Friday, March 8, 2024

உன்னைப்போல் செல்வனை நான்...

 



காற்றொரு பாட்டுப் பாட
 ககனமே விளக்கம் ஏந்த
 ஊற்றென நிலவின் சாறு
 உள்ளொளி பொங்கிப் பாய
 நூற்றிலோர் பூவைப் போல
 நுவலரும் முகத்தைக் காட்டி
ஆற்றல்சால் மைந்தன் தன்னை
அணைத்திருந்தனளே அன்னை! 

துல்லிய பட்டுப் போன்ற 
தூயவள் மரியாள் கையில் 
மெல்லிய பாலன் இயேசு 
விளக்கெனப் புன்னகைத்தான்
நல்லவர் உள்ளம் போல 
நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாதவாறு 
இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும்
மாணிக்கத் தொட்டில் தோற்கும்
 தூளி இல்லாத போதும் 
தூங்கினான் பாலன் இயேசு
 "வாழிய!" என்றார் தூதர் 
வணங்கியே நின்றார் ஆயர்! 
நாழிகை செல்லச் செல்ல 
நல்லொளி மேலும் பல்கும்!  

சோதிமணிப் பெட்டகமே 
சுடரொளியே யூதருக்கு
ஆதிமகனாய்ப் பிறந்த
அருந்தவமே தாலேலோ!

வானளந்த திருக்குமரா! 
மனிதகுல மருத்துவனே! 
தேனமுதத் திருவாயில்
சித்திரங்கள் தீட்ட வந்தாய்!

பல்லாண்டு பல்லாண்டு
பாலைவனம் போலிருந்து 
எல்லாமும் இழந்து வரும்
இஸ்ரேலை வாழ வைப்பாய்!

அந்நாளில் நூலோர்கள்
ஆன்றோர்கள் பெரியோர்கள் 
சொன்னபடி மீட்பதற்குத்
தோன்றி வந்தாய் தாலேலோ!

மாளிகையும் இல்லைகாண்
மஞ்சமில்லை என்றாலும்
ஏழைத் தொழுவில் வந்த
இறைமகனே தாலேலோ! 

இன்னின்ன காலமெல்லாம்
இவ்வாறு நடக்குமென
சொன்ன இறை வாக்கினர்க்குத்
தொடர்பான உதாரணமே!

தச்சனுக்குப் பிள்ளையென்றும்
தாயொருத்தி கன்னியென்றும் 
இச்சனங்கள் சொன்னாலும்
இறைவனது திருக்குமரா!

மாரியிலே மழை பொழிந்து
மக்களினம் வாழ வைக்கும் 
காரியம் போல் உன் தந்தை
காலத்தே அனுப்பி வைத்தார்

உன்னைப் போல் செல்வனை நான்
உலகெங்கும் கண்டதில்லை 
என்னைப்போல் ஏழையை நீ
எங்கேனும் கண்டதுண்டா?

போட்ட விதைமுளைக்கும்
பொன்னான பூமியிலே 
வாட்டமில்லாப் பயிராக
வந்து விளைந்தவனே!

நல்ல குறிகளெல்லாம்
நான் பார்க்கத் தோணுதையா
வல்லவராம் உன் தந்தை
மனதிலென்ன வைத்தாரோ!

காட்டுவழி போனாலும்
கள்ளர் பயம் ஆனாலும் 
கூட்டம் உனைத் தொடரும்
கோமகனே தாலேலோ!

ஆகாயப் பந்தலிலே
ஆயிரம் பேர் சுற்றி வந்து 
வாகான சீரளித்த
வரமே மணிமகனே!

மாணிக்கத் தொட்டிலுக்கு
வாய்க்காத பெருமையெல்லாம் 
ஆநிரைத் தொழுவினுக்கு
ஆரளித்தார் எங்கோவே!

எவ்விடத்தில் பிறந்தாலும்
எப்படித்தான் வாழ்ந்தாலும்
செவ்வானத் திருக்குமரன்
தேசமெல்லாம் புகழ்பெறுவான்  

நம்பிக்கை விசுவாசம்
நான் வைத்து இருப்பது போல் 
நம்பி உனைத் தொடர்வோர்
நாளெலாம் பெருகுவரே!

அன்பில் பிறந்தவனே
அருமைத் திருமகனே! 
என் வீட்டுப் பேரொளியை
ஏற்ற வந்த திருவிளக்கே!

இன்பத் திருநாளே
இஸ்ரயேலில் வரும் வரைக்கும் 
கண்மூடித் தூங்கிடுவாய்
காலமுந்தன் கையினிலே!  

#இயேசு காவியம்
#கவியரசு கண்ணதாசன் 
 

No comments:

Post a Comment