாக ஹோம்ப்ரேயின் மொழிபெயர்ப்பாளர் கூறியபோது,
ஹோம்ப்ரே ஐ இன்னும் சிறப்பான தரத்தில் எதிர்பார்த்தேன். வாசித்தபின் சிறிது ஏமாற்றம் தான்.



வசனங்களை தமிழுக்கு ஏற்றபடி அமைப்பதிலும், அர்த்தங்கள் மாறிவிடாமல் மொழிமாற்றுவதிலும்   ஒரிஜினலில் இல்லாதவற்றை திணிக்காமல் இருப்பதிலும் இன்னும் அதிக கவனம் தேவை.




Hombre ஹம்பர் இல்லை, ஹோம்ப்ரே!

பொதுவாக ஒரு ஆணை குறிக்கும் ஸ்பானிய வார்த்தை! (நன்றி ஒரு நண்பருக்கு)



இன்னொரு விஷயம்,  வசனங்களை சீராக அமைப்பது.  முதல் பக்க வரிகள் சீராக அமைக்கப்படவில்லை என்பதை மீண்டும் வாசித்துப்பார்த்தால் தெரியும்.




👆இதில் விலங்கு  மிருகம் என்ற அர்த்தம்  வரவில்லை அல்லவா? வசனத்தின் முழு அர்த்தத்தை தமிழில் அமைக்க முயற்சி செய்யுங்கள்.






இங்கும் மிருகம்  என்பது சேர்க்கப்படவில்லை! ஒரு கட்டம் என்ன உணர்ச்சிகளுடன் விவரிக்கப்படுகிறதோ  அதை அர்த்தம் சிதையாமல் உணர்வுகள் மாறாமல் கொண்டுவர முயல வேண்டும்.





இதை "இங்க பாருங்கப்பா அந்த பன்னி காயப்பட்டுருக்கான்! ரொம்ப ரத்த சேதம்.  "

என்று அர்த்தம் சரியாக வரும்படி அமைக்கலாம்.  திறமையான மொழிபெயர்ப்பாளரால் இன்னும் மேம்படுத்தவும் முடியும் .




வார்த்தைகளில் விரசம் இருந்தால் கூட அர்த்தம் சிதையாமல் அதே நேரம் தமிழுக்கு ஏற்றபடி சற்று நாசூக்காக அமைக்கலாம்.

உதாரணமாக : மார்பை சப்பக் குடு என்பதை  "உன்னோட பாலை குடு " என்று அந்த வசனம் சொல்ல வருவது மாறி விடாமல் முயற்சிக்கலாம்.

இன்னும் ஒவ்வொரு கட்டமாக கவனித்து செய்திருக்க வேண்டிய விஷயங்களை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.   நீங்கள் கவனம் கொள்ள தவறிய விஷயங்களை புரிந்து கொள்ள இதுவே போதும் என நினைக்கிறேன்

முடிந்தவரை சிறப்பாக கொண்டு வர முயற்சி செய்துள்ளீர்கள்.

இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.




மொழிபெயர்த்தவர் ஒரிஜினல்படி காலியாக விட்ட இடத்தில் லெட்டரிங் செய்தவர் தன் "திறமையை" காட்டியுள்ளார்! இது சரியல்ல.

லெட்டரிங் செய்பவரின்  பொறுப்பு தனக்கு தரப்பட்ட மொழிபெயர்ப்பை அப்படியே வசனங்களில் சேர்த்து விடுவது மட்டுமே. அப்படியே  வசனங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்று தோன்றினால் மொழிபெயர்ப்பாளரிடம் விவாதித்து அவரது அனுமதி பெற்று  செய்யலாம்.


ஒரு கதையை நீங்கள் மொழிபெயர்த்தால் அது தரமாக வெளியாவதன் முழுப் பொறுப்பும் உங்களையே சேரும்.
உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் மொழிபெயர்ப்பில் ஒரு எழுத்தையோ, புள்ளியையோ கூட மாற்ற அனுமதிக்காதீர்கள்.

பலூனில் வசனம் போடப்பட்ட பின் அனைத்தும் சரியாக வந்துள்ளதா?  எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் உள்ளனவா என சரி பார்த்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து அதன்பிறகே வெளியிட அனுமதிக்க வேண்டும்.

நண்பர் இலுமியின் கருத்துகள் இங்கே மிகப் பொருத்தமாக அமைகிறது.

