Thursday, December 15, 2022

8,ஸ்டீல் மாளிகை படுகொலைகள்.

 


வேல்ஸ் 1971 ஸ்டீல் மாளிகை.

அன்றைய தினம் லியோனோராவிற்கு மிக கொடூரமாக துவங்கியது.  விழிகளில் ஒளியிழந்த இளநங்கை லியோனோராவின் குடும்பமே பணியாட்கள் உட்பட 'டேமியன்' என்ற அதீத பலமிக்க அரக்கனின் இரத்த வெறியாட்டத்துக்குப் பலியாகி இருந்தது.





கைது செய்யப்பட்ட டேமியன் மனநோயாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மனநோயாளிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறான். அங்கு டேமியன் எவரிடமும் எதுவும் பேசாதவனாக இருக்கிறான்.

ஆனால் பதினாறு ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் லியோனோராவின் பெயரை உச்சரிக்கும் டேமியன், மனநோயாளிகள் விடுதியில் இருந்து தப்பி விடுகிறான்.

மனநோய் விடுதியின் இலேசான மின்னோட்டம் கொண்ட மின்வேலியும்,  உயரழுத்த மின்சாரமும், துப்பாக்கித் தோட்டாக்களும், உயரமிக்க வழவழப்பான மதிற்சுவரும், அதில் பதிக்கப்பெற்ற கண்ணாடித் துண்டுகளும் அவனைத் தடுப்பதில் தோற்று விடுகின்றன.



அவனால் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சும் லியோரா டைலன்டாக்கை சந்தித்து டேமியனை கண்டுபிடிக்க பணியமர்த்துகிறாள்.




மனநோயாளிகள் விடுதிக்குச் சென்று மருத்துவர் பியர்ஸிடம் டேமியன் தப்பிய விதம் பற்றியும், டேமியனின் அதீத அசுர உடல் பலம் பற்றியும் விசாரித்து அறியும் டைலன், லியோனோராவை சந்திக்க ஸ்டீல் மாளிகைக்குச் செல்கிறார்.



 ஸ்டீல் மாளிகைக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு மருத்துவர் பியர்ஸ் ஹெர்பர்ட் லியோனோராவின் கணவர் என்றும் அவர்களுக்கு லிலித் என்ற மகள் இருப்பதையும் டைலன் தெரிந்து கொள்கிறார்.



அன்றைய இரவே ஸ்டீல் மாளிகையில் டேமியனின் தாக்குதல் நடைபெறுகிறது. அவனது தடத்தை தொடரும் டைலன் ஸ்டீல் மாளிகையின் கீழே பாதாள அரண்மனையில் டேமியனைக் கண்டு பிடிக்கிறார். அவன் கண்களில் நீர் வழிய லியோனோராவின் புகைப்படமொன்றை பார்த்துக் கொண்டிருக்கிறான்.




டைலன் டேமியனிடம் பேசி அவனை சரணடையச் செய்ய முயல்கிறார். ஆனால் அவரிடமிருந்து தப்பி வெளியேறும் டேமியன் பாதுகாவலர்களால் சுட்டு வீழ்த்தப் படுகிறான். 

இவ்வாறாக கதை ஒரு முடிவை அடைந்து விட்ட போதிலும் டைலனின் மனதில் ஏதோ ஒன்று பொருந்தாதது போல உறுத்துகிறது.



அவரது உள்ளுணர்வு விரைவிலேயே உண்மையாகியது. பியர்ஸ் ஹெர்பர்ட் லியோனோராவால் கொல்லப்படுகிறார். லியோனோராவின் வாக்குமூலத்திலிருந்து: டேமியனும் லியோனோராவும் காதலர்கள். லியோனோரா கர்ப்பமானதால் லியோனோராவின் தந்தை கருவை கலைக்கவும் டேமியனை தண்டிக்கவும் தீர்மானிக்கிறார்.

ஆத்திரத்தில் லியோனோரா தன் குடும்பத்தையே பணியாளர்கள் உட்பட தீர்த்துக் கட்டுகிறாள். ஆனால் அதிர்ச்சியில் அவளுக்கு பார்வையும் தான் செய்த கொலைகள் பற்றிய நினைவும் போய்விடுகிறது.

கொடூரக் கொலையாளியாக குற்றம் சாட்டப்பட்ட டேமியன் மவுனமாகி விடுகிறான்.

லியோனாராவின் பணத்தின் மீதான ஆசையால் கருவுற்றிருந்த அவளை திருமணம் செய்து கொள்கிறார் மனநல மருத்துவர் பியர்ஸ் ஹெர்பர்ட்.

டேமியனின் மரணம் லியோனோராவின் நினைவாற்றலை மீட்கிறது. தன் மீது சந்தேகம் கொள்ள துவங்கியிருக்கும் ஹெர்பெர்ட்டை கொன்று விட்டு தானும் டேமியனின் பிணத்துடன் எரிந்து போகிறாள்.


காதல், காமம், அந்தஸ்து என வினாடி நேர உணர்வுகளால் துவக்கம் பெறும் காலத்தின் நீண்ட சம்பவங்கள் லிலித் எனும் இளநங்கையை பரிதாபத்திற்குரிய அநாதையாக்கி விட்டு தன் ஓய்வற்ற ஓட்டத்தை தொடர்கிறது.

*****




இங்கே கிளிக்: Dylan thomas




No comments:

Post a Comment