எனக்காகப் பிறந்தவளை
கண்டு பிடித்தேன்.
அவள் கண்ணசைவில்
ஒருகோடி கவிதை படித்தேன்.
என் பாதி எங்கே என்று
தேடி அலைந்தேன்.
அவளைப் பார்த்த பின்புதான்
நான் முழுமை அடைந்தேன்.
ஈருயிர் ஒன்றாய் - இனி
அவள்தான் என் தாய்.
வேப்பம்பூ உதிர்கின்ற
என் வீட்டு முற்றம் - அவள்
போடும் கோலத்தால்
அழகாய் மாறும்.
விண்மீன்கள் வந்து போகும்
மொட்டைமாடி - அவள்
கொலுசின் ஓசையினால்
சொர்க்கம் ஆகும்.
காற்று வந்து கதை பேசும்
கொடிக்கயிற்றில் - அவள்
புடவை அன்றாடம்
கூட்டம் போடும்.
காத்திருப்பாள் ஒருத்தி
என்ற நினைவு வந்து,
மனம் கடிகார முள்மீது
ஆட்டம் போடும்.
பாதரசம் உதிர்கின்ற
கண்ணாடி மேல்,
புதிதாக பொட்டு வந்து
ஒட்டிக் கொள்ளும்.
பழைய ரசம் - அவள்
கையால் பறிமாறினால்,
பழரசமாய் இனிக்கிறதென
பொய்கள் சொல்லும்.
பூக்கடைக்குப் போகாத
கால்கள் இரண்டும்
புதுப்பழக்கம் பார் - என்று
திட்டிச் செல்லும்.
ஆண்களுக்கும் வெட்கம்
வரும் தருணம் உண்டு - என்று
ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்.
#நா.முத்துக்குமார்
No comments:
Post a Comment