////ஒரு விஷயத்தை பொறுப்பெடுத்து நாம் செய்ய நினைக்கும் போது அதை பலரும் பல விதங்களில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைக்கவே முயற்சிப்பார்கள். அது மனித இயல்பு.
 அதை நடைமுறைப்படுத்த விட்டோம் என்றால் அது நம் தவறே அன்றி அவர்களுடையதல்ல.

 ஒரு மொழிபெயர்ப்பாளனின் பொறுப்பு இவ்விஷயங்களில் லெட்டரிங் செய்யும் ஆட்களின் பொறுப்பையும், ஆசையையும் விட பெரியது. ஒரு கதையை அதன் ஜீவனைக் கெடுக்காது கொடுக்க வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு. மற்றவர்களுடையதல்ல.

அந்த வகையில், உருப்படியான,  மொழிபெயர்ப்பை முன்னேற்றக் கூடிய ஆலோசனைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் என்பதற்காக எல்லாம் கதையை  காவு கொடுக்க முடியாது.

 மொழிபெயர்ப்பை பொறுத்த வரையில் முடிந்த அளவுக்கு சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உருப்படியான ஆலோசனைகளை தேடிப் பெறுங்கள். ஆனால் இது போன்ற திணித்தல் விஷயங்களில் உறுதியாக இருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் மற்றவர்கள் இடம் எடுக்கத் தான் செய்வார்கள்.

மொழிபெயர்ப்பில் அர்த்தத்தை சரியாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நம் சொந்த சரக்கை திணிக்க மொழிபெயர்ப்பு சரியான இடமல்ல.  நம் சொந்த சரக்கை காட்ட வேண்டும் என்றால் நாம் கதை அல்லது கவிதை எழுதிப் பழகலாம். விஜயனைப் போல அடுத்தவர் கதையில் கை வைக்கக் கூடாது.

 மொழிபெயர்ப்பு செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது என்றால் சில காலம் கிடப்பில் போட்டு விட்டு பின்னர் ஆர்வம் இருக்கும் போது செய்யுங்கள்.  ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று அவசர இலக்கு வைத்துக் கொண்டு அதை மனதில் வைத்து செய்தால் அது உங்கள் ஆர்வத்தையும் திறனையும் பாதிக்கும்.

இவ்வளவு மெனக்கெட்டு இங்கேயுள்ள அரைகுறைப் புரிதல் உள்ள ஆட்களுக்கு செய்ய வேண்டுமா, பேசாமல் அரைகுறையாகவே செய்து விட்டுப் போகலாமே என்ற எண்ணம் சில நேரங்களில் வரலாம். அதில் தவறில்லை. நீங்கள்
 எவ்வளவு முயற்சி செய்து செய்தாலும் இங்கே பெரிதாக நன்றியோ பாராட்டோ கிடைக்கப் போவதில்லை. அதனால் அதை எதிர்பார்த்து எதையும் செய்ய வேண்டாம்.

 இந்த உறுதி, தரம் மற்றவர்களுக்கானதல்ல, நமக்கானது, நாம்  செய்யும் கதைக்கானது. பனிஷர் செய்த போது வசனங்களை தமிழுக்கு ஏற்ப மாற்றிய போது அதன் அர்த்தமோ, ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணமோ கெடாத வகையில் தான் செய்தேன். இவ்வாறு செய்வது எளிதல்ல. ஆனால் இது தான் தகுந்த முறை.

   ஒரு காமிக்ஸ்  குழுவில் வெண்டெட்டாவில் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த பதில்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அவர்களின் மொழிபெயர்ப்பில் தரம் ஏன் இருப்பதில்லை என்று.
அந்தக் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக நாமும் இருக்க வேண்டாம். நம்மைப் பார்த்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சிலர் ஆசைப்படும் அளவுக்கு நம்முடைய மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.  இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதற்கான ஒரே பலன் உங்களைப் போல, மெர்லின் செய்தவரை போல சிலர் உண்மையை உணர்ந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதில் தான் இருக்கிறது.

 நமக்கு பிடித்தவற்றை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நாம் அனைவருமே இதை செய்கிறோம். இதில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிதாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால் இன்றைக்கு முன்னோடிகளான நாம் சரியாக செய்யாவிட்டால், பின்னர் தமிழ் வாசக மொழிபெயர்ப்பு இன்று இருக்கும் நிலையில் தான் இருக்கும். கொள்கை இல்லாது, குறிக்கோள் இல்லாது, காரணம் இல்லாது, தரம் இல்லாது கும்பல் சேர்த்து பொழுது போக்கிற்காக மொக்கை போடும் மோசமான மொழிபெயர்பிற்கு சரியான வரவேற்பில்லை என்று புலம்ப மட்டுமே உபயோகப்படும் ஒரு ஜந்துவாக.

 உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு செய்யுங்கள். ஆனால் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்ய வேண்டாம். ////
By illuminati blog tamil


Wednesday, August 2, 2017

காமிக்ஸ் என்பதும்.... காதல் என்பதும்....


எந்த ஒரு மொழிபெயர்ப்பையும் மூன்று விதங்களில் மொழிபெயர்க்கலாம் :

1. மூலத்திற்கு எந்த வித மரியாதையும் இல்லாது தன் இஷ்டத்திற்கு கதையை மொழிபெயர்ப்பது. இதுவே தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பின் வழக்கமான பாணி. 

2. மூலத்தை ஒட்டி, அந்த அர்த்தம் சரியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் வரிக்கு வரி ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்ப்பது.

3. மூலத்தை ஒட்டி, அதன் அர்த்தம் சிதையாமல் அதே நேரம் அது மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு ஏற்றவாறு வசன நடையை அமைத்து அதை படிக்க எளிதாக மொழிபெயர்ப்பது.

இதில் இருப்பதிலேயே மூன்றாவது மிகவும் கடினமானது.  ஆனால் இதுவே சரியான மொழிபெயர்க்கும் முறை.


ஒரு விஷயத்தை பொறுப்பெடுத்து நாம் செய்ய நினைக்கும் போது அதை பலரும் பல விதங்களில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைக்கவே முயற்சிப்பார்கள். அது மனித இயல்பு.
 அதை நடைமுறைப்படுத்த விட்டோம் என்றால் அது நம் தவறே அன்றி அவர்களுடையதல்ல.

 ஒரு மொழிபெயர்ப்பாளனின் பொறுப்பு இவ்விஷயங்களில் லெட்டரிங் செய்யும் ஆட்களின் பொறுப்பையும், ஆசையையும் விட பெரியது. ஒரு கதையை அதன் ஜீவனைக் கெடுக்காது கொடுக்க வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு. மற்றவர்களுடையதல்ல.

அந்த வகையில், உருப்படியான,  மொழிபெயர்ப்பை முன்னேற்றக் கூடிய ஆலோசனைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் என்பதற்காக எல்லாம் கதையை  காவு கொடுக்க முடியாது.

 மொழிபெயர்ப்பை பொறுத்த வரையில் முடிந்த அளவுக்கு சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உருப்படியான ஆலோசனைகளை தேடிப் பெறுங்கள். ஆனால் இது போன்ற திணித்தல் விஷயங்களில் உறுதியாக இருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் மற்றவர்கள் இடம் எடுக்கத் தான் செய்வார்கள்.

மொழிபெயர்ப்பில் அர்த்தத்தை சரியாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நம் சொந்த சரக்கை திணிக்க மொழிபெயர்ப்பு சரியான இடமல்ல.  நம் சொந்த சரக்கை காட்ட வேண்டும் என்றால் நாம் கதை அல்லது கவிதை எழுதிப் பழகலாம். விஜயனைப் போல அடுத்தவர் கதையில் கை வைக்கக் கூடாது.

 மொழிபெயர்ப்பு செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது என்றால் சில காலம் கிடப்பில் போட்டு விட்டு பின்னர் ஆர்வம் இருக்கும் போது செய்யுங்கள்.  ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று அவசர இலக்கு வைத்துக் கொண்டு அதை மனதில் வைத்து செய்தால் அது உங்கள் ஆர்வத்தையும் திறனையும் பாதிக்கும்.

இவ்வளவு மெனக்கெட்டு இங்கேயுள்ள அரைகுறைப் புரிதல் உள்ள ஆட்களுக்கு செய்ய வேண்டுமா, பேசாமல் அரைகுறையாகவே செய்து விட்டுப் போகலாமே என்ற எண்ணம் சில நேரங்களில் வரலாம். அதில் தவறில்லை. நீங்கள்
 எவ்வளவு முயற்சி செய்து செய்தாலும் இங்கே பெரிதாக நன்றியோ பாராட்டோ கிடைக்கப் போவதில்லை. அதனால் அதை எதிர்பார்த்து எதையும் செய்ய வேண்டாம்.

