Friday, March 1, 2024

ஆரோ! ஆரிரரோ!



ஆரோ!
ஆரிரரோ!
ஆரமுதே!
ஆராரோ!

உலக உருண்டைக்குள் -
உதிப்பாரும் உதிர்வாரும்
உனக்கிணையாய் ஆவாரோ? 
ஈச்சம் பழச்சாற்றை -
ஈரிதழில் ஈவாரோ?

ஊரார் 
உளமெல்லாம் - வேலின்
கூரார் விழியழகால் 
களவாடிப் போவாரோ?
உறுகண் 
உறுகண் கண்டால் -
உன்போல் 
உடன் வந்து காவாரோ?

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

செயிர்கடைந்து கண்விழிகள் சிவப்பேறக் கனகனவன் -
உயிர் கடைந்து கோளரியாய் உறுமியவா! கேழ்வரகுப் - 
பயிர் கடைந்து குருவியெலாம் பசியாறும் கோகுலத்தில் - 
தயிர் கடைந்து பிழைக்கின்ற தனிக்குலத்தில் பிறந்தாயோ!

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ! 

தருப்பை விரலிடுக்கித் 
தவ வேள்வி வேட்பதற்கு -
நெருப்பை வளர்ப்போரும்
நெடுநாளாய் உன்னுடைய
இருப்பைத் தேர்ந்தாலும்
இருப்பிடத்தைத் தேடுகையில் -
கருப்பை குடிபுகுந்து 
கவுரவத்தைக் கொடுத்தவனே!

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ !

அழுக்கு நிலா என்றாலும்; 
அமுதத்தை எல்லியெலாம் 
ஒழுக்கு நிலா என்றாலும்; 
ஒரு நாள்தான் வாராமல் 
வழுக்கு நிலா என்றாலும்; 
வரதா! உன் வனப்பின் முன் 
இழுக்கு நிலா என்றாகி 
எழிலியிலே ஒளியாதோ?

ஆரோ!
 ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

கண்ணழகன் என்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணனையன் என்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணிறைந்து காண்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்;
கண்ணெடுத்துக் காண்பதனால்
கண்ணனெனப் பேர் வைத்தேன்!

ஆரோ ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

ஏடு மேய்ப்பதற்கு 
எழுத்தறிவு பூத்திருக்க; 
நாடு மேய்ப்பதற்கு 
நாற்காலி காத்திருக்க; 
வீடு மேய்ப்பதற்கு 
வைகுந்தம் வாய்த்திருக்க; 
மாடு மேய்ப்பதற்கு 
மனமிரங்கி வந்தாயோ?

ஆரோ! 
ஆரிரரோ! 
ஆரமுதே! 
ஆராரோ!

#ஸ்ரீ கிருஷ்ண விஜயம்
#கவிஞர் வாலி


No comments:

Post a Comment