Tuesday, January 17, 2023

16,ஆவியின் சாபம்!

 


19ம் நூற்றாண்டில் குரூர நெஞ்சமும் மாந்திரீகத்தில் ஈடுபாடும் கொண்ட முதலாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபு, விவியன் என்ற அழகியை வசியம் செய்து திருமணம் செய்து கொண்டார்.




ஆனால் வசியத்தின் விளைவு மறைந்தபோது, தனது கணவன் 
மற்றவர்களை துன்புறுத்தி மகிழும் ஒரு சாடிஸ்ட் என்பதை விவியானா அறிந்து கொண்டாள்.



விவியானா ஒரு தீக்கனவில் வீழ்ந்து விட்டாள், அதில் இருந்து மீள வழியற்றுப் போனது.




அப்போதிலிருந்து அவள் முழு கறுப்பு உடையில், தன்னை  மறைத்துக் கொண்டாள். அவளது தோற்றம் ஒரு கறுப்பு ஆவியைப் போன்றிருந்தது.

அவளுடைய ஒரே பொழுதுபோக்கு குதிரையில் சவாரி செய்வதுதான்.


குதிரை சவாரிக்கு சென்று வந்த ஒருநாளில் அவளுடைய இளமையின் வேகம் குதிரையை பராமரிக்கும் இளைஞனுடன் காமத்தை கட்டவிழ்க்கச் செய்தது.

அந்த துரோகத்தை கண்ணுற்ற பிளெண்டிங் பிரபு,  இளைஞனை கொன்று விட்டு விவியனை பாதாள அறையில் கட்டிப்போட்டு விட்டுச் சொன்னார்: 

"நீ அழகாக இருக்கிறாய் விவியானா!  மிக அழகு!  உன் அழகுக்கு நீ தகுதியற்றவள்."

இவ்வாறு சொல்லியவாறு,  பிளெண்டிங் பிரபு விவியானாவின் முகத்தின் மீது கொதிக்கும் உலோகத்தை ஊற்றினார்.


முகம் பொசுங்கி உயிருடன்  துடிதுடித்து மாண்ட அப்பெண்மணி மறுகணமே பேயாக எழுந்து பிளெண்டிங் பிரபுவை சபித்தாள்.

  "உனக்கும் உன் சந்ததிக்கும் இனி நானே மரணமாக இருப்பேன்"  என சாபமிட்டாள்.




அந்நிகழ்வுக்குப் பின் ஒரு இரவு, பிளெண்டிங் பிரபு பாதாள அறையில் தனது மாந்திரீக சோதனைகளில் ஈடுபட்டிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டு​​​​அவரது முகம் முற்றிலும் எரிந்து போய் அவருக்கு மரணம் சம்பவித்தது.  விவியனின் மரணத்தை ஒத்த மரணம்.



அவரது வாரிசான இரண்டாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபு குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனார். அவரருகில் கறுப்பு உடை அணிந்த ஒரு பெண்மணி குதிரையில் செல்வதை சிலர் பார்த்தனர். 



இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்: அநேகமாக குதிரையிலிருந்து விழுந்திருக்கலாம்... ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அவரது உடல் முழுதாக இருந்தது. ஆனால் தலை மட்டும் வெறும் மண்டையோடாக மாறியிருந்தது.


1988 ஜனவரியின் ஒர் நள்ளிரவில் தனது மூதாதையரைப் போன்றே குரூர மனம் படைத்த மூன்றாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபுவின் அறையிலிருந்து பயங்கர அலறல் சத்தம்  எழுந்தது.

மாளிகையின் பணியாளர்களான மிஸ் மில்ட்ரெட், அமாபெல், டெஸ்மாண்ட் ஆகியோர் அங்கு சென்று பார்த்தபோது,  பிரபுவின்  அறையிலிருந்து ஒரு கறுப்பு உடை அனிந்த பெண்மணியின் ஆவியுருவம் வெளியேறி சென்றதைக் கண்டனர்.

பிளெண்டிங் பிரபுவின் அறைக்கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்ததால் டெஸ்மாண்ட் மூலம் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.




அங்கே தனது இருக்கையில் மண்டைத் தோல் உரிக்கப்பட்ட நிலையில் பிளெண்டிங் பிரபு கோரமான மரணத்தை சந்தித்திருந்தார். 

அந்த அறையில் பிரபுவின் மண்டைத் தோலை உரித்த ஆயுதம் எதுவும் இருக்கவில்லை. மேலும் உள்ளே பூட்டப்பட்டிருந்த அந்த அறையிலிருந்து எவரும் வெளியேறுவதற்கான வழியும் காணப்படவில்லை.


பின்னர், முறையாக பராமரிக்கப்படாமல் காலத்தால் சிதிலமடைந்திருந்த பிளெண்டிங்ஸ் மாளிகையில், சந்ததி இன்றி மாண்ட மூன்றாம்  பிளெண்டிங் பிரபுவின் உயில் வாசிக்கப்பட்டது.




உயிலில் தன் உறவினர்களான, 

ஹானர் (அமெரிக்கா)
லோகன் (இலண்டன்)
பெட்டூலா (இலண்டன்)
பீட்டர் (ஸ்காட்லாண்டு)

 ஆகிய நால்வரும் ஏழு நாட்கள் பிளெண்டிங் மாளிகையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் இறுதியில் உயிருடன் பிழைத்திருப்பவர்களுக்கு இருபத்திரண்டு மில்லியன் பவுண்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.




இலண்டனில் டைலன்டாக்கை சந்திக்கும் 
பிளெண்டிங்கின் மருமகள் பெட்டூலா, அந்த அச்ச மாளிகையில் தான்  தங்கும்போது துணைக்காக டைலன் டாக்கை தன்னுடன் வரக் கோருகிறாள்.
.


அன்றைய இரவே பிளெண்டிங் மாளிகையின் பணிப்பெண் அமாபெல் கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் ஆவியுருவை கண்டாள்.

ஆவி தோன்றிய இடத்தில் காணப்பட்ட காலடித்தடங்களை தொடரும் டைலன்டாக்,  தடங்கள் வெளி செல்ல வழியற்ற ஓர் அறையில் மறைந்து விடுவதைக் கண்டார்.




மறுநாள் காலை உணவுக்கு வாரிசுதாரர்களில் ஒருவரான லோகன் வரவில்லை. அப்போது மாளிகையின் நிர்வாகியான மிஸ் மில்ட்ரெட்,  கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் கைகளில் லோகன் இருப்பதையும் அவனது தலை வெடித்துச் சிதறுவதையும்  கண்டு அலறினார்.

மற்றவர்கள் வந்து பார்த்தபோது லோகனின் அறை உள்ளே பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த அறை வெறுமையாக இருந்தது. லோகன் பூட்டிய அறையில் இருந்து மாயமாக மறைந்து போயிருந்தார்.




டைலன்டாக்கும் மாளிகையின் பணியாளர் டெஸ்மாண்டும் லோகனை தேடி பிளெண்டிங் மாளிகையின் பாழடைந்த அறைகளில் சுற்றி வந்தனர்.

அப்போது மாளிகையின்  வெளியே பனியில் கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் உருவம் தோன்றியது.



ஹானர் அந்த உருவத்தை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டாள். ஆனால் அந்த உருவம் திடீரென்று மறைந்து விடுகிறது. 




அந்த உருவம் முன்பக்கத்தில் கறுப்பு நிறமும், பின்பக்கத்தில் வெண்மை நிறமும் கொண்ட ஆடை அணிந்திருக்கலாம்,  துப்பாக்கிச் சூடு நடந்த உடன் தரையில் குப்புறப் படுத்து ஊர்ந்து சென்றிருக்க வேண்டும், அடர்த்தியாகப் பெய்து கொண்டிருந்த பனி  காரணமாக அது சட்டென்று மறைந்து விட்ட தோற்றத்தை அளித்திருக்க வேண்டும். என்று டைலன்டாக் அந் நிகழ்வின் மர்மத்தை ஊகித்தார்.

மறுநாள் தற்செயலாக முதலாம் பிளெண்டிங் பிரபு விவியனை வதைத்துக் கொன்ற பாதாள அறையை கண்டு பிடித்தனர். 



அதனுள்ளிருந்த மேடையில் காணாமல் போன லோகன் தலை மட்டும் மண்டையோடாகி விட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
 

 அப்போது மாளிகையின்  வெளியே கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் உருவம் குதிரை மீது தோன்றியது.



முதல் பாகம் முற்றும்...

முதல் பாகத்தின் மர்மங்களிற்கான விளக்கங்கள் நிறைந்த இரண்டாம் பாகம் விரைவில்... 






No comments:

Post a Comment