 இந்த உறுதி, தரம் மற்றவர்களுக்கானதல்ல, நமக்கானது, நாம்  செய்யும் கதைக்கானது. பனிஷர் செய்த போது வசனங்களை தமிழுக்கு ஏற்ப மாற்றிய போது அதன் அர்த்தமோ, ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணமோ கெடாத வகையில் தான் செய்தேன். இவ்வாறு செய்வது எளிதல்ல. ஆனால் இது தான் தகுந்த முறை.

   ஒரு காமிக்ஸ்  குழுவில் வெண்டெட்டாவில் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த பதில்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அவர்களின் மொழிபெயர்ப்பில் தரம் ஏன் இருப்பதில்லை என்று.
அந்தக் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக நாமும் இருக்க வேண்டாம். நம்மைப் பார்த்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சிலர் ஆசைப்படும் அளவுக்கு நம்முடைய மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.  இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதற்கான ஒரே பலன் உங்களைப் போல, மெர்லின் செய்தவரை போல சிலர் உண்மையை உணர்ந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதில் தான் இருக்கிறது.

 நமக்கு பிடித்தவற்றை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நாம் அனைவருமே இதை செய்கிறோம். இதில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிதாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால் இன்றைக்கு முன்னோடிகளான நாம் சரியாக செய்யாவிட்டால், பின்னர் தமிழ் வாசக மொழிபெயர்ப்பு இன்று இருக்கும் நிலையில் தான் இருக்கும். கொள்கை இல்லாது, குறிக்கோள் இல்லாது, காரணம் இல்லாது, தரம் இல்லாது கும்பல் சேர்த்து பொழுது போக்கிற்காக மொக்கை போடும் மோசமான மொழிபெயர்பிற்கு சரியான வரவேற்பில்லை என்று புலம்ப மட்டுமே உபயோகப்படும் ஒரு ஜந்துவாக.

 உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு செய்யுங்கள். ஆனால் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்ய வேண்டாம். 

by illuminati blog tamil

V for vendetta தமிழில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி.
https://www.mediafire.com/download/alvzwu8ft29a20x















Sunday, July 23, 2017

கொம்புக்குதிரை... கிராஃபிக் நாவல்களின் சிம்ம சொப்பனம்...!







அநேகமாக தமிழில் ஸ்கான்லேஷன் செய்யப்பட்ட முதல் காமிக்ஸ் இதுதான் என்று நம்புகிறேன்.  அல்லது சிக்கன் வித் ப்ளம்ஸ், ஜானி ப்ரீக்   என்று வேறு கதையாகவும் இருக்கலாம்.

கிரஃபிக் நாவல் என்றாலே டவுசரை நனைப்பவர்களுக்கு , இத்தொடர் ஒரு சிம்ம சொப்பனம்,,,

சில ஆண்டுகள் முன்பே கொம்புக்குதிரையின் அனைத்துப் பாகங்களையும் டவுன்லோட் செய்து வைத்திருந்த போதும் , அதை வாசிக்க ஆரம்பித்த போதெல்லாம், வேறு கதைகள் வாசிக்கக் கிடைக்கும் போது , கொம்புக்குதிரையை அந்தரத்தில்  விட்டு விடுவது எம்முடைய வழக்கமாக இருந்தது.

ஆக்ஷன், அதிரடி என்ற விறுவிறுப்பான கதைகளுக்கு பழகிப் போன என்னால்  கொம்புக்குதிரையின்  ஆழ்ந்த நுட்பமான படைப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை  என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமேதும் இல்லை.

இப்போதும் மேலோட்டமான புரிதல்தான் உள்ளது.  கதையின் நுனுக்கமான  விபரங்கள் புரியவில்லைதான் என்ற போதும் ,  மீள் மீள் வாசிப்புகள்  என்றேனும் ஒரு தெளிவான புரிதலை  தரும் என்று நம்புகிறேன்.

இத்தனை கடினமான படைப்பை  தமிழ் வாசகர்களுக்காக தன் நேரம், உழைப்பு, பொருள் என பிரதி பலன் எதிர்பாராது செலவழித்து மொழிபெயர்த்து அளித்த அன்பு நெஞ்சத்தை எவ்வளவு பாராட்டினாலும்  என் நெஞ்சம்  திருப்தி கொள்ளாது.

கடுமையான இந்த முயற்சியை எடுத்துச்சொல்ல சரியான உவமைகள் இல்லை. ஆனாலும்... எம்மால் முடிந்தது................


நன்றிகள் சார்!