அணையா விளக்காட்டம்
அழகே நீ விழிச்சிருக்க,
துணையா தாயிருக்கா
தொந்தரவு வெளங்காம...
மேக இமை மூடியதால்
மேல் நிலவு தூங்கிருச்சு,
மோகமெனை வாட்டுதடி
மோகனமே தூங்காயோ...
உன் பசியை தீர்த்துக்கிட்டு
உறங்காம நீயிருந்தா,
என் பசிக்கு விருந்தேது
என்ன சொல்லி வருந்துவது...
கண்ணுறங்கு கண்மணியே
காலையிலே வெள்ளி வரும்,
இன்னும் நீ விழிச்சிருந்தா
இரவுக்கே கோபம் வரும்...
செல்லக்கிளி நீயுறங்கி
செண்பகத்த அனுப்பி வையி,
உள்ளபடி சொன்னா
உனக்கு ஒரு சொந்தம் வரும்.
************************************
தவமாய் தவமிருந்து
தரை மெழுகி கோலமிட்டு
வரமாய் பெற்ற மவன்
வாளெடுத்து வாராயோ!
கரடி உறங்கும் வனம்
காட்டானை தூங்கும் வனம்
கண்ணே நீ கடப்பாயோ
காடெல்லாம் சாய்ப்பாயோ!
சூரிய நதியோரம்
சொர்க்கமின்னும் போகையில
சுருட்டிப் பிடித்திழுக்கும்
சோம்பேறி முதலைகளாம்!
காடை கடக்கையில
கால் நோக நடக்கையில
கொத்தி விஷம் கொடுக்கும்
குணமில்லா வவ்வாலாம்!
மலை மேலே பசு மேய
மகிழம்பூ பாய் விரிக்க
மழை தங்கா பாறையிலே
மேல் உச்சி போவாயோ!
காக்கை விதை போட்டு
கால் பரப்பி வளர்ந்த மரம்
நீக்கி பார்ப்பாயோ
நீண்ட வழி காண்பாயோ!
கருவுக்குள் உரு போல
கண் மூடித் தவழ்வாயோ
கட்டை விரல் நனைய
காலாலே நடப்பாயோ!
புத்தி சொன்ன மகன்
புடம் போட்ட தங்க மகன்
புவியெங்கும் புகழ் பாடும்
பொன்னான புத்தமகன்!
ரெட்டைக்குகை புரிந்து
றெக்கை அடிப்பாயோ
ராஜன் தலை சுமந்த
ரத்தினத்தை காண்பாயோ!
தவமாய் தவமிருந்து
தரை மெழுகி கோலமிட்டு
வரமாய் பெற்ற மவன்
வாளெடுத்து வாராயோ!
*************************************
உளி பொளிந்து
சிதைப்பதால்தான்
சிற்பம் சிறக்கிறது.
இலையுதிர்த்த
மரங்களில்தான்
வசந்தம் பிறக்கிறது.
இழந்து பெறும்
வாழ்க்கையிலும்
ஏதோ சுகமொன்று
இருக்கிறது.
*************************************
நயனம் நிமிர்ந்து நீ
நோக்கிடும் திசைகளில்
பயணம் உன்னுடன்
பாதைகள் எங்கிலும்
என்றவன் சென்றபின்
என்னவோர் வாழ்வது?
பாதையில் நடக்கையில்
பாதியில் மழைவர
நாதமாய் நடந்தவன்
நிழலென மறையலாம்.
சென்றதை நினைவினில்
தேக்கியே தவித்திடல்
என்னதான் பயன் தரும்
எடுத்தெறி இன்றுடன்.
என் குடை விரித்து நான்
எங்குமே துணைவர
என்னுடன் தொடங்கிடேன்
இன்னுமோர் பயணமே!
************************************
#இளவயதில் மாத நாவல்களில் வாசித்து மனதில் பதிந்து விட்ட வரிகள்.
கொத்தி விஷம் கொடுக்கும்
ReplyDeleteகுணமில்லா வவ்வாலாம்!
Puriyala sir
இந்தப் பாடல் இடம் பெற்ற கதைப்படி புதையல் தேடிச் செல்பவர்கள் பல ஆபத்துகளை சந்திக்கிறார்கள். அவற்றில் வவ்வால்களின் தாக்குதலும் ஒன்று!
Deleteவவ்வாலுக்கு விஷம் உண்டா என்று தேடிப் பார்த்ததில் விக்கிபீடியா கீழுள்ளவாறு விளக்கம் தருகிறது.
வௌவாலின் கடியினால் ஏற்படும் வெறிநோய் (rabies)
வெறிநாய் கடியினால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகிய ராபீசு போலவே பிற விலங்குகளில் இருந்தும் இவ்வகை நோய் உண்டாகலாம். பூனை, நரி, ராக்கூன் மற்றும் வௌவால் மூலமாகவும் இந்நோய் பற்றிக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் காட்டேரி வௌவாள் என்று அழைக்கப்படும் ஒரு வகை வௌவாள்கள் வாழ்கின்றன.அவை ரத்தம் குடிப்பவை ஆகும்.அந்த வௌவால்கள் காட்டு விலங்குகள், மிருகங்கள், ஆடு மாடுகள்,சில நேரங்களில் மனிதர்களின் இரத்தத்தையும் குடிக்கும்.காட்டேரி(வாம்பயர்) கதைகள் இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.
Thanks for the info sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete